Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணாமலையாருக்கு அரோகரா...

முன்னுரை

கார்த்திகை மாதம் அற்புதமான மாதம். தமிழ் மாதங்களில் எட்டாவதாக வருகின்ற மாதம். நாம் எட்டவேண்டிய இலக்கு எது என்பதைக் காட்டும் மாதம். வழிகாட்டும் மாதமாக இருப்பதால்தான் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகின்றோம். விளக்கு தானே வழிகாட்டும். அக இருள், புற இருள் இரண்டையும் நீக்கி ஆன்மிக வழியைக் காட்டும் அற்புதமான இந்த கார்த்திகை மாதத்தின் மிகச் சிறப்பான பண்டிகை தான் கார்த்திகை தீபத்திருநாள். இந்த கார்த்திகை தீபத் திருநாள் எதற்காகக் கொண்டாடப்படுகின்றது? திருவண்ணாமலையில் மட்டும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுவது ஏன்? அந்தத் தலத்தின் முக்கியத்துவம் என்ன? கார்த்திகை தீபம் சைவர்களுக்கு மட்டும் உரிய பண்டிகையா? வைணவர்களும் கொண்டாடுகிறார்களா? இப்படிப் பல கேள்விக்கு விடை காண்போமா!

பெயர்க்காரணம்

கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. கார்த்திகை தீபம், கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத் திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது. கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.

வேறு காரணங்கள்

இந்த நாள் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாளாகக் கருதப்படுகிறது. முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மகாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ-விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். அன்று உபவாசம் இருந்து மாலை கார்த்திகை தீபம் ஏற்றியபின் உணவருந்த வேண்டும். சுவாமிக்கு நிவேதனமாக கார்த்திகை பொரி படைக்க வேண்டும். தூய்மையுடைய நெற்பொரியும், தெங்கையும் (தேங்காய்), வெல்லத்தையும் கலந்து பொரி உருண்டையாகச் செய்து, திருக்கார்த்திகை தீபத்தன்று இறைவனுக்கு நிவேதனம் செய்யவேண்டும் என்று சொல்கிறது மயூரக்ஷேத்திர புராணம்.

வானியல் சிறப்பு

ஜோதிட ரீதியாகப் பார்த்தால் சூரியன் விருச்சிக ராசியில் இருக்கும் மாதம் தான் கார்த்திகை மாதம். சூரியனின் கதியை இரண்டுவிதமாகச் சொல்லலாம் சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன், ஐப்பசி மாதத்தில் தன் பலம் இழந்து நீசம் ஆகி, மறுபடியும் ஆரோகண தசையில் உச்சத்தை நோக்கி செய்யும் பயணத்தின் முதல் மாதம் கார்த்திகை மாதம். சுருக்கமாகச் சொன்னால் சூரியன் பலவீனம் நீங்கிய மாதம் என்று இந்த மாதத்தைச் சொல்லலாம். இதே ராசியில் சூரியனிடமிருந்து ஒளிபெறும் சந்திரன் இந்த ராசியில் நீசம் அடைகின்றார். அந்த சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக தம்முடைய நீச கதி நீங்கி ரிஷப ராசியில் உச்சம் பெறுகின்றார் அந்த உச்சத்திற்குக் காரணமாக சூரியன் இருக்கின்றார். சூரியன் தன் பலவீனம் நீங்கி, சந்திரனுக்கு தன் ஒளியால் உச்சம் தரும் பௌர்ணமியில் தான் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகின்றது.

