Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வீட்டில் பூஜையும் ஜபங்களும் செய்வதால், அதைச் செய்பவருக்கு மட்டும் நன்மை கிடைக்குமா? வீட்டாருக்கும் நன்மை கிடைக்குமா? அன்றாட வாழ்க்கையின் பண்புகள் இதனால் எப்படி மேம்பாடு அடையும்?

?வீட்டில் பூஜையும் ஜபங்களும் செய்வதால், அதைச் செய்பவருக்கு மட்டும் நன்மை கிடைக்குமா? வீட்டாருக்கும் நன்மை கிடைக்குமா? அன்றாட வாழ்க்கையின் பண்புகள் இதனால் எப்படி மேம்பாடு அடையும்?

- விஜயலட்சுமி, காரைக்குடி.

பூஜை, ஜபம் ஆகியவை வீட்டில் நடப்பதால் வீட்டின் சூழ்நிலையே மேன்மை அடைகிறது. அவர்களை ஒட்டியுள்ள குடும்பத்தார் அனைவருமே அந்த நற்பயனைப் பெறுகிறார்கள். இதில் மனம் ஊன்றி ஈடுபட்டால் அறிவுக்கூர்மையும், சிந்தனையில் ஆழமும் கிடைக்கிறது. குழந்தைகள் கட்டாயமாகப் படிக்க உட்காருவதைப் போல, நாமும் நேரம் ஒதுக்கிக் கொண்டு கட்டாயமாக உட்கார வேண்டும். நோயாளிக்குப் பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும் மருந்து தனது வேலையைச் செய்கிறது. நோயாளி குணம் அடைகிறான். அதேபோல நாம் மனம் ஊன்றி இதில் ஈடுபடாவிட்டாலும் அதன் பலன் நம்மை மெல்ல மெல்ல வந்தடையத்தான் செய்யும். அதனால் மனம் பண்படும். அதன் பயனாக பூஜையிலும் ஜபத்திலும் மேலும் ஈடுபாடு உண்டாகும். இப்படிப் மனத்தை வசப்படுத்தி ஈடுபடுத்தக் கற்றுக்கொண்டால், படிப்படியாக மனோபலம் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் செய்வதற்கு மனோதைரியமும், விடாமுயற்சிக்குத் தேவையான உறுதியும் தன்னாலே வரும். வாழ்க்கையில் வெற்றி பெற்று சிறந்து விளங்குவீர்கள். பூஜை மனதை ஒருமையாக்கி வலிமையை அளிக்கின்றது. பூஜையைச் செய்யச் செய்ய உணர்வீர்கள். மனதிலும் நிம்மதி பரவும்.

?சைவ, வைணவ, சாக்த என்று பல்வேறு மார்க்கங்கள் உள்ளன. அதில் சாஸ்திரங்களும் உள்ளன. இந்தக் காலத்துக்கு அதில் சொல்லப்பட்டிருக்கிற சாஸ்திரங்கள் பொருந்துமா? இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி அவற்றை நாம் ஆராய்ந்து நியாயப்படுத்தி ஏன் மாற்றிக்கொள்ளக்கூடாது?

- நாராயணன், தூத்துகுடி.

சட்டப் புத்தகம் சாலை விதிகளை வகுத்துத் தந்துள்ளது. மேலும் நாம் மதித்து நடப்பது சமூகத்துக்கு நல்லது என்றும் சொல்லுகிறது. ‘மனிதர்கள் நடைபாதையில் தான் நடக்க வேண்டும். கார்கள் சாலையில் தான் ஓட வேண்டும். மேலும் எல்லோரும் இடது பக்கத்தில்தான் போக வேண்டும்’ என்றும் சொல்லுகிறது. ஏன் இடது பக்கம் போகவேண்டும்? வலதுபக்கம் போனால் என்ன? இஷ்டப்படி வலது பக்கமோ, இடதுபக்கமோ போனால் என்ன? என்று சொல்ல முடியுமா? சாலை விதிகளை மீறமுடியுமா? இதைப்போல, சாஸ்திரங்கள் கூறியபடி நடந்தால் ஒழுங்கு அமையும். நன்மை கிடைக்கும். நெறியோடு வாழ பல்வேறு வழிகளை கூறுகின்றது. பூஜை, மந்திரம், யாத்திரை, தியானம் என்று பல்வேறு நியதிக்கு உட்பட்ட நெறியை கூறுகின்றது. இதை நாம் அனுபவித்து உணரலாம். சபரிமலை மாலை போடுபவர்களுக்கு என்னென்ன விதிகள் உள்ளன. அதை அவர்கள் பக்தியோடு நடைமுறைப்படுத்துவதை பார்க்கிறோம் அல்லவா! அதேபோலத்தான், சாத்திரங்கள் கூறும் நல்ல விஷயங்களை நம் மனோ தர்மத்திற்கு ஏற்றவாறு ஒப்பிட்டு நோக்குங்கள். அப்போது நிச்சயம் புரியும். அதேபோல தனிமனிதனின் சௌகரியத்துக்காகத் சாஸ்திரத்தை மாற்றிக் கொள்ளவோ, வாதிடுவதோ சரியானது அல்ல. ஆனால், அதில் என்ன இருக்கிறது என்று ஆராயலாம். அதற்கான முழு சுதந்திரமும் அதிலேயே உள்ளது. அதே சமயம் நீ சாஸ்திரப்படி தான் நடந்துகொள்ள வேண்டுமென்று கண்டிப்போடு வலியுறுத்துவதில்லை. உன்னுடைய நலன் பொருட்டும், மன நிம்மதி பொருட்டுமே இருக்கிறது என்று அன்போடு கூறுகின்றது. மிகமுக்கியமாக சாஸ்திரங்கள் தனி மனிதனின் ஆன்மிக வளர்ச்சியையே பேசுகிறது.

