Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கேட்டதை அருளும் பங்காரு காமாட்சி

தஞ்சை நகரத்தின் மையத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது. காஞ்சியிலிருந்து அம்பிகை எப்படி தஞ்சைக்கு வந்தாள் என்பதே சுவாரசியமானது. இதைப் பார்ப்போம் வாருங்கள்.

காஞ்சி காமாட்சி உற்பவித்த விதமும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அநேக லீலைகளும் அவளருளாலே தான் நிகழ்ந்தது. மன்மத தகனம் செய்த ஈசனை, மீண்டும் காமமுற்றவனாக்கச் செய்தவளும், குமார சம்பவம் எனும் திருக்குமரனின் அவதாரத்தை நிகழச் செய்தும், பந்தகாசூரனை வதைத்தவளுமான லலிதா மகாதிரிபுரசுந்தரியும் ராஜராஜேஸ்வரியான காமாட்சி காஞ்சிதனில் அமர்ந்த காலமது. அள்ள அள்ள சுரக்கும் கேணிபோல, அருள் வெள்ளத்தை இறைத்து இறைத்து வற்றாத வடிவினளாக மாறிய புராண நேரம் அது.

ஆயினும் அழகுத் திருமுகம் இன்னும் இரண்டு தேவிகளை தன்னிலிருந்து தோற்றுவிக்கும் அற்புத நேரம் நெருங்கியதை அவள் உணர்ந்தாள். லீலைகளுக்கு முடிவு கட்ட மனம் வரவில்லை போலும், அதனால் ஏகம்பனும் உடனிருப்பதாக இசைந்தார். பிரம்மனுக்கும் அவர்கள் இருவரையும் சேர்ந்து தரிசிக்கும் ஏக்கம் அடக்க முடியா ஆவலாக துடித்துக் கொண்டேயிருந்தது.

அது கிருதயுகத்தின் தர்மம் தழைத்தோங்கிய காலம். சுவேத வராஹ கல்பம், ஏழாவது மன்வந்திரத்தில் ஸ்ரீ முக ஆண்டு நடைபயின்ற நேரம். கார்த்திகை மாதமொன்றில் பூரநட்சத்திரம் வானில் ஒளிர்ந்தது. பொன்னார் மேனியனான ஈசனைப்போல தங்கநிறம் வானத்தை வியாபித்திருந்தது. காமாட்சி அன்னையின் திருமுகம் கருணைசூழ் மேகமாக மதர்த்துக் கிடந்தது. முன்பு தபஸ் காமாட்சியை எப்படி மூலவள் தன் நெற்றிக் கண்களிலிருந்து உற்பவித்தாளோ அப்படியே வேறொரு சக்தியும் அவளுக்குள் திரண்டு வந்தது. நெற்றிக் கண்கள் அருளோடு ஒளியையும் பாய்ச்சியது. ஜோதி வடிவினளாக மஞ்சள் வெயில் நிறத்தினளாக தகதகக்கும் தங்க மேனியோடு அந்த ஜோதி விளங்கியது. ஒளி வடிவினள் இப்போது உருவம் பெற்றாள். தாமரைபோன்ற இரு கண்களும் பனித்து கருணையைப் பொழிய, இரு புஜங்களோடும், வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும் இருந்தது. த்ரிபங்க தாரியாக தனுர் பங்க ஒடிப்பு எனும் மூன்று வளைவுகளோடு வில்போன்று வளைந்து ஒயிலோடு திகழ்ந்தாள்.

அழகு அவளிடம் காடாகச் செழித்திருந்தது. ரத்தினக் குண்டலங்கள் காதுகளில் ஒளியைச் சிந்தியபடி இருந்தன. தங்க நிறத்தவளைக் கண்ட நான்முகனான பிரம்மா பேரானந்தமுற்றார். காமாட்சியும் இவளின் பிரதிபிம்பத்தை இதே அச்சாக நீயே படைத்துவிடு. அவளே வருஷந்தோறும் புதுமணப் பெண்ணாக வலம் வரட்டும் என்றாள். அசலாக உதித்தவள் மீண்டும் சிவமாகிக் கலந்தாள்.

சொர்ணமயமான தங்க காமாட்சியை பிரம்மா செய்தார். ஆனந்த அழுகையோடு தொழுதார். சலிப்பூட்டாத அவளின் வழிபாட்டை தொடர்ந்தவர் பங்குனி மாதம் காஞ்சி ஏகாம்பரத்தில் தவமிருக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கு சாஸ்திர பூர்வமாக விவாகம் செய்வித்தார். திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவர்ண காமாட்சியை த்ருவம் எனும் அசையா மூர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அபிஷேக ஆராதனைகள் முடிந்தவுடன் ஒரு தாமரை மலரை ஆகாசத்தில் வீசி எறிந்தார். வானம் தொட்ட தாமரையினின்று ஆகாசபூபதி என்றொருவன் வெளிப்பட்டான். ஆண்டுதோறும் அன்னையின் திருக்கல்யாணத்தை நிகழ்த்து என அன்பாணையிட்டார். மெல்ல நகர்ந்து சத்திய லோகம் ஏகினார்.

காஞ்சியில் கால்படக் கூடாத விசேஷ இடமான காயத்ரி மண்டபத்தில் பாதம்பட்ட பாவம் அவரை பாடாய்படுத்தியது. கண்களால் அருள்பாலிப்பவள் அவரின் கண்களை ஒளியிழக்கச் செய்தாள். பிரம்ம பத்தினியான சரஸ்வதி கவலையுறாதீர்கள். காமகோட்டத்தில் காலை வைத்தால் ஏற்படும் பாவம் சொர்ண காமாட்சியை தரிசித்தால் தீரும் என்று ருத்ரயாமள தந்திரத்தை எடுத்துக்காட்டி பேசினாள். தெய்வமும் சாஸ்திரத்தை அனுசரித்துப்போவதை எண்ணி தேவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.