ஒளி காட்டும் தீபம்

வசிஸ்ரவஸ் ஒரு யாகத்தின் நிறைவில் தானம் கொடுத்துக்கொண்டிருந்தார். நசிகேதன் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். “தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப்போகிறீர்களா?” என்று கேட்க, கோபத்தில் தந்தை “ஆமாம். உன்னை எமனுக்குத் தரப்போகிறேன்” என்று சொல்ல நசிகேதன் எமனுலகம் சென்றான். ஊனுடலோடு எமதர்மனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்றுத் திரும்பினான். பூலோகத்திலிருந்து எமனுலகு செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதைப் பார்த்தான் நசிகேதன். இவர்களுக்கு வெளிச்சம் இருந்தால் சுகமாக இருக்குமே என்று நினைத்தான். எண்ணம் செயலாகியது. கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திரத்தன்று யார் வீடுகளில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெளிச்சம் தெரியும். அது மட்டுமல்ல. கார்த்திகை தீபத் திருநாளன்று சொக்கப்பனை எரித்தால் அனைத்து உயிர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும். அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது.

சொக்கப்பனை தரும் ஒளி

அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது. உலக உயிரினங்கள் அனைத்துக்காகவும் மோட்ச தீபம் ஏற்றும் தினம் இது. உலக நன்மை வேண்டி தீபம் ஏற்றி வணங்குவது நம் மரபு. கார்த்திகை என்றாலே ஒளி என்று பொருள். கார்த்திகை தீபத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. நான்முகன் தனது மனைவியான சரஸ்வதி தேவியை விட்டுவிட்டு தான் மட்டும் யாகம் ஒன்றை நடத்தினார். மனைவி இருக்கும் போது வைதிக காரியங்களைத் தனித்துச் செய்யக் கூடாது. தனது கணவன் தன்னைப் புறக்கணித்ததை எண்ணி, கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்துக்குத் தடையாக உலகெங்கும் இருளைப் பரவச் செய்தாள். யாகம் தடைபட்டது. நான்முகன் செய்வதறியாது திகைத்தார். தனது தந்தையான திருமாலிடம் சென்று முறையிட்டார்.

ஜோதிவடிவாய் தோன்றிய பெருமாள்

அன்று கார்த்திகை மாத பௌர்ணமி தினம். திருமால் உடனே தானே ஒரு ஜோதிப் பிழம்பாக உருமாறி நின்றார். அந்தப் பிரகாசத்தில் உலகமே ஒளிர்ந்தது. யாகம் நல்லபடி நிறைவேறியது. இந்தச் சம்பவம் நடந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் திருத்தலத்தில். ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் வேதாந்த தேசிகரின் அவதாரத் தலம் இது. இத்தலத்தில் விளக்கொளிப் பெருமாள் எனும் திருநாமத்தோடு தீபப்பிரகாசராய் சேவை சாதிக்கிறார். ‘‘விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.” (திருநெடுந்தாண்டகம் 14 -2065) என்று இந்தப் பெருமாளை விளக்கின் ஒளியாகவே பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

பழைய காலப் பண்டிகை

கார்த்திகை தீபம் என்பது இன்று நேற்று வந்த நூதனப் பண்டிகை அல்ல. மிகப்பழமையான பண்டிகை. கார்த்திகை விளக்கீடு என்பார்கள். கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். இவ் வுண்மையினை... ‘‘தொல் கார்த்திகை நாள்’’ என்னும் திருஞானசம்பந்தரது பாடல் கூறும். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரம் கார்த்திகையை ‘‘அழல்’’ என்று கூறுகின்றது. ‘‘நீதி இலக்கியங்களில் ஒன்றான பழமொழி, குன்றின்மேலிட்ட விளக்கு’’ என்று கூறுவதும் இக்கார்த்திகை தீப விழாவையே. திருமால் கார்த்திகை மாதத்தில் கண் விழித்து எழுவதாக (உத்தான ஏகாதசி) ஒரு செய்தியும் உண்டு. எனவே கார்த்திகை தீபம் வைணவ ஆகமப்படி எல்லா திருமால் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் திருமங்கை ஆழ்வாரின் அவதார நாள் என்பது இன்னும் சிறப்பு.

அகநானூறு கூறும் விளக்கு

பௌர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நாளில் தெருக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து, வீட்டின் வாசற் படிகளில் மாலைகளைத் தொங்கவிட்டு கார்த்திகை விழாவை கொண்டாடியதை அகநானூறு செய்யுளில் காணலாம்.

