?வீட்டில் உள்ள பெரியவர்களை எப்படி கவனிக்க வேண்டும்? - கீதா, தூத்துக்குடி
பெரியவர்களைப் கவனிப்பது என்பது வெறும் உடல்ரீதியான தேவைகளைக் கவனிப்பது மட்டுமல்ல; அது ஒரு ஆன்மிகக் கடமை யாகவும், மிகச் சிறந்த புண்ணியச் செயலாகவும் பார்க்கப்படுகிறது. சாஸ்திரங்களின்படி, வீட்டில் இருக்கும் பெரியவர்களைக் கவனித்துக் கொள்வது என்பது சாட்சாத் அந்த பரம்பொருளையே பூஜிப்பதற்குச் சமம். அவர் களின் சேவையில் கிடைக்கக்கூடிய ஆசீர்வாதமானது அனைத்து யாகங்கள் மற்றும் தீர்த்த யாத்திரைகளின் பலனைக் காட்டிலும் உயர்ந்தது. வயது முதிர்ந்த காலத்தில் அவர்கள் சிறு குழந்தைகள் போல மாறுவது இயல்பு. எனவே, அவர்கள் செய்யும் சின்னச் சின்ன தவறுகளைப் பொறுத்துக்கொண்டு, ஒருபோதும் அவர்களைக் கடிந்துகொள்ளக்கூடாது.
குடும்பத்தில் மற்றவர்கள் சாப்பிடுவதற்கு முன்பே, வயதில் மூத்த வர்களுக்கு உரிய மரியாதையுடன் உணவு வழங்க வேண்டும்.உடல் நலம் குலையும் போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உரிய மருத் துவச் சிகிச்சைகளைத் தாமதமின்றிச் செய்து அவர்களின் உடல் வலியைப் போக்க வேண்டியது இல்லறத்தில் இருப்போரின் முதன் மைக் கடமையாகும்.அவர்களை எந்தச் சூழ்நிலையிலும் தனிமைப் படுத்தாமலும், மன உளைச்சலுக்கு ஆளாக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இறைவழிபாடு, ஆன்மிக நூல்களைப் படித்தல், நாமஸ்மரணை செய்தல் போன்றவற்றுக்குத் தேவையான சூழலை அமைத்துக்கொடுத்து உதவ வேண்டும்.
தர்ம சாஸ்திரங்கள், உயிருடன் இருக்கும் பெற்றோரைத் முறையாகப் பராமரிக்காமல், அவர்கள் இறந்த பிறகு திவசம் அல்லது சடங்குகள் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவதில் பலனில்லை என்று உறுதியாகக் கூறுகின்றன.“உயிரோடு இருக்கும் போது செய்யும் சேவையே உண்மையான பிதுர் பூசை” ஆகும்.
?ஸ்லோகம் சொல்வதற்கும் பூஜை செய்வதற்கும் நேரம் இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?- கருணாகரன், வேதாரண்யம்
நேரம் இல்லை என்பது ஒரு சாக்கு போக்கு தான். மனம் இல்லை என்பதுதான் இதற்கு விடையாக இருக்க முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. காலையில் எழுந்தது முதல் தூங்குவது வரை ஒரு நிமிடம் விடாமல் உங்கள் செயல்களைக் குறித்துக் கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு நேரத்தை பூஜைக்கு ஒதுக்க முடி யுமா என்று பாருங்கள். இத்தனையும் மீறி உங்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால், 15 நிமிடம் முன்னதாக எழுங்கள். அல்லது 15 நிமிடம் கழித்துத் தூங்குங்கள். பூஜை செய்ய. அந்த 15 நிமிடங்கள் போதும்.
ஆதிசங்கரர் 30-க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களைக் கொண்ட ‘மானசீக பூஜை’ என்ற ஸ்தோத்திரத்தை அருளியுள்ளார். அதாவது, மனம் மூலமாகவே இறைவனுக்கு அபிஷேகம், ஆராதனை, நைவேத்யம் செய்வது போன்ற பாவனையை எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். பஸ், ரயில் அல்லது காரில் பயணம் செய்யும்போது கண்களை மூடிக்கொண்டு இறைவனின் திரு நாமத்தை உச்சரிப்பது அல்லது மனதிற்குள் ஸ்தோத்திரங்களைச் சொல்வது மிகச் சிறந்த பலனைத் தரும்.
