Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரங்கனே ஆட்கொண்ட திருப்பாணாழ்வார்

பகுதி 2

லோகசாரங்கர் ஸ்ரீரங்கம் அடைந்து, ரங்கநாதரின் சந்நதியை நெருங்கினார். அரங்கன், சந்நதியின் கதவுகளை உள்பக்கமாக மூடிக்கொண்டார். மூடிய கதவுகளைப் பார்த்த லோகசாரங்கருக்கு மூச்சே நின்றுவிடுவது போல இருந்தது. சுமந்திருந்த குடத்தைக் கீழே வைத்தார். சந்நதியின் கதவைத் தொட்டுத் தொட்டு கலங்கினார்.

`‘அரங்கா! திருமஞ்சனம் செய்விக்க வேண்டாமா? தவறு ஏதேனும் புரிந்திருப்பின், தண்டனையாக என் உயிரைக்கூட பறித்திருக்கலாமே! இப்படி கதவை மூடிக் கொண்டுவிட்டாயே! என் முகத்தைப் பார்க்கக்கூட உனக்கு பிடிக்கவில்லையா? நான் இப்பொழுது என்ன செய்யட்டும்? இங்கேயே கிடந்துவிடவா?’’ என புலம்பிய படியே தரையில் வீழ்ந்தார். அவர் மனதில் அரங்கன் தோன்றினார்.

‘`சாரங்கரே! உன் பக்தி உயரியதுதான். உன் அனுஷ்டானங்கள் மெச்சத் தகுந்ததுதான். ஆனாலும் நீ திருப்பாணரை நடத்திய விதம் எனக்கு ஒப்பவில்லை. உன் பக்தியைப்போல அவன் பக்தியும் உயர்ந்ததுதான். இப்பொழுது நீ செய்யவேண்டியது ஒன்றுதான். நேராக திருப்பாணரிடம் செல். உன் தோள்களில் திருப்பாணரைச் சுமந்து இங்கு அழைத்து வா! இது என் கட்டளை’’ லோகசாரங்கருக்குத் தன் தவறு புரிந்தது. நேராக காவிரியின் தென்கரைக்கு ஓடோடிச் சென்றார். திருப்பாணர் அதே இடத்தில் கண்களை மூடி, நின்றபடி பண்ணிசைத்துக் கொண்டிருந்தார். லோகசாரங்கர், திருப்பாணரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். உடல் முழுதும் காவிரியாற்று மண் பட்டிருந்தது. திருப்பாணர் தன் காலில் விழுந்து வணங்கும் லோக சாரங்கரைக் கண்டு நகர்ந்தார்.

‘`தேவரீர்! தாங்கள் என் காலில்

விழலாமா? நான் தீண்டத்தகாதவன்’’

`‘இல்லை! இல்லை! பக்தியில் தாங்கள், எல்லோரையும்விட உயர்ந்தவர். தங்களை, அரங்கன், சந்நதிக்கு

அழைத்திருக்கிறான்’’`‘என்ன! என் அரங்கனா! என்னையா! என் காலடி ஸ்ரீரங்கம் நகருக்குள் படலாமா?’’

‘`அரங்கன் கட்டளைப்படி தங்களை நான் தோளில் சுமந்து செல்லத் தயாராக இருக்கிறேன். தங்களின் காலடிபட வேண்டிய சூழல்கூட அமையாது’’

`‘வேண்டாம். அப்படியெல்லாம் வேண்டாம்’’

‘`தாங்கள் அரங்கனின் கட்டளையை மீறலாகாது’’ அரங்கன் பேரால், கட்டளையென்பதால் திருப்பாணரால் மீற முடியவில்லை. முனிவாகனம் என்றழைக்கக் கூடிய முனிவரின் தோள்களில், திருப்பாணர் அமர்ந்து கொண்டார். லோகசாரங்கருக்கு அரங்கனையே சுமப்பதுபோல பெருத்த உவகை. பிராட்டிகளுடன் அரங்கன், திருப்பாணர் வருகையை எதிர்நோக்கியிருந்தார். செய்தியறிந்து அடியவர்கள் கூட்டம் கூடிவிட்டது. எங்கும் வேத முழக்கம், பாசுரங்கள், ‘அரங்கா... அரங்கா..’ எனும் கோஷம் ஸ்ரீரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது.

அரங்கனைப் பார்க்கிற அந்தக் கணத்தை எதிர் நோக்கி கண்ணீர் மல்க திருப்பாணர், சந்நதி வந்தடைந்தார். குழந்தைக்குத் தாயை முழுவதுமாகத்தான் பிடிக்கும். ஆனாலும் குழந்தையின் முதல் பார்வை தாயின் மார்பினை நோக்கியே இருக்கும். அதுபோலவே, திருப்பாணருக்கு அரங்கனை முழுவதுமாய் தரிசிக்கப் பிடித்தாலும், அவர் கண்கள் அரங்கனின் பாதங்களைத்தான் முதலில் தரிசித்தன. மனதில் பாசுரம் பிறந்தது.

“அமலன் ஆதிபிரான் அடியார்க்கென்னை ஆட்படுத்த

விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்

கமலப் பாதம் வந்து என் கண்ணினுள் வொக்கின்றதே’’

எல்லோருக்கும் காரணனாய், நன்மை செய்பவனாய், என்னைத் தன்னளவில் மட்டும் வைத்துக்கொள்ளாமல், தன் அடியார்களுக்கு ஆட்படுத்தும் தூய்மையுடையவனாய், விண்ணவர்கட்கு நாயகனாய், திருவேங்கடவன், நிமலன், நின்மலன், நீதியை நிலைநாட்டும் நேசனாய் எழுந்தருளியுள்ள அரங்கனே! உன் பாதங்கள் என் கண்களில் புகுந்துவிட்டன.