ஏனெனில் சொர்ண காமாட்சியான இந்தப் பிராட்டி மூல காமாட்சியின் தேஜஸும், ஸ்ரீ சக்ர காமாட்சியின் சக்தியும், தபஸ் காமாடியின் தவத்திறனும், பிலாகாசம் எனும் அருவ பெருஞ்சக்தியின் திருவருளும் இந்த ஒருருவான சொர்ண காமாட்சியில் ஒரே நேரத்தில் துலங்கின. ஹிமவானுடைய புத்திரியாக இவள் அவதரித்ததால் மட்டும் இவளுக்கு ஹைமவதி என்று பெயரில்லை. ஹேமம் எனப்படும் பொன் பொலியும் மேனியளாக விளங்குவதால் ஹேம காமாட்சி என்றழைக்கப்பட்டாள்.

குதூகலமாக எல்லா பூஜைகளையும் ஏற்றாள். தொடர்ந்து எல்லா திக்கும் நோக்கியபடி இருந்தாள். காலதேவன் யுகங்களை புரட்டி மடித்து வேறொரு யுகத்தை விரித்துக் காட்டினான். கலியுகத்தை தொடங்கியது. ஆதி சங்கரர் காமகோஷ்டத்தை சாந்த கோட்டையாக்கி சிவத்தோடு கலந்தார்.

சொர்ணகாமாட்சி வரலாற்றுப் பேரேடுகளில் சில பக்கங்களை எல்லோரையும் புரட்டும்படி செய்யும் காலம் நெருங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் உச்சிக் காலம். அந்நியதேசப் படையெடுப்பாலும், வேற்று மதத்தினராலும் வட இந்தியாவும், தென் இந்தியாவும் ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது. திருக்கோயில்களின் விக்ரஹத்தில் ஏதுமில்லை அதை தூக்கியெறியுங்கள். உங்களின் வேத நூல்களை தீயிலிட்டு பொசுக்குங்கள் என இந்து மதத்தின்மீது கோரத் தாண்டவமாடினர், அந்நிய நாட்டினர். கோயிலுக்குச் சொந்தமான தங்க விக்ரஹங்களையும், வைர கிரீடங்களையும் கொள்ளையடித்தனர். மக்கள் துடிதுடித்துப்போயினர்.

காஞ்சிக் கோயிலுக்கும் அந்தகதி வந்துவிடுமோ என்று அஞ்சினர். மஞ்சள் ரூபிணியான சொர்ண காமாட்சியை விஜயநகர மன்னர்கள் தெலுங்கில் பங்காரு காமாட்சி என்று அழைத்தனர். அவளும் அவர்களுக்கருகே செல்லலாம் திருவுள்ளம் பூண்டாள். ஆதிகாமாட்சியும் ஆஹா... என்றாள். சோழதேசத்தின் நெல்வயல்கள் தங்கமுலாம் பூசியதுபோன்று செழித்துக் கிடந்தது. தங்க பங்காரு காமாட்சியும் அங்கேயே சென்று தங்கலாம் என்று உறுதி பூண்டாள்.

தஞ்சை மராட்டிய மன்னனான ஏகோஜியின் ஆட்சியில் இருந்தது. 1737ம் ஆண்டு வாரிசு இல்லாது ஏகோஜி உயிர்நீத்தான். 1739ம் வருடம் பிரதாப சிம்மன் அரியணை ஏறினான். அப்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746&1783) மகிழ்ச்சியுற்றார். பிரம்மனால் பிரதிஷ்டை செய்ததாயிற்றே என கண்கலங்கினார். நிலவறையில் சொக்கத் தங்க காமாட்சியை பத்திரமாக பாதுகாத்தனர். ஒரு குழு பீடாதிபதியுடன் கோயில் ஸ்தானிகர்கள் சொர்ண காமாட்சியை கையில் பத்திரமாக சுற்றி எடுத்துக்கொண்டு கண்களில் நீர் கொப்பளிக்க காஞ்சியைவிட்டு வெளியேறினர்.

சில ஆண்டுகள் செஞ்சியிலும், உடையார்பாளையம் ஜமீன்தாரர்களின் பேரன்பும், ஆதரவாலும் சுவர்ண காமாட்சியோடு ஸ்தானிகர்கள் நிம்மதியோடு பூஜித்தனர். தஞ்சை மன்னரின் நெருங்கிய நண்பரும் அனக்கடி மிராசுதாரரும் சங்கராச்சாரியரை வரவேற்று சில காலம் தங்க வைத்தார். பிரதாபசிம்மன் சுவர்ண காமாட்சி வருகிறாள் என்றவுடன் அகமகிழ்ந்தான். ஓரிடத்தில் பிரம்மன் நிறுத்திய த்ருவம் எனும் சொர்ண காமாட்சி இப்போது எல்லா துருவங்களுக்கும் பயணித்து அருளை இரைத்துக் கொண்டே நாகூர், சிக்கல், திருவாரூர் விஜயபுரம் வழியாக தஞ்சையில் தன் பூப்பாதம் பதித்தாள். தஞ்சை பெருவுடையார் அருவமாக பரவசப்பட்டார்.

கிருஷ்ணா