‘‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்

புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி

தூதொடு வந்த மழை.’’

இச்செய்யுளில் ‘‘தலை நாள் விளக்கின்’’ என்பதிலிருந்து இவ்விழா பலநாள் கொண்டாடப்படும் விழா எனத் தெறியலாம். இறுதிநாளில் சிறப்பாகக் கொண்டாடப் படும் விழாவே கார்த்திகை தீபவிழா எனக்கொள்ளலாம். அதுவே மகா கார்த்திகை எனவும் வழங்கப்படும். இதனையே சீவக சிந்தா மணியும், ‘‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார்,’’ எனக் கூறுகிறது.

கார்த்திகை தீபம் காண வாருங்கள்

அகநானூறில் இன்னொரு பாட்டு.

(நக்கீரர் பாடியது. பாட்டு எண் 141) ஒரு பெண் தனது தோழிகளிடம் கூறுகிறாள்.

‘‘மழைகால் நீங்கிய மாக விசும்பில்,

குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த,

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்,

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி,

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய,

விழவுடன் அயர வருகதில் அம்ம’’

“பெண்ணே, மழை பெய்யாத காலம் இது. அங்கே பரந்து விரிந்த வானத்தைப் பார். முயல் குட்டி போன்ற வெண்மையான நிறத்தில் முழுமையான சந்திரன் தோன்றுகின்ற பௌர்ணமி தினம். பளிச்சென்று வானில் நிலவு தெரிய, அறுமீன் எனப்படும் ஆறு நட்சத்திரக் கூட்டமான கார்த்திகை நட்சத்திரம் சேருகின்ற காட்சியைப்பார். இருள் விலகிய நாளிலே, தெருக்களிலே வீடுகள்தோறும் அருகருகே விளக்குகளை ஏற்றிவைத்தும், மாலைகளைத் தொங்கவிட்டும், பழமையான வெற்றி பொருந்திய தொன்மை வாய்ந்த ஊரிலே (திருவண்ணாமலை) நடைபெறுகின்ற விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டாமா! நீங்கள் உங்கள் சுற்றத்தாரோடு வாருங்கள்” என்று அழைக்கிறாள்.

எங்கும் அகல் விளக்குகள்

கார்த்திகை மாதத்தில் இல்லங்கள் தோறும் இருளை அகலச் செய்யும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்துக் கொண்டாடுவது வழக்கம். இதனை அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் சிறப்பாகப் பாடியுள்ளன. பாண்டிய மன்னன் பெருங்கடுங்கோ, அகநானூற்றுப் பாடல் ஒன்றில், கார்த்திகை விளக்குகளை இலவ மரத்தில் பூக்கும் பூக்களுக்கு உவமையாகக் கூறியுள்ளான். “பெருவிழா விளக்கம்போல, பலஉடன் இலைஇல மலர்ந்த இலவமொடு” என்பன அப்பாடல் வரிகள். மிகப் பெரிய விழாவான திருக்கார்த்திகையின் போது ஏற்றப்படும் வரிசையான விளக்குகளைப்போல, இலைகளே இல்லாத இலவ மரத்திலே வரிசையாகப் பல பூக்கள் பூத்திருந்தனவாம்.

நற்றிணையும்

மலைபடுகடாமும்

போற்றும் கார்த்திகை

சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்

காட்டுகிறது நற்றிணை.

‘‘வீரை வேண்மான் வெளியன் தித்தன்

முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்

வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்

கையற வந்த பொழுது - நற்றிணை 58

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்

சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்”

- பரிபாடல்

அகலிரு விசும்பின் ஆஅல் போல

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை”

- மலைபடுகடாம்

திருவண்ணாமலையில் தீபவிழா

எங்கு தீப விழா நடந்தாலும் சிறப்பான விழா என்பது திருவண்ணாமலையில் தான் நடைபெறுகிறது. அங்கு மலை மேல் ஏற்றப்படும் தீபங்களின் எதிரொலி தான் மற்ற சிவன் கோயில்களிலும், இல்லங்களிலும் ஏற்றப்படும் தீபங்கள். எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் பஞ்சபூதத் தலங்கள் முக்கியம்.

