Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழில் செழிக்கத் துணை நிற்கும் ஆயுத பூஜை!

``செய்யும் தொழிலே தெய்வம்’’ என்பதற்கு ஏற்ப சிறு தொழில் செய்பவர்கள் முதல் பெரும் தொழில் செய்பவர்கள் வரை அவரவர் செய்யும் தொழிலே தெய்வமாக கருதப்படுகிறது. அந்த தொழில் என்னும் தெய்வத்தை நாம் போற்ற வேண்டாமா? வணங்க வேண்டாமா? நிச்சயம் வணங்கியே ஆகனும். தினமும் வணங்குவது சாலச்சிறந்தது என்றாலும், நிதானமாக, ஆர அமர வணங்கப்படும் நாளே ஆயுத பூஜை தினம்! ஆயுத பூஜை அன்று, நம் வாழ்வை மேன்மையடைய செய்த தொழில் சார்ந்த கருவிகள், சாதனங்கள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபடுவது முக்கியம். வீட்டிலும் தொழில் நிறுவனங்களிலும் எளிமையாகச் செய்யலாம்.

ஆயுத பூஜை அன்று செய்ய வேண்டியவை

வீடு, தொழில் இடத்தைச் சுத்தம் செய்யுங்கள். பூஜை அறை மற்றும் வாசலை நன்றாகத் தூய்மைப்படுத்துங்கள். வாகனங்களைச் சுத்தம் செய்து பூஜைக்கு வையுங்கள். தொழிலில் பயன்படுத்தும் கருவிகள், இயந்திரங்கள், கணினி, லேப்டாப் போன்றவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.

* மாணவர்கள் புத்தகங்கள், நோட்டுகள், எழுதுகோல்கள் ஆகியவற்றை வைத்து வழிபடலாம்.

* விவசாயிகள் விவசாயக் கருவிகளை வைத்து பூஜை செய்யலாம்.

* தொழிலாளர்கள் தங்கள் தொழில் கருவிகளுக்கு சந்தனம், குங்குமம் வைத்து வழிபடலாம்.

பூஜைக்கான இடத்தில் கோலம் போடுங்கள். கருவிகளின் மீது சந்தனம், குங்குமம் இடுங்கள். மலர் மாலை அல்லது பூக்களால் அலங்கரிக்கலாம். வாழை, தேங்காய், பழங்கள் போன்றவற்றை நிவேதனமாக வைக்கலாம். மேலும், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளியோதரை, தேங்காய், பால், வெல்லம், கொழுக்கட்டைபாயசம், அப்பம், அதிரசம், லட்டு போன்றவற்றையும் நிவேதனம் செய்யலாம். மிக முக்கியமாக, பொரி, கடலை, சுண்டல் (வெள்ளை சுண்டல் / கொண்டைக்கடலை சுண்டல் / பச்சைப்பயறு சுண்டல்), சர்க்கரைப் பொங்கல், அவல், போன்றவற்றை நிவேதனமாக படைப்பது சிறந்தது. விநாயகர், சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் தங்கள் குலதெய்வத்தை வழிபடலாம்.

தொழில் சிறக்கவும், தடைகள் நீங்கவும் இறைவனைப் பிரார்த்தித்து “ஓம் சரஸ்வதியை நமஹ”, “ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ” போன்ற மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்யலாம். வேலை செய்யும் கருவிகளை வெறும் பொருளாகப் பார்க்காமல், அவை நமக்கு வாழ்வாதாரம் தருகின்றன என்ற நன்றியுணர்வுடன் வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் தேவையற்ற கோபம், சண்டை, கடுமையான பேச்சைத் தவிர்ப்பது நல்லது.

இயன்றால் ஏழைகள் அல்லது தொழிலாளர்களுக்கு உணவு, உடை அல்லது தேவையான பொருட்களை வழங்கலாம். பூஜை முடிந்த பிறகு நிவேதத்தை அனைவருக்கும் பிரசாதமாகப் பகிர்ந்து கொள்ளலாம். மறுநாள் விஜயதசமி அன்று புத்தகங்களையும் கருவிகளையும் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்குவது ஐதீகம்.முக்கியமாக, ஆயுத பூஜை என்பது ஆயுதங்களை மட்டும் வழிபடும் நாள் அல்ல. நம் அறிவு, தொழில், உழைப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு உதவும் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்து, நன்றி செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.