Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தெளிவு பெறுவோம்

?மரம் செடி கொடிகளை இப்பொழுது நாம் கண்ணால் கூட பார்க்க முடியவில்லையே?

- முரளி, சிவகங்கை.

வாஸ்தவம் தான். விருட்ச தரிசனம் வினைகளைப் போக்கும் என்பார்கள். ஆனால் நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து விட்டோம். நகரங்களில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டிடங்களும் தண்ணீர் உள்ளே போக முடியாத தார் சாலைகளும் தான் இருக்கின்றன. வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிட்டது. இது தவிர்க்க முடியாதது என்றாலும் கூட இபொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை நம்முடைய வீட்டின் பால்கனி போன்ற பகுதிகளிலோ சிறிய வீடாக இருந்தாலும் மாடியில் கிழக்குப் பகுதிகளில் துளசி செடி மற்றும் சிறு கொடி தாவரங்கள் போன்றவற்றை வளர்க்கலாம் துளசி வில்வம் புஷ்ப செடிகள் இவற்றை பார்க்கும் போது நம்முடைய மனது தெளிவு பெறும் அது மட்டுமல்ல நம் வீட்டு மலர்களை நம் கையால் பறித்து இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்வது என்பது விலை கொடுத்து வாங்கும் மலர்களை விட சிறப்பான வழிபாடு. குறைந்தபட்சம் சுற்று சுவரை ஒட்டி செவ்வரளி செடிகளை வளர்க்கலாம் அதற்கு பெரிய அளவில் இடம் தேவை கிடையாது.

?வெற்றிலை போடுகிறவர்கள், ஏன் காம்பைக் கிள்ளி விட்டு போடுகிறார்கள்?

- மகேஸ்வரி, மதுரை.

வெற்றிலை என்பது மங்களகரமானது. தாம்பூலம் என்று சொல்வார்கள். வெற்றிலையின் நுனியில் மகாலட்சுமியும், மத்தியில் சரஸ்வதியும், காம்பில் மூத்த தேவியும் (அதாவது மூதேவி) இருப்பதாக ஐதீகம் எனவே மூத்த தேவியான காம்பைக் கிள்ளிப்போட்டு விட்டு, வெற்றிலையைப் போடுகிறார்கள்.

?மனித உடம்பில் மிகப்பெரிய விந்தை எது?

- பலாஜி சந்தோஷம், திருச்சி.

கடவுளின் படைப்பில் மனித உடம்பே எவ்வளவு பெரிய விந்தை!.இரட்டையாக படைக்கப்பட்டதெல்லாம் ஒரே வேலையை செய்கின்றன. உதாரணம்: கண்கள்,காதுகள், மூக்கு துவாரங்கள் ஒன் றாக படைக்கப்பட்டதெல்லாம் இரண்டு வேலையைச் செய்கின்றன. உதாரணம்: வாய்.

?அனுமனை சிறிய திருவடி என்று அழைக்கிறார்களே, சரியா?

- சசிகுமார், கேரளா.

கருடனை பெரிய திருவடி என்பதால் அனுமனை சிறிய திருவடி என்று சிலர் அழைக்கின்றனர். ஆனால் வைணவ மரபில் அனுமனை சிறிய திருவடி என்று அழைக்கும் வழக்கம் இல்லை. திருவடி என்றால் அனுமனையும், பெரிய திருவடி என்றால் கருடனையும் குறிக்கும் வழக்கம் உண்டு. கம்பர் அனுமனை குறிக்கின்ற பொழுது திருவடி என்றுதான்

குறிக்கின்றார்.

பொரு அரு வேலை தாவும் புந்தியான், புவனம் தாய

பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்த்த தாள்போல்

உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன்; உவமையாலும்

திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்.

இதில் அனுமனை திருவடி என்றே கம்பர் குறிப்பிடுகின்றார். வைணவ உரையாசிரியர்கள் எங்கும் அனுமனை சிறிய திருவடி என்று அழைப்பதாகத் தெரியவில்லை. திருவடி என்றே அழைக்கிறார்கள். பெருமாளுக்கு வாகனமாய் இருப்பதோடு அவருடைய திருவடிகளையும் கைகளில் தாங்குகையால் கருடன், அனுமன் இருவருக்கும் திருவடி என்றழைப்பதே மரபு.

?வித்தியாசமான முருகன் கோயில் ஏதாவது இருக்கிறதா?

- நித்யா, திருநெல்வேலி.

உண்டு. ஒரு சில சொல்லுகின்றேன்.

1. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

2. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

3. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

?வேத அறிவு இருந்துவிட்டால் நாம் ஆன்மிகத்தில் உயர் நிலையை அடைந்துவிட முடியுமா?

- அருண்குமார், சென்னை.

அது துணைபுரியும்.ஆனால் வெறும் வேத படிப்பில் ஆன்மிகம் வந்துவிடாது. இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அருமையான விளக்கம் தருகின்றார். பஞ்சாங்கத்தில் இவ்வளவு மரக்கால் மழை பெய்யும் என்று போட்டிருக்கும். பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் அதிலிருந்து நீர் வருமா? ஒரு சொட்டு நீர் கூட வராது. வேதங்களையும் நீதி நூல்களையும் படித்தாலும் அவற்றின்படி நடக்காவிட்டால் என்ன பயன்? இதை வள்ளுவரும், ‘‘கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக’’ என்றார். வேதத்தைப் படிப்பதை விட வேதத்தில் சொன்னபடி நடப்பது உயர்வானது.

?ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் சில நாள்கள் கோயிலுக்குச் செல்ல கூடாது என்று சொல்கிறார்களே, குழந்தை பிறந்தது நல்ல விஷயம் தானே!

- ராமகிருஷ்ணன், விழுப்புரம்.

நம் சமய மரபில் தீட்டு என்கிற ஒரு விஷயம் உண்டு, இந்த விஷயத்தை இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். ஒன்று சுபத் தீட்டு. இன்னொன்று அசுபத்தீட்டு. மரணம் போன்ற நிகழ்வுகளில் வரும் தீட்டு அசுபத் தீட்டு. இது இறந்தவர்களோடு கொண்ட பல்வேறு உறவுகளின் அடிப்படையில் ஒரு நாள், மூன்று நாள், பத்து நாள், பதினாறு நாள் என்று வரும். அதைப்போலவே வீட்டில் குழந்தை பிறந்தால் அதனை சுபத் தீட்டு என்பார்கள். இதுவும் அந்தக் குழந்தையோடு கொண்ட உறவுக்குத் தகுந்தபடி நாட்கள் மாறும். இதை பெரியவர்களிடம் கேட்டு கடைபிடிக்க வேண்டும்.

?கோயிலில் உள்ள பூக்களை நாம் சொந்த உபயோகத்துக்கு எடுத்து வரலாமா?

- சந்தியா, வேலூர்.

கோயில் பூக்களை கோயிலுக்குத் தான் வழங்க வேண்டும். அது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது தவறு. இதில் இன்னொரு விஷயமும் சொல்லுகின்றேன். உதாரணமாக தலைக்கு வைத்துக் கொள் வதற்கு பூ வாங்குகின்றோம் அல்லவா, அதை உடனே தலைக்கு வைத்துக் கொள்ளாமல், வீட்டிற்கு கொண்டு வந்து, பூஜையில் சுவாமி படத்திற்கு சாத்தி வழிபட்டு விட்டு. அதில் கொஞ்சம் பிரசாதமாக எடுத்து தலையில் வைத்துக் கொள்வது மிக மிக சிறப்பானது.