* ஏகாம்பரநாதர் திருக்கோயில் (காஞ்சிபுரம்) பிருத்வி லிங்கம் (நிலம்)

* அண்ணாமலையார் திருக்கோயில்(திருவண்ணாமலை) ஜோதி லிங்கம் (நெருப்பு)

* திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் (திருச்சி) ஜம்பு லிங்கம் (நீர்)

* நடராஜர் திருக்கோயில் (சிதம்பரம்) ஆகாச லிங்கம் (ஆகாயம்)

* காளத்தீஸ்வரர் திருக்கோயில் (திருக்காளத்தி)வாயு லிங்கம்(காற்று).

இத்தலங்களில் ஜோதியாகவே காட்சியளிக்கும் தலம் திருவண்ணாமலை என்பதால், இங்கு கார்த்திகை தீபத்திருநாள் பெரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையும் கார்த்திகை தீபமும்

திருவண்ணாமலை திருத்தலம் அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகிறது. “அருணம்” என்றால் நெருப்பு, “அசலம்” என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பார்கள் பெரியவர்கள். இம்மலையின் பெயரை அடிக்கடி சொல்லி வருவது ஓம் நமசிவாய மந்திரத்தை கோடி முறை உச்சரிப் பதற்குச் சமம். ஈசனே மலையாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று. இத்தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர், அம்பிகை உண்ணா முலையாள். பல மகான்களையும் கவர்ந்திழுத்த

புண்ணிய பூமி இந்தத் தலம்.

சொல்லில் அடங்கா ரகசியம் இந்த மண்ணுக்கு உண்டுசில ஊர்களில் ஓரிரு இடங்கள் விசேஷமாக இருக்கும். ஊரே விசேஷம் என்றால் அது திருவண்ணாமலை தான். தொட்ட இடங்களும், கால் பட்ட இடங்களும் கதைகள் பல சொல்லும். திருவண்ணாமலை. பல மகான்களைக் கவர்ந்த காந்த மலையாய் காட்சியளிக்கிறது. அருணகிரிநாதர் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம்சுரத் குமார் என்று பல ஞானிகள் இங்கே வந்து அண்ணா மலையாரின் அடிவாரத்தில் அமைதி பெற்றனர். ஞானம் பெற்றனர். கூர்மப்பாறை, மயிலாடும்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பாறைகளுடனும், அல்லிச்சுனை, அரளிச்சுனை, ஆலமர, அத்திமரச் சுனைகளுடனும் அமைந்துள்ளது.

பார்த்தாலே பரவசம் நினைத்தாலே முத்தி

திருவண்ணாமலை. புவியியல் கூற்றுப்படி கடல் மட்டத்திற்கு மேல் 2,668 அடி உயரத்தில் இதன் சிகரம் இருக்கிறது. இதன் கிழக்கு முகப்புப் பகுதி 718 ஏக்கர் பரப்பளவு உடையது. மலையை சுற்றி எட்டு சிவலிங்க கோயில்கள் உள்ளன. ஒரே மலையில் ஏராளமான சிகரங்கள் அடங்கிய சுயம்புவன மலை. கிழக்கு பாகத்திலிருந்து பார்த்தால் மலை ஏகலிங்கமாகத் தெரியும். சற்று தள்ளி நின்று பார்த்தால் சிவசக்தி சொரூபமாக இரண்டாகத் தோற்றமளிக்கும். மேற்கு திக்கில் இருந்து பார்த்தால் மூன்று சிகரங்களை பார்க்கலாம் சற்று தூரம் நடந்து திரும்பி பார்த்தால் ஈசனின் பஞ்ச முகங்கள் போல் தெரியும். திருவாரூரில் பிறந்தால் முக்தி; தில்லையை தரிசித்தால் முக்தி; காசியில் இறந்தால் முக்தி; ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும்.

