ராஜகோபுர தரிசனம்!
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், வீரக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட அருள்மிகு திருவேடநாதர் திருக்கோயில். இக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் பதிவிலும் இடம்பெற்றுள்ளது. இக்கோயிலின் மூலவர் திருவேடநாதர், தாயார் ஒப்பிலாநாயகி. வெளிப்பார்வைக்கு அமைதியான கிராமப்புறச் சிவாலயமாகத் தோன்றினாலும், இக்கோயிலின் வரலாற்றை அதன் கல்வெட்டுகள் வழியாக ஆராயும்போது, சோழர் காலம் தொடங்கி பாண்டியர் மற்றும் விஜயநகரப் பேரரசின் காலப்பகுதி வரை நீளும் வரலாற்றுச் சுவடுகளை இத்தலம் தன்னகத்தே கொண்டிருப்பது தெரிய வருகிறது.
வீரக்குடி திருவேடநாதர் கோயிலை முதலில் கட்டிய மன்னர் யார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், இத்தலத்தில் கிடைத்த கல்வெட்டுகள், பல்வேறு அரசர் காலங்களில் பேணப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படுத்துகின்றன.இதில் ஒரு கல்வெட்டில், திருவானைக்கோயிலைச் சேர்ந்த ஒரு சிற்பிக்கு நிலம் வழங்கப்பட்டதாகவும், அவர் ஒப்பிலாநாயகி அம்மனின் திருமேனியை உருவாக்கியதுடன், அவருக்கான சன்னதியையும் நிறுவியவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வீரக்குடி திருவேடநாதர் கோயிலின் வரலாறு சோழர் காலத்தோடு முடிவடையவில்லை. பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இத்தலம் முக்கியத்துவம் பெற்றிருந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் காணப்படுகின்றன.கோயில்களுக்கு நிலம் உள்ளிட்ட கொடைகள் வழங்குவது, அக்காலச் சமூகத்தின் சமய மற்றும் பொருளாதார அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. அந்த வகையில், நிலக்கொடைகள், பாண்டியர் காலத்தில் மட்டுமில்லாமல் அதற்கு பின் விஜயநகர காலத்திலும் தொடர்ந்துள்ளது.
இதனால், வீரக்குடி கோயில் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், கலை, கட்டிடக்கலை, சிற்பம், நிலக்கொடை மற்றும் சமய நிறுவன வரலாறு ஆகிய பல துறைகளுக்கும் வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது.ஒரு கோயிலின் வரலாற்றை அறிய அதன் கட்டிட அமைப்பை மட்டும் பார்க்க முடியாது. அங்குள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள், திருமேனிகள், சன்னதிகள், கொடைச் செய்திகள் மற்றும் பழைய ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலமே அதன் முழுமையான வரலாற்றை மீட்டெடுக்க முடியும்.
வீரக்குடி திருவேடநாதர் திருக்கோயில் பழமையான வரலாற்றையும் கல்வெட்டு மரபையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும், தற்போது காணப்படும் கோபுரம் கோயிலின் தொன்மையான கட்டுமானத்திலிருந்து வேறுபட்டு, பின்னாளில் புதிதாக அமைக்கப்பட்டது போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. உயரமான இந்தக் கோபுரம், கோயிலின் நுழைவுப் பகுதியை தனித்துவமாக காட்சியளிக்கச் செய்கிறது.கோபுரத்தின் மேல்பகுதியில், தெய்வ உருவங்கள், சுதைச் சிற்பங்கள் உள்ளிட்ட அலங்காரக் கூறுகள் இடம்பெற்றுள்ளன. இவை கோபுரத்திற்கு வழக்கமான
ஆலயக் காட்சியமைப்பையும் ஆன்மிகத் தோற்றத்தையும் வழங்குகின்றன.
கோயிலின் நுழைவாயிலுக்கு தனி அழகைச் சேர்ப்பது கோபுரத்தின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பெரிய குதிரைச் சிற்பங்களும், அவற்றின் கீழ்ப்பகுதியில் காணப்படும் சிறிய காவலர் மற்றும் காவல் உருவங்களுமே.கோபுரத்தின் வலது மற்றும் இடது புறங்களிலும் கம்பீரமாக நிற்கும் இந்தக் குதிரை உருவங்கள், பாரம்பரிய கிராமியக் காவல் மரபை நினைவூட்டுகின்றன. அதன் கீழ் அமைந்துள்ள சிறிய காவலர் உருவங்கள், கோயில் நுழைவாயிலுக்கு ஒரு தனித்துவமான காட்சியமைப்பை உருவாக்குகின்றன. இவை கோயிலைச் சுற்றியுள்ள உள்ளூர் சமய மற்றும் நாட்டுப்புறக் கலை மரபுகளோடும் தொடர்புடையதாகத் தோன்றுகின்றன.
தொலைவில் இருந்து வீரக்குடி கோயிலை பார்க்கும்போது, இந்தக் காட்சியமைப்பு இன்னும் அழகாகத் தெரிகிறது. ஒரு பெரிய வேப்ப மரத்தின் பின்னணியில் உயர்ந்து நிற்கும் கோபுரம். அதன் இருபுறங்களிலும் கம்பீரமாக நிற்கும் வெள்ளைக் குதிரைகள், அவற்றின் கீழ் காவலர் உருவங்கள்.. இவை ஒன்றாக இணைந்து, கோயிலின் நுழைவாயிலுக்கு ஒரு தனித்துவமான கிராமிய அழகை உருவாக்குகின்றன.
குறிப்பாக, வேப்ப மரத்தின் இயற்கையான பசுமையும், கோபுரத்தின் உயரமும், இருபுறங்களிலும் நிற்கும் குதிரைச் சிற்பங்களும் இணைந்து உருவாக்கும் இந்தக் காட்சி, கோயிலை முதன்முதலில் காண வரும் ஒருவரின் மனதில் அமைதியான ஓர் உணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இவ்வாறு, கோயிலின் உள்ளே பல நூற்றாண்டுகளின் வரலாற்றை கல்வெட்டுகள் சொல்லிக்கொண்டிருக்க, அதன் வெளிப்புற நுழைவாயில் இயற்கை, கோயில் கட்டிடக்கலை மற்றும் உள்ளூர் காவல் மரபின் காட்சிகளை ஒன்றாக இணைத்து, வீரக்குடி திருவேடநாதர் திருக்கோயிலுக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது.
திலகவதி