கலியுகத்தில் பெரிய யாகங்களோ, நீண்ட நேர பூஜைகளோ செய்ய இயலாவிட்டாலும், நாமஸ்மரணை (இறைவனின் திருநாமங்களைச் சொல்வது) மட்டுமே போது மானது என்று பாகவதம் மற்றும் விஷ்ணு புராணம் சொல்கிறது.அடுத்து சுலோகங்களை நீங்கள் பூஜை அறையில் தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. பயணம் செல்லும் பொழுது கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஐந்து நிமிடமோ 10 நிமிடமோ சொல்லலாம். எனவே இதற்கு மாற்று வழி கேட்பதை விட, மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் நல்லது.
?பகவத் கீதையை வீட்டில் வைத்துப் படித்தால் சண்டை வருமா? - ராகவன், கும்பகோணம்
நாம் ஆன்மிக விஷயங்களில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதைக் காட்டுவது இம்மாதிரியான கேள்விகள். எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படிப்பட்ட செய்திகள் பரப்பப்படுகின்றன. எனக்குத் தெரிந்து ஏராளமானவர்கள் கீதையை தினசரி பூஜை அறையில் பாராயணம் செய்கின்றனர். மாலை நேரத்தில் படிக் கின்றனர். அவர்கள் எல்லாம் ஆன்மிகத்திலும் வாழ்வியலும் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார்கள் .மகாபாரதப் போர் நடந்த பின்னணியைக் காரணம் காட்டி, “கீதை போரைக் குறிக்கும் நூல், அதை வீட்டில் வைத்தால் சண்டை வரும்” என்று சிலர் தவறாகப் பேசுவதுண்டு. ஆனால், கீதை சொல்லப்பட்டதே மனிதர்களின் மனத்தில் உள்ள குழப்பங்களையும், அறியாமையையும் (போர்க்களச் சூழலில் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட மனத் தடுமாற்றத்தை) போக்கு வதற்காகத்தான்.
பகவத் கீதை என்பது ஒரு போர்க் கருவி அல்ல; ஆன்மிக ஞானத்தை வழங்கும் அறிவுக்களஞ்சியம். பகவான் கிருஷ்ணர் குருச் சேத்திரப் போர்க்களத்தில் நின்று கொண்டு, தர்மம் என்ன, கடமை என்ன, மனதை எப்படி ஒருமுகப்படுத்துவது, ஆன்மா என்றால் என்ன என்பதைப் பற்றி அர்ச்சுனனுக்கு உபதேசித்த தத்துவங்களின் தொகுப்புதான் கீதை.அந்த உயர்ந்த தத்துவங்களை வீட்டில் வைத்துப் படிப்பது வீட்டிற்குள் அமைதியையும், தெளிவையும், நற்பண்பு களையும்தான் தருமே தவிர சண்டையை உண்டாக்காது.
?நேர்மறை சக்தி கிடைக்க வீட்டில் அதிகமாக எந்தப் பொருளை வைக்க வேண்டும்?- கார்த்திக், திருவள்ளூர்
நேர்மறை சக்தி, பொருட்களினால் வருவதல்ல. மனவளத்தைப் பெருக்கிக் கொள்வதாலும், நேர்மறையில் சிந்திப்பதாலும், தியானம் மற்றும் பிரார்த்தனையின் மூலம் நம்பிக்கை உணர்ச் சியைப் பெறுவதாலும் தான் வருமே தவிர, குறிப்பிட்ட பொருட்களை வைத்தால் நேர்மறை சக்தி வராது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகின்றேன். நீங்கள் மகிழ்ச்சியாக கலகலவென்று சிரித்துக் கொண்டு வீட்டின் இருக்கிறீர்கள். வீடும் உங்களுக்குக் கலகலப்பாக மாறும். உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் மகிழ்ச்சிக்குரியதாகத் தெரியும்.நீங்கள் மிகவும் வருத்தத்தோடு சிடுசிடுவென்று அமர்ந்திருக்கிறீர்கள்.
நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் எத்தனை விளக்குகள் போட்டாலும் அறை இருட்டாகத்தான் இருக்கும். காரணம் வெளியில் இருந்து வெளிச்சம் உங்கள் மனதுக்குப் போகாது. மனதின் வெளிச்சம்தான் வெளியே போய் பொருட்களை பிரகாசப்படுத்தும். எனவே, நேர்மறை சக்தி என்பது உங்கள் எண்ணங்களால் உருவாவது. பிரார்த்தனையால் பலப்படுத்துவது. அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
?கோயில்களில் கண்ணாடி அறை ஏன் வைத்திருக்கிறார்கள்?- கங்காதரன், தஞ்சாவூர்
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் (ஜீவாத்மா) அந்த பரம்பொருளின் (பரமாத்மா) பிரதிபலிப்பே ஆகும்.கண்ணாடியில் எண்ணற்ற பிம்பங்கள் விழுவதைப் போல, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனே பல வடிவங்களாக உயிர்களில் பிரதிபலிக்கிறான் என்பதை உணர்த்துவதற்காகவே கண்ணாடி அறை. நாம் பார்ப்பது எல்லாமே அந்த இறைவனின் பிம்பம்தான். கண்ணாடி அறையின் சுற்றிலும் முகப்பு மற்றும் பக்கவாட்டுகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், நடுவில் இருக்கும் உற்சவ மூர்த்தி அல்லது விளக்கொளியின் பிரதிபலிப்பு ஆயிரக்கணக்கான முறை தொடர்ந்து தெரியும். அவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன், அவனது ஒளிப் பிரகாசம் எல்லையற்றது என்பதை பக்தர்களுக்குக் உணர்த்தவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பல கோயில்களில் (குறிப்பாக மார்கழி மாதம் அல்லது பவுர்ணமி நாட்களில்) உற்சவ மூர்த்திகளுக்குக் கண்ணாடி அறையில் டோலோத்சவம் எனும் ஊஞ்சல் சேவை நடத்துவது வழக்கம். இரவு நேரங்களில் அல்லது விளக்கொளியில் கண்ணாடியில் பிரதிபலிக்கும் இறைவனின் திருமேனியைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இது பக்தர்களின் மனதை ஒருநிலைப்படுத்தி, அவர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும்.
ஆகம சாஸ்திரங்களின்படி, கோயில்களில் இறைவனுக்குச் செய்யப்படும் உபசாரங்கள் யாவும் ராஜோபசாரங்கள் (அரசனுக்குச் செய்வது போன்ற மரியாதைகள்) ஆகும். அரண்மனைகளில் அரசர்களின் அந்தப்புரங்கள் அல்லது ஓய்வறைகள் அழகிய கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதே போன்றதொரு ராஜ மரியா தையையும் அழகியலையும் வழங்குவதற்காக இந்த கண்ணாடி அறைகள் வடிவமைக்கப்பட்டன.
?செவ்வாய் தோஷம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஏன் அதை எல்லோரும் பெரிதாகக் கருதுகிறார்கள்?- பத்மலட்சுமி, திண்டிவனம்
விவரம் தெரிந்தவர்கள் பெரிதாகக் கருதுவதில்லை. நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பின்னடைவு, கிரகங்களைப் பற்றியும் அதன் காரகங்களைப் பற்றியும், அமைப்பை பற்றியும் சரியாக கையாளத் தெரியாதவர்கள் பலன் சொல்ல உட்கார்ந்து விட்டதால் வந்த சோதனை இது.ஏதாவது ஒரு ஜாதகத்தில் இருந்தவற்றை வைத்துக்கொண்டு அது எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தும் என்று சொல்கின்ற வழக்கம் பல ஜோதிடர்களுக்கும் இருக்கிறது. குறைந்தபட்சம் அந்த செவ்வாய் எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறது,சுபர் பார்வை பெற்றிருக்கிறதா என்று எதையுமே பார்க்காமல் , ராசி கட்டத்தில் இந்த இடத்தில் இருப்பதால் செவ்வாய் தோஷம் என்று நிராகரிப்பதால் வந்த குற்றம் இது.
ஜோதிடம் என்பது மனிதர்களுக்கு வழி காட்டவும், மனவலிமையைத் தரவும் உருவாக்கப்பட்ட ஒரு விஞ்ஞானக் கலை. ஆனால், இன்று துரதிர்ஷ்டவசமாக இது பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தும்
வியாபாரமாக மாறிவிட்டது.“செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும், விபத்து நடக்கும், அல்லது வாழ்க்கைத் துணைக்கு ஆபத்து” என்றெல்லாம் தேவையற்ற பீதியைக் கிளப்புவது சாஸ்திரத்திற்கு எதிரானதாகும். செவ்வாய் என்பது நிலம், வீரியம், தைரியம், ரத்தம் மற்றும் சகோதரத்துவத்தைக் குறிக்கும் கிரகம். அது ஜாதகத்தில் வலிமை யாக இருப்பது ஒருவருக்குத் தளராத ஊக்கத்தையும், உழைப்பைக் கொடுக்கும் தன்மையையும் தரும். அதைக் கண்டு அஞ்சுவது அறியாமையே.
