காலத்தின் அதிதேவதைகளில் கால பைரவருக்கு ஒரு தனிஇடம் உண்டு. பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ஏற்பட்ட விவாதத்தால் தனது சக்தியை வெளிப்படுத்தி உக்கிரமாக உதயமானார் கால பைரவர். இவரே சனியின் குருவாக உள்ளார். காலத்தின் மாற்றங்களை கட்டுப்படுத்தும் தேவதைகளில் இருவருக்கும் முக்கியமான பங்குண்டு என்பதை நாம் அறிவோம்.
தலவரலாறு
சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டதாகப் பல ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. சில ஆன்மிகக் கட்டுரைகள் 1,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை எனக் கூறுகின்றன. மூலவர் சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தலபுராணம் கூறுகிறது. மேலும், ஆறகழூர் வாயுத் தலமாகப் போற்றப் படுகிறது.
புராணத்தின்படி, அந்தகாசுரன் உள்ளிட்ட அசுரர்களின் தொல்லைகளால் தேவர்கள் துன்புற்றனர். சிவபெருமானின் தவத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய சூழல் ஏற்பட்டதால், தேவர்கள் மன்மதனிடம் உதவி கோரினர். மன்மதன் மலர் அம்புகளைச் செலுத்திச் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முயன்றார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் ரதியின் வேண்டுதலால் மன்மதன் மீண்டும் அருள்பெற்றதாகப் புராண மரபு கூறுகிறது.
ஆறகழூர் தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் மன்மதன் சிவலிங்கத்தை வழிபட்டார். இதன் காரணமாக இத்தல இறைவன் காமநாதீஸ்வரர் என அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
தலையாட்டிப் பிள்ளையார்: இத்தலத்திற்கு வெளியே ‘தலையாட்டிப் பிள்ளையார்’ சந்நதி உள்ளது. மன்னன் கோயிலை கட்டியபோது இவரிடம் உத்தரவு கேட்டுவிட்டுத்தான் பணியை துவங்கினான். இவரே கோயிலுக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோயில் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு இவரிடம் வந்து பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?’ என்று கேட்டான் மன்னன் அதற்கு இவர், ‘நன்றாகவே கட்டியிருக்கிறாய்’ என சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு ‘தலையாட்டிப்பிள்ளையார்’ என்ற பெயர் வந்தது. இப்போதும் தனது தலையை இடப்புறமாக சற்றே
சாய்த்தபடி இருப்பதை காணலாம்.
கால பைரவ திருக்கோல சிறப்பு
பைரவர் என்ற நாமத்திற்கு அச்சத்தை போக்குபவர் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானின் உக்கிரமான திருக்கோலத்தில் ஒன்றுதான் காலபைரவர். காலபைரவர் என்றால், காலத்தை கட்டுக்குள் வைத்திருப்பவர், தர்மத்தைக் காப்பவர், தீமையை அழிப்பவர், பக்தர்களின் அச்சத்தை போக்குபவர்
என்பதாகும்.
1. சூலம் (திரிசூலம்): தீய சக்திகளை அழித்தல், அறியாமையை நீக்குதல், தர்மத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றைக் குறிக்கும்.
2.உடுக்கை (டமரு): சிவனின் படைப்பாற்றல், ஒலி மற்றும் அண்ட இயக்கத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.
3.கபாலம் (மண்டையோட்டுப் பாத்திரம்): வாழ்க்கையின் நிலையாமை, மரணத்தின் உண்மை, அகந்தையைத் துறத்தல் ஆகியவற்றை நினைவூட்டுகிறது.
4.நாய் வாகனம் (பைரவர்): நாய் பைரவரின் வாகனமாகப் பல மரபுகளில் இடம்பெறுகிறது. இது காவல், விழிப்புணர்வு, விசுவாசம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
5.உக்கிரத் தோற்றம்: தீவிரமான முகம், விரிந்த கண்கள், சடைமுடி போன்றவை பைரவரின் சக்திவாய்ந்த காவல் வடிவத்தைக் காட்டுகின்றன. மூன்றாவது கண் ஞானத்தையும் உண்மையை உணரும் ஆற்றலையும் குறிக்கிறது.
தேய்பிறை அஷ்டமி இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் உண்டு
ஜோதிடப்படி யாருக்கு சிறப்பைத் தரும்
*ஒருவருக்கு எல்லை மீறிய இனம் புரியாத பயம் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சம்.
*ஜாதகத்தில் சனியுடன் பல அசுப கிரகங்கள் இணைவதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் சக்தி கொண்ட திருத்தலம்.
*வீட்டிலோ அல்லது வியாபாரத் தலத்திலோ காரணமின்றி நடை பெறும் சில அசம்பாவித நிகழ்வுகள் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.
*சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் ஏற்பட்டு அந்த நிலத்தில் பல காரணங்களால் வீடு கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் இங்கு வழிபடுவது சிறப்பைத் தரும்.
*சிலருக்கு பில்லி, சூன்யம் இருக்குமோ என்ற அச்சம். யாரேனும் தமக்கு தீங்கிழைக்கிறார்கள் என்ற கவலை ஏற்படுபவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பைத் தரும்.
*இன்னும் சிலருக்கு தொற்று நோய் ஏற்படுவதும், ஏதேனும் தொற்று உண்டாகுமோ என்ற அச்சமும் இங்கு வந்து வழிபட்டால் நன்மை தரும்.
*சிலருக்கு சனிதோஷம் ஏற்பட்டாலும் காலபைரவரை வழிபடும் பட்சத்தில் அந்த சனிதோஷம் குறை
வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
*கோட்சாரத்தில் சனியுடன் அசுப கிரகங்கள் இணையும் பட்சத்தில் இத்தலத்தில் வழிபடுவது நன்மை பயக்கும்.
எப்படிச் செல்லலாம்?
சேலம் ஆத்தூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.


