Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுமனைக்கு குடிபுகும் அன்பர்களின் கவனத்திற்கு

ஒரு வீட்டை கட்டுவது என்பது பெரிய விஷயம் அந்த வீட்டை கட்டி முடித்து நாம் கிரகப்பிரவேசம் செய்கின்றோம். அந்த கிரகப் பிரவேசம் செய்யும் பொழுது நல்ல ஜோதிடரிடம் காட்டி நாள் குறித்துக் கொள்ளுங்கள். அது ரொம்ப முக்கியமான விஷயம். ஏதோ ஒரு முகூர்த்த நேரத்திலே கிரகப் பிரவேசம் செய்வதை விட வீட்டினுடைய தலைவருடைய லக்னத்திற்கும் நட்சத்திரத்திற்கும் தோஷம் இல்லாத நாளாக இருக்க வேண்டும்.

பொதுவான முகூர்த்த நாட்கள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கும் இல்லை. குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தோஷத்தை தரலாம் என்பதை மறந்து விடாதீர்கள். ஜாதகத்தை பார்த்து பலன் சொல்வதைவிட லக்கினத்தை குறித்துக் கொடுப்பது ஜோதிடர்களுக்கு சவாலான விஷயம் அதை மறந்து விடாதீர்கள்.சுற்றுச் சுவர் கட்டிக்கொண்டு கிரகப் பிரவேசம் (புதுமனை புகுவிழா) செய்வது மிகச் சிறந்தது. ஆனால் முடியாவிட்டால் ஒரு வேலியாவது போட்டுக் கொள்ளுங்கள். இயன்ற அளவு சீக்கிரமாக சுற்றுச் சுவரைக் கட்டிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காரணம் பக்கத்து மனை அல்லது எதிர்மனையினுடைய தோஷங்கள் நம் வீட்டை பாதிக்காதவாறு இருப்பதற்கு இந்த காரியத்தை செய்யுங்கள்.

வீட்டில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களை வாயு மூலை என்று சொல்லப்படுகின்ற வடமேற்கு திசையிலோ அல்லது தென்கிழக்கு திசையாகிய அக்னி திசையிலோ படுக்க வைக்க வேண்டாம். தென்மேற்கு திசையான நைருதி திசையில் (நிருதி மூலை) அவர்கள் படுக்கையை போட்டுக் கொள்வது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் வடக்கு பக்கம் தலையை வைக்காமல் தெற்குப் பக்கம் தலையை வைத்து படுக்க வேண்டும். அவர்கள் மருத்துவம் செய்து கொள்வதோ மருந்து சாப்பிடுவதோ ஓய்வெடுப்பதோ நல்லது. சீக்கிரம் நோயிலிருந்து மீளலாம். தன்வந்திரி மந்திரம் தொடர்ந்து சொல்லவும்.

சிலர் வீட்டில் பாத்ரூமை ஒட்டி பூஜை அறையை அமைத்துக் கொள்ளுகின்றார்கள். இடம் இல்லை என்றாலும் கூட இதற்கு வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பூஜை செய்யும் பொழுது பக்கத்தில் இருக்கக்கூடிய கழிவறை - குளியலறை ஈரம் இந்த சுவரில் வரும். தண்ணீர் ஓசை கேட்கும். இவைகள் சரியல்ல. அதைப்போலவே பூஜை அறைக்கு நேர் எதிரில் கழிவறையை அமைத்துக் கொள்ளாதீர்கள்.

சிலர் இடம் இல்லை என்று சொல்லி மாடிப்படியின் கீழ் பகுதியை வீணாக்காது பூஜை அறையை அமைத்துக் கொள்ளுகின்றனர். பூஜை செய்யும் பொழுது தலைக்கு மேல் மாடிப் படியில் நடந்து செல்லும் ஓசை கேட்கும். அந்தப் பகுதியை வேறு ஏதேனும் பொருள்களை வைத்துக் கொள்வதற்கோ மற்ற உபயோகங்களுக்கோ வைத்துக் கொண்டு பூஜை அறையை சிறிய அறையாக இருந்தாலும் வேறு இடம் பார்க்கவும். இயன்ற அளவு வடக்கு, வடகிழக்கு திசை உகந்தது. சமையல் அறையில் கூட ஒரு சிறிய அலமாரியை வைத்துக்கொண்டு நீங்கள் பயன்படுத்தலாம்.

இதில் என்ன சங்கடம் என்றால் சமைக்கும் பொழுதும், பூஜை செய்யும் பொழுதும் தூய்மை அவசியம். அதிலும் பூஜை அறை தூய்மை மிக தேவையானது. பெரும்பாலும் சமையலறை அதற்கு ஏற்ற இடமாக இருக்காது என்பதால், தனி அறையை வைத்துக் கொள்ளுங்கள். வேறு இடமில்லை, சமை யலறை தான் இடம் என்று சொன்னால் நீங்கள் அங்கே முக்கியமாக தூய்மையைப் பின்பற்ற வேண்டும்.

கிருஷ்ணதாஸ்