அடடா இத்தனை கோபுரங்களா?

“கோபுர தரிசனம் பாப விமோசனம்” என்பார்கள். நடுநாட்டு தலங்களில் முதன்மையான திருவண்ணாமலை கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ஏழு பிரகாரங்கள் கொண்ட பிரமாண்டமான கோயில். இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் 11 அடுக்கு உடையது. 217 அடி உயரம் கொண்டதாய் உள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலை தலவிருட்சமான மகிழ மரத்தின் கிழக்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் திருக்கோயிலின் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேர தரிசிக்க முடியும். இதில் தெற்கு கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்றும், மேலக்கோபுரம் பேய்க் கோபுரம் என்றும் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றும் அழைக்கப்படுகின்றன. திருமஞ்சன கோபுரம் 157 அடி உயரமும், மேற்கு கோபுரம் 144 அடி உயரமும், அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி உயரமும் கொண்டுள்ளது. இக்கோயிலில் ஒன்பது கோபுரங்களில் கணக்கில் சேராத கோபுரம் ஒன்றும் உண்டு. அதுதான் ரிஷி கோபுரம். கொடி மரத்தை அடுத்து வருவதுதான் ரிஷி கோபுரம்.

தீமிதி நடக்கும் சிவன் கோயில்

திருவண்ணாமலை திருக்கோயிலில் இறைவனுடன் சரிபாதியாக அம்பிகை உண்ணாமலை அம்மன் என்றும் அபித குஜாம்பாள் என்ற பெயரிலும் காட்சியளிக்கின்றார். அம்மனுக்கு தனிசந்நதி உள்ளது. அம்பாள் சந்நதி முன்பு பெரிய மண்டபம் உள்ளது. அங்கு சிலை வடிவில் சித்திரகுப்தரும், கொடி கம்பம், நந்தி நவகிரக சந்நதி ஆகியவையும் உள்ளன. உண்ணாமலை அம்மன் நின்ற திருக்கோல நாயகியாய் அருள்பாலிக்கின்றார். அழகுக்கெல்லாம் அழகாக காட்சி தருகின்றார். அங்கு முன் மண்டப தூண்களில் அஷ்ட லட்சுமிகளை தரிசிக்கலாம். அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடமாக திகழ்கிறது. ஈசனும் ஈஸ்வரியும் வேறு இல்லை என்று இறைவன் இங்கு உணர்த்துகிறார். இறைவனின் இடப்பாகம் பெற அம்பிகை கிரிவலம் வந்து தவம் செய்ததால் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பூரத்தன்று மாலை கோயிலின் உள்ளேயே உண்ணாமலை அம்மன் சந்நதி முன்பு தீமிதி விழா நடைபெறுவது சிறப்பு.

மலையே சிவம், சிவமே மலை

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. இதனை கிரிவலம் என்பர். ஒவ்வொரு பௌர்ணமியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து இங்கு வந்து விடிய விடிய மலை வலம் வருகின்றனர். மலையைச் சுற்றச் சுற்ற, செய்த வினையின் சுற்று குறைந்து மனம் சாந்தம் அடைகிறது. மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும் தரிசிக்கலாம். வழியில் ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள் உள்ளன.

இத்தனை பழமையா?

