பகுதி 1
"உலகத்தில் எந்த ஒரு விஷயமும் முழுமையான நன்மை செய்யும் விஷயமாக இருக்க முடியாது; அதைப்போலவே எந்த ஒரு விஷயமும் முழுக்க தீமையும் செய்து விடாது."
இதைத்தான் நமது ஜோதிட சாஸ்திரம் ஒவ்வொரு ஜாதகத்தின் பன்னிரண்டு பாவங்கள் (Bhavam-தன்மை) மூலமாகத் தெளிவாக விளக்குகிறது. ஒரு பாவத்தில் நற்பலன்கள் (ராஜயோகம்) நடக்கும் போது, அதே பாவத்தின் மறுபுறம் சில சவால்களும் மறைந்திருக்கும். அவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம், எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமது வெற்றியும் மன அமைதியும் அடங்கியுள்ளது.
உதாரணமாக ஜோதிட சாஸ்திரத்தில் 2-ஆம் பாவம் எடுத்துக் கொள்வோம்.
2-ஆம் பாவம் என்பது தனம் (பணம்), வாக்கு, குடும்பம் மற்றும் உணவு ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். ஜாதகத்தில் இந்த பாவம் வலுப்பெறும் போது, ஒருவருக்குக் குறையாத செல்வம், சேர்க்கை, இனிய வாக்கு வன்மை மற்றும் மகிழ்ச்சியான குடும்பச் சூழல் அமைகிறது. இதுவே அந்த பாவத்தின் ராஜயோகப் பகுதியாகும்.
அதே 2-ஆம் பாவம்தான் ஜோதிட விதி களின்படி முதன்மையான ‘மாரக ஸ்தானங்களில்’ ஒன்றாகக் கருதப்படுகிறது (குறிப்பாக 7 மற்றும் 2-ஆம் இடங்கள்). அதாவது, பண வரவையும் செல்வத்தையும் தரும் அதே வீடுதான், ஆயுள் ரீதியான கடுமையான கண்டங்களையும், உடல் நலக் குறைவு களையும் அல்லது வாழ்க்கையில் பெரும் சோதனைகளையும் தரக்கூடிய இடமாகவும் செயல்படுகிறது.
இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், வாழ்க்கையிலும் சரி, ஜாதகத்திலும் சரி; பொருள் வரவையும் செழிப்பையும் தரும் அதே அம்சம்தான் சில வேளைகளில் அதிகப்படியான பொறுப்புகளையும், அழுத்தங்களையும், சோதனைகளையும் கொண்டு வரும். எனவே, நாணயத்தின் இரு பக்கங்களைப்போல, வாழ்வின் இன்ப-துன்பங்களைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவமே ஞானமாகும். அதைத் தருவது ஜோதிடம்.
ஜாதகத்திலுள்ள நல்ல பலன்களை (சாதகங்களை) மனத்தில் கொண்டு, நேர்மறையான ஆற்றலுடன் நமது முயற்சிகளைத் தொடர வேண்டும். வரக்கூடிய சவால்களையும் (கவனம் தேவைப்படும் பகுதிகள்) முன்னமே அறிந்து, தகுந்த பரிகாரங்கள் மற்றும் விழிப்புணர்வுடன் அதைக் களைந்து கொள்ள வேண்டும்.
எதுவாக இருந்தாலும் கடைசியில் என்ன நடக்க வேண்டுமோ அது நடந்துவிடும்; ஆனால் பல நேரங்களில் நம்முடைய முயற்சியின் பலனையும் நாம் பார்க்க முடியும்.
இதுதான் ஆன்மிகமும் ஜோதிடமும் நமக்குச் சொல்லும் உச்சபட்ச பாடம். விதியின் வலிமையை நாம் உணர்ந்திருந்தாலும், நமது ‘மதி’ எனப்படும் விடாமுயற்சியும் உழைப்பும் ஒருபோதும் வீண் போவதில்லை.
விதி நமக்குக் கொடுக்கப்பட்ட களம் என்றால், நம்முடைய முயற்சிதான் அதில் நாம் ஆடும் ஆட்டம். விதி பாதையைத் தீர்மானிக்கலாம். ஆனால், அந்தப் பாதையில் நாம் எப்படிப் பயணிக்கிறோம், எந்த அளவுக்குத் தர்மத்தோடு உழைக்கிறோம் என்பது நமது கையில் தான் உள்ளது. பல நேரங்களில் நம்மால் எதையும் மாற்ற முடியாது என்று தோன்றும் போதுதான், நமது சிறிய முயற்சி மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டும்.
விதியையும் மதியையும் சமமாகப் புரிந்து கொண்டு, சோர்வின்றிச் செயலாற்றும் மனப்பக்குவமே மனித வாழ்வின் உண்மையான வெற்றி!
திருமணம் இனிமையானது. ஏழாம் பாவம். குழந்தை இனிமையானது 5ம் பாவம். திருமணத்தின் லாபம் குழந்தை. (11ம் பாவம்)திருமணத்திலும் பல சிரமங்கள் இருக்கும். கடன், உழைப்பு, கருத்து வேற்றுமை. சண்டை மன உளைச்சல் எல்லாம் இருக்கும்.