?பிரம்மசரியம், கிரஹஸ்தம் என்ற நிலைகளுக்குப் பிறகுதான் படிப்படியாகத் துறவு நிலையை மேற்கொள்ளும்படி இந்து மதம் சொல்லுகிறது. வயதாகி வேலைப் பொறுப்புகளிலிருந்து விடுபட்ட பிறகு வேதாந்த விசாரணைகளில் ஈடுபட்டால் போதாதா? குடும்பப் பொறுப்புகள் இருக்கும்போது இதில் ஈடுபடுவது எப்படி?

- புவனேஸ்வரி, கடலூர்.

நாமெல்லாம், ‘இப்போது வேலை செய்து நன்றாகச் சம்பாத்தியம் செய்வோம். வயதான பிறகு மெதுவாக பகவானை நினைத்து, அவனைப்போற்றித் துதிப்போம்’ என்றே பொதுவாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் பகவானை நாம் எப்போதுதான் போற்றி, நினைத்து வழிபட வேண்டும். வயதான பிறகு நம்முடைய கண்களால் சரியாகப் பார்க்கவே முடியாது. காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விடும். பகவானின் நாமத்தைச் சொல்ல விரும்பினாலும், தொடர்ந்து பேசுவதற்குச் சக்தி இல்லாமல் போய்விடும். தொடர்ந்து அன்றன்றைய பாடங்களை படிக்காதவர்கள், கடைசியில் சோம்பேறித்தனத்தினால் ஏதோ படித்து, தெரிந்த அளவுக்கு எழுதுவார்கள். அதனால் தேர்வில் தோற்றுப் போவார்கள். ‘இந்த வருடம் இப்படி ஆகிவிட்டது. அடுத்த வருடம் இப்படி நினைத்துக் கொள்வார்கள். ஆனால், அடுத்த வருடமும் இப்படியே சோம்பேறித்தனமாக நழுவிப் போய்விடும். அதைப்போல பக்திமார்க்கத்தை நாடுவதற்கு நாம் ‘பின்னால் பார்த்துக் கொள்வோம்!’ என்று தள்ளிப் போட்டுக் கொண்டு போனால், இந்த ெஜன்மத்திலும் முதிர்ச்சி கிடைக்காது; அடுத்த ெஜன்மத்திலும் முழுப்பலனை அடைய முடியாது. ஒவ்வொரு நாளையும் நமது வாழ்க்கையில் சிரத்தையுடன் இந்த முயற்சியில் ஈடுபடுவதில் கழிக்க வேண்டும்.

?‘எல்லாம் இறைவன் செயல்’ என்று சரணாகதி அடைந்து விடுவது, தன்னம்பிக்கையை இழப்பதற்கு வழி செய்து விடாதா? அந்த நிலையில் ஒருவன் தனது திறமையையும், செயலாற்றலையும் எப்படி வெளிப்படுத்த முடியும்?

- வேதவல்லி பத்ரிநாத், காஞ்சிபுரம்.

கடவுளிடம் சரணாகதி அடைவது என்பது நம்முடைய காரியங்களை எப்படியோ இறைவன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிடுவது அல்ல. கடவுள் நாம் அப்படிச் செயல் இழந்து போகவேண்டும் என்று விரும்புவதும் இல்லை. நம்மை நாமே உணரவேண்டும் என்பதே பக்திமார்க்கம் காட்டும் வழி. நமக்கு இல்லாத பெருமைகளையும் - திறமைகளையும் நாமே கற்பனை செய்து கொண்டு, ‘நான்’ என்ற அகந்தையில் மூழ்கி, தவறான எண்ணங்களிலும், செயல்களிலும் ஈடுபடுகிறோம். நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு விட்டால். இந்த அகந்தை ஒழிந்துவிடும். நம்முடைய எண்ணங்கள் செயல்களும், நமக்குள் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கைக்கு இசைவாக, நல்ல விதமாகத்தான் அமையும். தோல்வியினால் மனச்சோர்வோ, வெற்றியினால் மமதையோ உண்டாகாது. ‘எனக்கு எல்லாம் தெரியும். பிறர் சொல்லி நான் கேட்க வேண்டியது இல்லை’ என்று எண்ணும் அகங்காரமும் இராது.

போர்க்களத்தில் நுழைந்த அர்ஜுனன் தான் எல்லா விதத்திலும் வல்லமை கொண்ட வீரன் என்றே தன்னை எண்ணிக் கொண்டான். ஆனால், தொடர்ந்து தான் மனோதிடம் இல்லாதவன் என்று எண்ணிக் குழப்பம் அடைந்தான். அந்தக் குழப்ப நிலையில் எதைப்பற்றியும் அவனுக்குச் சந்தேகமே இருந்தது. பகவானின் கீதை உரையைக் கேட்கக் கேட்க அந்தக் குழப்பம் தெளிவடைந்தது. ‘நீ என்ன சொல்லுகிறாயோ அதைக் கேட்கிறேன். நீ என்ன கட்டளை இடுகிறாயோ அதை நிறைவேற்றி வைக்கிறேன்.’ என்று தன்னை கண்ணனின் வசம் ஒப்படைத்து விட்டான். அதனால் பார்த்தனுக்கு மனத் தெளிவும், மனஉறுதியும் கிடைத்தன. கடமை உணர்வுடன் செயல்வீரனாகப் பணியாற்றினான். இப்படி ஒரு மனமாற்றம் கிடைக்க உதவுவதே உண்மையான சரணாகதி நிலை. அதனால் மனம் பலவீனம் அடைவதில்லை. புதிய பலத்தையே பெறுகிறது.