திருவண்ணாமலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார் இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. இங்குள்ள கிரி வலப்பாதையில் கந்தாஸ்ரமம், விருப்பாச்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்து குகை, சடை சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்து குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன. இந்த மலையில் ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளதால் அந்த காற்றினை நாம் சுவாசிப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும் அங்கு சித்தர்கள் உலா வருவதாலும் மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்னைகளும் நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

ரமணர் தவம் செய்த இடம்

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் பல சந்நதிகள் உள்ளன. விநாயகர்கள், மண்டபங்கள், ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ளது பாதாளலிங்கம் சந்நதி. இங்கு இறைவன் பாதாள லிங்கேஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய சில படிகள் இறங்கி சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது. அங்கு தான் ரமண மகரிஷி தவம் செய்தார். பாதாளலிங்கம் சுற்று மண்டபத்தில் ஏராளமானோர் தியானத்தில் ஈடுபட்டுள்ளதை காணலாம். மரண பயத்தை போக்கும் இந்த பாதாளலிங்கமும், கிரிவலப்பாதையின் மலைக்குப் பின்புறம் அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலய சிவலிங்கமும் விசேஷமானது. செப்பு சிலைகள், அண்ணாமலையார் பாத மண்டபம் என மிக பிரம்மாண்டமான கோயிலாக அமைந்துள்ளது. கோயில் கொடி கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்சலிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவருக்கு தனி சந்நதியும் உள்ளது.

மூன்று முக்கியமான முருகன் சந்நதிகள்

திருப்புகழ் பாடிய அருணகிரியாரின் வாழ்வோடு தொடர்புடைய தலம் திருவண்ணாமலை. அவர் வாழ்வை திருத்தி அருளாளராக மாற்றம் செய்த தலமும் இதுவே. இங்குள்ள மூன்று முருகன் சந்நதிகளிலும் இவர் வாழ்வின் நிகழ்வுகளைக் காணலாம். அருணகிரி தனது தமக்கை ஏதோ கூறியமையால் கோயிலில் உள்ள வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிரைவிட முயன்ற போது முருகன் தடுத்தாட்கொண்டு திருப்புகழ் பாட வைத்துள்ளார். அவர் கோபுரத்து அய்யனார் என்ற பெயரில் கோபுரம் அருகிலேயே உள்ளார். பிச்சை இளையனார் சந்நதி கிளி கோபுரம் அருகே உள்ளது. அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந்தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார்‌. இவர் தான் கம்பத்திளையனார் மண்டபத்தில் காட்சி தருகிறார்.

தீர்த்தங்களால் ஏற்றம்

தீர்த்தங்கள் நிறைந்த ஆலயம் திருவண்ணாமலை கோயிலின் மலைப் பகுதியில் அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலி தீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமலை தீர்த்தம், வருண தீர்த்தம்’ கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக திகழ்கிறது. இவற்றில் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமும் பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம் அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

பௌர்ணமி முக்கியம்

ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் நடந்தாலும், திருவண்ணாமலையை பொறுத்தவரை பௌர்ணமி முக்கியம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் தான் கிரிவலம் செய்கின்றனர். 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கும் நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனத்தெளிவு உண்டாகும். மலையை வலம் வரும்போது இடப் பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாட்சர நாமத்தையோ (நமசிவாய, சிவாயநம) அல்லது திருமுறைகளையோ (தேவாரம், திருவாசகம்) உச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து வேறு எதையும் பேசக் கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ வேகமாகவோ மற்றவர்களை இடித்துக் கொண்டோ செல்லக் கூடாது.

கார்த்திகை பௌர்ணமி

12 மாத பௌர்ணமிகளிலே கார்த்திகை பௌர்ணமியில்தான் கார்த்திகை தீபம் நடைபெறுகிறது. ஆனந்த ஜோதியாய், அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் இறைவன் காட்சிதரும் விழா தீபத் திருவிழா. கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பத்துநாட்களும் உற்சவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறு கிறது. கார்த்திகை தீபத்தன்று மலையில் ஏற்றப்படும் தீபத்தால் திருவண்ணாமலை ஒளிரும். திருவண்ணாமலை தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தி அடைவார்கள் என்று அருணாச்சல புராணம் கூறுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை கண்டவர்களின் பசிப்பிணி விலகும். துன்பங்கள் பனிபோல் நீங்கும். ஜோதி தரிசனத்தைக் காணும் பக்தர்களுக்கு 21 தலைமுறைக்கு (முன் 10 தலைமுறை, பின்னல் வரப்போகும் 10 தலைமுறை, நாம்) முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பரணி தீபம்

தீபத்திருநாள் அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சந்நதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜைசெய்வர். பின்பு அந்தத் தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளு கிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணா முலை அம்மன் சந்நதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணி தீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப் படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நதியில் வைக்கின்றனர்.