பாசுரத்தின் பொருள் புரிய, அடியார்கள் வாழ்த்தினார்கள். திருப்பாணாரின் முதல் பாசுரத்திலேயே அரங்கன் அகமகிந்தான். திருப்பாணருக்கு இன்னும், இன்னும், அரங்கனை அங்கம் அங்கமாக தரிசிக்க, மனம் விழைந்து பூரித்தது. திருப்பீதாம்பரத்தை தரிசித்தபடியே, இரண்டாம் பாசுரம் பிறந்தது. ஒரு தாய், தன் குழந்தைக்கு ஒரு கன்னத்தில் முத்தமிட்டால், மறு கன்னத்தைக் காட்டும்.

அதில் முத்தமிட்டவுடன் நெற்றியைக் காட்டும். ஒவ்வொரு அங்கமாக இங்கே! இங்கே! என்று ஒவ்வொரு அவயவமாகக் காட்டும். தாயும் சலிக்காமல் முத்தமிடுவாள். அந்த உணர்வு காலம் முழுதும் தொடராதா? என்று வேண்டுவாள். அது போலத்தான் அரங்கன் தன் ஒவ்வொரு அங்கமாகக் காட்டி இதற்கு ஒரு பாசுரம்! இதற்கு ஒரு பாசுரம் என்று திருப்பாணரிடம் கேட்பது போலிருந்தது.

அரங்கன், தன் திருநாபிக்கமலத்தைத் தரிசிக்கச் செய்ய, திருப்பாணருக்கு மூன்றாம் பாசுரம் பிறந்தது.

அரங்கன், தன் திருவயிற்றைத் தரிசிக்கச் செய்ய, திருப்பாணருக்கு நான்காம் பாசுரம் பிறந்தது.

அரங்கன், தன் திருமார்பைத் தரிசிக்கச் செய்ய, திருப்பாணருக்கு ஐந்தாம் பாசுரம் பிறந்தது.

அரங்கன், தன் திருக்கழுத்தைத் தரிசிக்கச் செய்ய, திருப்பாணருக்கு ஆறாம் பாசுரம் பிறந்தது.

அரங்கன், தன் திருநாவையும், திருப்பவள உதடுகளையும் தரிசிக்கச் செய்ய, திருப்பாணருக்கு ஏழாம் பாசுரம் பிறந்தது. இந்தப் பாசுரத்தை அவர் பண்ணாக இசைக்கையில், அரங்கனே நெகிழ்ந்து போயிருக்க வேண்டும்.

``கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரைபோல்

மெய்யனார் துளப விரையார் கமழ்

நீள் முடி எம்

ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்

செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே’’

அதுவும் அந்த இறுதி வரியில், ‘ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே’ என்று முடிக்கையில் பிராட்டிகள் இருவரும் அரங்கனின் கண்களைப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.அரங்கன், தன் திருக்கண்களைத் தரிசிக்கச் செய்ய, திருப்பாணருக்கு எட்டாம் பாசுரம் பிறந்தது.அரங்கன், தன் மொத்தத் திருமேனியையும் தரிசிக்கச் செய்ய, திருப்பாணருக்கு ஒன்பதாம் பாசுரம் பிறந்தது.

சந்நதியில் வைபவம் நடந்தேறிக் கொண்டிருந்தது. திருப்பாணர் உன்மத்த நிலையில் இருந்தார். நா தழுதழுக்க, கண்ணீர் மல்க, கரங்களைக் கூப்பிய வண்ணம், பத்தாம் பாசுரத்தைத் தொடங்கினார்.

``கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே’’

பாசுரம் முடிந்தவுடன் ஒரு பேரமைதி அங்கே நிலவியது. அரங்கனுக்கு ஆனந்தம். திருப்பாணர், திருப்பாணாழ்வார் ஆகிவிட்டார். அரங்கன், திருப்பாணாழ்வாருக்கு மேலும் பெருமை சேர்க்க எண்ணினான். பிராட்டிகள் இருவருக்கும் அரங்கனின் மனவோட்டம் புரிந்தது. திருப்பாணாழ்வாரை அருகில் அழைத்தார். அணைத்தார். திருப்பாணாழ்வாரைத் திருமேனி

யுடன் வைகுண்டம் செல்லப் பணித்தார்.

உபன்யாசத்தை பின்பழகிய ஜீயர் முடித்தபோது, அனைவரும் அரங்கனின் பெருங் கருணையை எண்ணிச் சிலிர்த்தனர். ஜீயர் தொடர்ந்தார்; நம் திருப்பாணாழ்வார் ஒருவர் மட்டுமே திருவுடலுடன் வைகுண்டம் சென்றவர். அவர் தவிர, ஆண்டாள் பிராட்டியும் அரங்கனுக்கு மாலையிட்டதால், திருவுடலுடன் வைகுண்டம் சென்றாள். பத்து பாசுரங்கள் மட்டுமே பாடி, அரங்கனின் உள்ளம் கவர்ந்தவர் திருப்பாணாழ்வார்!

கோதண்டராமன்