?பூசணிக்காயை ஏன் திருஷ்டிக்கு பயன்படுத்துகிறோம்?- நந்தினி, திருச்சி
பூசணிக்காய்க்கு இயற்கையாகவே சுற்றுப்புறத்தில் உள்ள எதிர்மறை ஆற்றலை உறிஞ்சிக் கொள்ளும் சக்தி உண்டு.ஒரு புதிய தொடக்கம், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் போது அல்லது மனிதர்களின் பொறாமைப் பார்வைகளால் உண்டாகும் கண் திருஷ்டி போன்ற தீய ஆற்றல்களை இந்தக்காய் முழுமையாகத் தனக்குள்ளே ஈர்த்துக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது. திருஷ்டி சுற்றும் பூசணிக்காயில் மஞ்சள், குங்குமம் தடவி, நடுவில் கண்ணூறு படும் வண்ணம் கண்(திருஷ்டி) கருப்பு மையால் கண்கள் போல வரைவார்கள்.
இது நம்மைச் சுற்றியுள்ள துஷ்ட சக்திகளையும், தீய பார்வைகளையும் அந்தப் பூசணிக்காய் தன்பால் ஈர்த்துக் கொண்டு, குடும்பத்தினரைப் பாதுகாக்கின்றது. ஆன்மிகரீதியாக, பண்டைய காலத்தில் தீய சக்திகளை விரட்ட திருஷ்டிப் பலிகள் கொடுக்கப்பட்டதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன.காலப்போக்கில் ஜீவகாருண்யத்தின் அடிப்படையில் (உயிர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்பதற்காக) அந்த ரத்தபலிக்கு மாற்றாக, ரத்தத்தைப் போன்ற சிவந்த சதைப்பற்றைக் கொண்ட பூசணிக்காயைப் பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வந்தது. இன்னொரு கோணத்தில் பூசணிக்காயை உடைப்பது என்பது நம்மிடம் உள்ள அகந்தைக் குணம் மற்றும் தீய எண்ணங்களை உடைத்துச் சிதறடிப்பதைக் குறிக்கிறது.
?யார் யாரிடம் நாம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்?- குமரவேல், செங்கல்பட்டு
“மாதா பிதா குரு தெய்வம்” என்பார்கள். நம்மை ஈன்றெடுத்த தாய் மற்றும் தந்தையின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது அனைத்துத் தீர்த்த யாத்திரைகளைக் காட்டிலும் புண்ணியமானது. குடும்பத்தில் உள்ள வயது முதிர்ந்த பாட்டி, தாத்தா மற்றும் பெரியவர்கள் வீட்டிற்கு ஒரு பாதுகாப்பு அரண் போன்றவர்கள். அவர்களின் உள்ளத்திலிருந்து வரும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஒரு கவசம் போல நம்மைக் காக்கும்.நமக்கு வித்தையைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், ஆன்மிக குருமார்கள் மற்றும் கல்வி ஞானத்தில் சிறந்த பெரியவர்கள் (ஞான விருத்தர்கள்).
நம்மை விட வயது முதிர்ந்த பெரியவர்களின் (வயோ விருத்தர்கள்). நீண்ட கால வாழ்க்கை அனுபவம் நமக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். அவர்களைக் கண்டால் நமஸ்கரித்து ஆசி பெறுவது நமது கலாச்சாரத்தின் மிக உயர்ந்த நாகரிகமாகும். சந்நியாசிகள், முனிவர்கள் மற்றும் துறவறம் பூண்ட பெரியோர்கள் இறைவனை நோக்கிய பயணத்தில் இருப்பவர்கள் என்பதால், அவர்களின் திருக்கரங்களால் கிடைக்கும் ஆசீர்வாதம் நம் பாவங்களைப் போக்கி நல்வழியில் செலுத்தும்.
பெரியோர்களின் காலில் விழுந்து வணங்கும் போது, நம்மிட உள்ள அகந்தை முழுமையாக உடைகிறது. அதுமட்டுமின்றி, வயதில் மூத்தவர்களின் உடலில் உள்ள நேர்மறை ஆற்றலும் ஆன்மிக அதிர்வுகளும் குனிந்து வணங்கும் நமது தலையின் வழியாக நமக்கு மாற்றப்படுகிறது என்பதே இதன்ஆன்மிக இரகசியமாகும்.
தேஜஸ்வி