கார்த்திகை மஹா தீபம்

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலை யின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீஸ்வரர் தீபமண்டபத்திற்கு வருகிறார். அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம். மகாதீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சந்நதியை விட்டு வெளியே வருவதில்லை. மலை மேல் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும். 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக ஆயிரம் கிலோ காடா துணி, 3000 கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.

சொக்கப்பனை

கார்த்திகை தீபம் மூன்று தினங்களாகக் கொண்டாடப்படுகின்றது. அதில் முதலாவதாக குமரலாய தீபம். இரண்டாவது சர்வாலய தீபம் மூன்றாவது விஷ்ணுவாலய தீபம். முதல் நாள் தீபமான குமரலாய தீபம் முருகப்பெருமான் ஆலயங்களில் வழிபடும் முறை. விஷ்ணுவாலய தீபம் விஷ்ணு ஆலயங்களில் ரோகிணி நட்சத்திரத்தில் வரும் கார்த்திகை தீபத்திருநாள் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் தீபத் திருநாள் சர்வாலய தீபம். கோயில்கள் மற்றும் இல்லங்களில் தீபங்கள் ஏற்றப்படும் இல்லத்தில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. கார்த்திகை தீப திருநாளில் சொக்கப்பனைக்கு நெருப்பு வைத்து கொண்டாடி வருகின்றோம். பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக்கூம்பின் முன் சுவாமி எழுந்தருள்வார். சில கோயில்களில் அம்பாளும் சுவாமியும் எழுந்தருள்வார்கள்.

சில கோயில்களில் பஞ்ச மூர்த்திகள் (விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) எழுந்தருள்வார்கள். அவர் களுக்கு தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்து விட்டு எரியும் அந்த ஜோதியை சிவமாகவே எண்ணி வழிபடுவார்கள். சில ஊர்களில், சொக்கப்பனை எரிந்து முடித்ததும், அதிலிருந்து பெறப்படும் கரியை தைலத்துடன் சேர்த்து ரட்சையாக, காப்பாக பூசிக் கொள்வார்கள். சாம்பலை எடுத்துச் சென்று வயல்காடுகளிலும் தூவுவார்கள். இதனால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீபத்தின் இன்னொரு சிறப்பு பனை ஓலைக் கொழுக்கட்டை! தென் தமிழகத்தின் பனை ஓலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்திப்பெற்றது! பச்சரிசி மாவுடன், பாசிப்பயறு, வெல்லம் அல்லது கருப்பட்டி, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, இந்தக் கலவையைப் பனை ஓலையில் பொதிந்து, அவித்துச் செய்யப்படும் பனை ஓலைக் கொழுக்கட்டை

கார்த்திகை தீப ஸ்பெஷல் எனலாம்.

இந்த வருட தீபத் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்திபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா 24.11.2025 அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிற்று. இன்று 28ம் தேதி தேதி ஐந்தாம் நாள் விழாவில் பெரிய ரிஷப வாகனம்.29ம் தேதி ஆறாம் நாள் வெள்ளித் தேரோட்டம்.வரும் 30 தேதி ஏழாம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம்.டிசம்பர் 1ம் தேதி எட்டாம் நாள் விழாவில் மாலை பிச்சாண்டவர் உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி.

வரும் 2ம் தேதி ஒன்பதாம் நாள் கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள்.

வரும் 3ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக, காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத் திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி தொடர்ந்து மூன்று நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதேபோல், தீபத் திருவிழாவில் நிறைவாக ஐயங்குளத்தில் 4ம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெறும்.'