காரணம், எல்லோருக்கும் 7ம் பாவம் மட்டுமே தனியாக இயங்காது. மற்ற பாவங்களும் இயங்கவே செய்யும். வாழ்வின் எந்தவொரு இனிமையான தருணத்திலும் 12-ஆம் பாவத்தின் (மறைவு, விரயம், தடைகள்) தாக்கம் புத்தி, அந்தரம் அல்லது கோசாரத்தின் வழியாக இயக்கத்திற்கு வரும்போது திடீர்ச் சிரமங்களும் சண்டைகளும் மன உளைச்சலும் எழத்தான் செய்யும்.
திடீர் மின்சாரம் போவது போல (விதி) அப்போது டார்ச் அல்லது இன்வெர்ட்டர் ஏற்பாடு செய்து சமாளிக்க வேண்டும் (மதி).”
விதி என்பது எப்போது மின்சாரம் தடை படும் என்பதைத் தீர்மானிக்கும் இயற்கை; ஆனால், அந்த இருள் சூழும்போது மனம் தளராமல் ‘டார்ச் லைட்’ அல்லது ‘இன்வெர்ட்டர்’ போட்டு வெளிச்சம் தேடிக்கொள்வதுதான் நமது ‘மதி’ எனப்படும் விவேகமும் விடாமுயற்சியும் ஆகும்.
சவால்கள் வரும்போது துவண்டுவிடாமல், அதற்கான மாற்று வழிகளை யோசித்து வாழ்க்கையைத் திறம்பட நகர்த்திச் செல்வதுதான் மனித வாழ்வின் உண்மையான வெற்றி.
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானது ‘சொந்த வீடு’. ஜோதிட சாஸ்திரத்தில் வீடு, வாகனம், சுக ஸ்தானம் ஆகியவற்றைக் குறிக்கும் முதன்மை இடம் நான்காம் பாவமாகும். ஆனால், ஒருவருக்குச் சொந்த வீடு அமையும் விதம் என்பது வெறும் நான்காம் இடத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; அதனுடன் மற்ற பாவங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைப் பொறுத்தே அதன் முழுமையான பலன் அமைகிறது.
வீடு வாங்குவதற்கு மிக அவசியமான நிதி ஆதாரம் இரண்டாம் பாவமான (தனஸ்தானம்) மூலமாகவே அமைகிறது. அந்தப் பணம் எப்படிப் புரளும்? சொந்தச் சேமிப்பிலிருந்து கிடைக்குமா, அல்லது கடன் மூலம் வருமா என்பதை நிர்ணயிப்பதில் ஆறாம் பாவம் (ருண-ரோக-சத்துரு ஸ்தானம்) மற்றும் பத்தாம் பாவத்தின் (தொழில்/உத்தியோகம்) பங்கு மிக முக்கியமானது.
ஜாதகத்தில் நான்காம் பாவமும் ஆறாம் பாவமும் இணையும் போது, ஒருவருக்குச் சொந்த வீடு வாங்கும் யோகம் வந்தாலும், அது பெரும்பாலும் கடன் வாங்கித்தான் நிறைவேறும்.
ஒருவேளை அந்த வீடு பூர்வீகச் சொத்து மூலமாகவோ அல்லது முன்னோர்களின் வழி மூலமாகவோ கிடைப்பதாக இருந்தால், அதனுடன் ஐந்தாம் பாவமும் இணைந்திருக்கும்.
நமது முன்னோர்கள் வகுத்தளித்த ஜோதிட விதிகளின் விசித்திரமே இங்குதான் தொடங்குகிறது. நான்காம் பாவத்திற்கு எட்டாம் இடமாக பதினோராம் பாவம் (11-ஆம் பாவம்) அமைகிறது. 8 என்பது மறைவு மற்றும் இடமாற்றத்தைக் குறிக்கும் இடம்.
எப்போது நான்காம் பாவமும் பதினோராம் பாவமும் வலுவாகத் தொடர்பு கொள்கிறதோ, அப்பொழுது அந்த ஜாதகர் பிரம்மாண்டமான சொந்த வீட்டைக் கட்டுவார்; ஆனால் கட்டி முடித்த கையோடு வேலை அல்லது தொழில் நிமித்தமாகத் தூர தேசத்திற்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்றுவிடுவார்.
அவர் தனது சொந்த வீட்டில் வசிக்கும் பாக்கியம் குறைவாகவே இருக்கும்; மாறாக வேறு விதத்தில் அவரது ஆசைகளும் லட்சியங்களும் (11-ஆம் பாவம்) நிறைவேறும்.
இதைப் போலவே, சுக ஸ்தானமான நான்காம் பாவமும், விரய ஸ்தானமான பன்னிரண்டாம் பாவமும் இணையும் போது சுவாரஸ்யமான மாற்றங்கள் நிகழ்கின்றன. பன்னிரண்டாம் பாவம் என்பது ஊரை விட்டுப் பிரிவது, வெளிநாடு செல்வது மற்றும் விரயத்தைக் குறிக்கும். இந்தச் சேர்க்கை அமையும் போது, ஜாதகர் தான் வாங்கிய வீட்டை விட்டுவிட்டு வேறு இடத்திற்குத் தங்கிவிட நேரிடும்.


