Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏன் ? எதற்கு ? எப்படி?

?வடக்கு திசையில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது என்கிறார்களே ஏன்?

- கோ.செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.

வடக்கு திசையில் உட்கார்ந்து என்பது அல்ல, வடக்கு திசையை நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. சாஸ்திர ரீதியாக சிராத்த தினத்தில் பித்ரு ஸ்தானத்தில் வரிக்கப்படும் பிராமணர்களை வடக்கு திசையை நோக்கி அமர வைத்து சாப்பிட வைப்பார்கள். அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, வடக்கு திசையில் காந்தப்புலம் என்பது குவிகிறது என்பதாலும், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கு என்பதாலும், அவ்வாறு சொல்கிறார்கள். அதனால்தான் உண்ணா நோன்பு மேற்கொள்பவர்கள், வடக்கு நோக்கி அமர்வார்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில்கூட வடக்கிருத்தல் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். கபிலர் தன் நண்பன் பாரியின் மறைவிற்குப் பிறகு வடக்கிருந்து (அதாவது வடக்கு நோக்கி அமர்ந்து) உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர்நீத்தார் என்பதை தமிழக வரலாற்றில் அறிந்து கொள்கிறோம். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது என்பதை சாஸ்திரம் மட்டுமல்ல, வரலாறும் வலியுறுத்துகிறது.

?நாம் ஆலயத்திற்குச் செல்ல முடியாதபோது, உண்டியலில் செலுத்த வேண்டிய காணிக்கையை அங்கு செல்பவரிடம் தந்து போடச் சொல்லலாமா?

- த.சத்தியநாராயணன்,அயன்புரம்.

காணிக்கை என்பதற்கும் வேண்டுதல் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உதாரணத்திற்கு, நண்பர் ஒருவர் திருப்பதிக்குப் போகிறேன் என்று உங்களிடம் சொல்லும்போது நம்மால் இயன்ற தொகையை கொடுத்து உண்டியலில் சேர்த்துவிடுங்கள் என்று சொல்வதில் தவறில்லை. அதே நேரத்தில் எனக்கு நீண்ட நாட்களாக வேண்டுதல் ஒன்று பாக்கி இருக்கிறது, என்னால் செல்ல இயலவில்லை, அதற்கு பதிலாக இந்த தொகையை உண்டியலில் சேர்த்துவிடுங்கள் என்று சொல்லிக் கொடுத்து அனுப்புவது சரியல்ல. இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது, சிரத்தையுடன் கூடிய பக்தியை மட்டுமே. நம்முடைய வேண்டுதலை நிறைவேற்ற நாம்தான் நேரில் செல்ல வேண்டும். வெறும் காணிக்கை அல்லது நன்கொடை மட்டும்தான் என்றால் தாராளமாக அங்கு செல்பவர்களிடம் அதனை கொடுத்து அனுப்பலாம்.

?இந்த தலைமுறையினரிடம் பக்தி குறைந்து கொண்டே வருவதற்கு காரணம் என்ன?

- டி.நரசிம்மராஜ், மதுரை.

இந்தக் கருத்தினை அடியேன் மறுக்கிறேன். இது எப்பொழுதுமே ஒவ்வொரு தலைமுறையிலும் வெளிப்படும் வார்த்தைகளாகவே இருக்கிறது. நம்முடைய தாத்தா நமது அப்பாவின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பக்தி குறைவாக இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருப்பார். நம்முடைய தந்தை அவருடைய பிள்ளைகள் ஆகிய நம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு பக்தி சிரத்தை இல்லை என்று திட்டியிருப்பார். இப்போது அதே கருத்தையே நாம் நமது பிள்ளைகளைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருப்போம். இளங்கன்று பயமறியாது என்பதால், இளம் தலைமுறையினருக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. அதனால் அவர்களிடத்தில் பக்தி குறைந்திருப்பதாக நாம் கருதுகிறோம். அதே இளம் தலைமுறையினர் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தவுடன் பயத்துடன் கலந்த பயபக்தி என்பது அவர்களிடத்தில் தன்னால் வந்து சேர்ந்து விடுகிறது. இளம் தலைமுறையினரிடம் பக்தி குறைந்துள்ளது என்ற எண்ணம் காலம் காலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் இருக்கும் வயதானவர்களின் கருத்தாக உள்ளதே தவிர, உண்மையில் பக்தி என்பது நம் ரத்தத்தில் கலந்தது என்பதே நிதர்சனமான உண்மை.

?புதிய ஆடைகள் வாங்கும்போது எந்த தெய்வத்தின் முன்பு வைத்து வணங்கிவிட்டு உடுத்திக் கொள்ள வேண்டும்?

- கே.எம்.ஸ்வீட்முருகன்,கிருஷ்ணகிரி.

ஆள்பாதி, ஆடை பாதி என்பார்கள். ஆடை என்பது நமது வளமான வாழ்க்கையை எடுத்துக்

காட்டுவது என்பதால், மகாலட்சுமித் தாயாரை வணங்கிவிட்டு உடுத்திக் கொள்ளலாம். மகாலட்சுமியை நினைத்து, புதிய ஆடைகளை உடுத்திக் கொள்வதற்கு முன்னால் மஞ்சள், குங்குமத்தை ஆடையின் ஒரு மூலையில் லேசாக தடவிவிட்டு அதன் பிறகு உடுத்திக் கொள்ளலாம். திருமகளின் ஆசியுடன் அந்த ஆடையை உடுத்திக் கொள்ளும்போது செல்வவளம் பெருகும் என்பது நமது நம்பிக்கையாக உள்ளது.

?கழுத்தில் ருத்ராட்சை போட்டால் அசைவ உணவுகள் சாப்பிடலாமா?

- இரா.சேது, ஓசூர்.

ருத்ராக்ஷம் அணிந்து கொள்வதற்கும், உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. உணவுப் பழக்கம் என்பது தீய நடத்தை அல்ல. அதே நேரத்தில், மது அருந்துதல், விலைமாதருடன் புணர்தல், களவு, பொய் உரைத்தல் போன்றவையே தீய செயல்கள். இதுபோன்ற செயல்களை ருத்ராக்ஷம் அணிந்து கொண்டு செய்வதால், கடுமையான பாவம் என்பது வந்து சேர்ந்துவிடும்.

?வீட்டு வாசலில் பசுமாடு வந்தால் நல்லது என்றும், எருமை மாடு வந்தால் கெட்டது என்றும் சொல்வது உண்மையா?

- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இல்லை. இரண்டுமே பால் தரக்கூடியதுதான். பசும்பாலை மட்டுமா நாம் அருந்துகிறோம், எருமைப்பாலையும் உபயோகிக்கத்தானே செய்கிறோம். எருமை மாட்டின் பால் மிகவும் ஆற்றலைத் தரவல்லது என்பதால்தானே எருமை மாட்டினையே வளர்க்கிறார்கள். பசுமாடு வந்தால் மட்டுமே மகாலட்சுமி வருவார், எருமை மாடு வந்தால் எமன்தான் வருவார் என்று எண்ணுவது தவறு. கிராமத்தில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரமே எருமைமாடுதான் என்பதால், அந்தக் குடும்பங்களைப் பொறுத்தவரை எருமைமாடு என்பதும் அவர்களை வாழ வைக்கும் தெய்வமே. ஆக, பொறுமை மற்றும் கடும் உழைப்பின் உருவமாகவே காட்சி தரும் எருமை மாட்டினை தவறாக சித்தரிப்பது முற்றிலும் தவறு. எருமைமாடு என்பது ஆண்டவன், ஏழை மக்களுக்குத் தந்த வரப்பிரசாதம் என்பதால், அது வீட்டு வாயிலில் வந்து நின்றாலும் நல்லதுதான். இதிலே ஐயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

?தர்ப்பைப் புல்லை வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?

- ஜெ.மணிகண்டன், வேலூர்.

அவசியமில்லை. தர்ப்பைப்புல் என்பது புனிதத்தன்மையை தரவல்லது. பசுவின் சிறுநீர் ஆகிய கோமியம் என்பதும் புனிதத்தன்மையைத் தரவல்லதுதான். அதற்காக கோமியத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவதில்லையே. பஞ்சபாத்திரம் - உத்தரணி, தூபக்கால், பூஜைத் தட்டு போன்ற பொருட்களை பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். அந்தப் பொருட்கள் சதா சர்வகாலமும் பூஜை அறையில்தான் இருக்கின்றன. ஆனால், அவற்றை நாம் தனியாக வழிபடுவதில்லையே. அதுபோலத்தான் தர்ப்பைப்புல் என்பதும், ஒரு புனிதத்தன்மையை தரக்கூடிய பொருளே தவிர, இதனை கடவுளாக நினைத்து வழிபட வேண்டிய அவசியம் இல்லை.