Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்

காஞ்சிபுரம் (குமரகோட்டம்)

பகுதி 15

(சென்ற இதழின் தொடர்ச்சி)

1. காஞ்சிபுரம் (குமரகோட்டம்)

அம்மை காமாட்சி, அப்பன் ஏகாம்பரேசுவரர் இவர்களை வணங்கிய பின், சுப்பனைக் காண காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியிலுள்ள குமரகோட்டம் கோயிலை வந்தடைகிறோம். காமாட்சி அன்னை கோயிலுக்கும் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கும் நடுவே சோமாஸ்கந்த வடிவம் போன்று குமரகோட்டம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படைப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மசாஸ்தாவாக முருகன் இங்கு காட்சி தருகிறான். இதன் பின்னால் சுவையான புராணக் குறிப்பு ஒன்று உள்ளது.

சிவபெருமானைச் சேவிப்பதற்காக பிரமன் சென்றபோது, அனைத்து தேவர்களும் தேவசேனாபதியாகிய சிவகுமரனை வணங்கிச் சென்றனர். சிறுவனாயிற்றே என்று தன்னை மதியாமல் சென்ற பிரமனிடம் பிரணவப் பொருளை விளக்கிவிட்டு உள்ளே செல்லுமாறு முருகன் கூற, பிரமன் கூறிய பதில் திருப்தி அளிக்காததால் அவரைத் தலையில் குட்டி, சிறைப்படுத்தினான் சிவகுமரனான முருகன். அருணகிரிநாதர் இந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு பாடுகிறார்.

“நாலுமுகன் ஆதி அரி ஓம் என அதாரம் உரை

யாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுகென

நாலு சிரமோடு சிகை தூளிபட தாளமிடும் இளையோனே”

[ராமேசுவரம் திருப்புகழ்]

“பிரமனது நான்கு தலைகளும் குடுமிகளும் சிதறுண்டு அலையத் தாளமிடுவது போலக் குட்டிய இளைஞோனே” என்று நகைச்சுவையாகப் பாடுகிறார்.

காணொணாதது எனத் தொடங்கும் தேவனூர்த் திருப்புகழில்,

“வேத நான்முக மறையோனொடும் விளை

யாடியே குடுமியிலே கரமொடு

வீற மோதின மறவா”

- என்று பாடுகிறார்.

பிரமனைச் சிறைப்படுத்திவிட்டு, படைப்புத் தொழிலைத் தானே நடத்தினான் குமரன். சிவபெருமான் ஆணைப்படி, நந்திதேவர் வந்து பிரமனை விடுவிக்கும்படிக் கேட்டுக்கொண்ட போது, முருகன் மறுத்துவிட்டான். முருகன் படைப்புத் தொழிலைச் செய்ததுபற்றி கந்த புராணத்தில் பின்வரும் செய்யுள் வருகிறது.

“ஒரு கரம் தனில் கண்டிகை வடம் பரித்து ஒரு தன்

கரதலம் தனில் குண்டிகை தரித்து

இரு கரங்கள்

வரதமொடு அபயம் தரப் பரம்பொருள் மகன் ஓர்

திருமுகம் கொடு சதுர்முகன் போல் விதி செய்தான்.”

[ஒருமுகம் கொண்டே நான்முகன் போல் படைப்புத் தொழில் செய்தான் என்கிறார்!]

திருமால், அனைத்துத் தேவர்களுடனும் சென்று சிவபெருமானிடம், பிரமன் நிலையை உள்ளம் உருகக் கூறி அவரை விடுவிக்கும்படி இறைஞ்சினார். இவர் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ என்ற பெயரில் தாயார் சமேதராகக் கோயிலில் காட்சி அளிக்கிறார்.பிரம்மனைச் சிறையிலிட்டதற்காகவும், தந்தையின் பேச்சை மதிக்காததற்காகவும், பிராயச்சித்தமாக, முருகனைப் பூமியில் சென்று பிறந்து தம்மைப் பூசிக்கும்படிக் கூறினார் சிவபெருமான். அதன்படி முருகன், பூஜை செய்த லிங்கம், ‘தேவசேனாபதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது. மேடையிலேயே முருகனுக்கு நேராக இருக்கும் இவரைக் கண்டு வணங்குகிறோம். [கோயில் விமானத்தில் இவ்வரலாறு சுதைச் சிற்பமாக குறிக்கப்பட்டுள்ளது]. இவ்வாறு முருகன் சிவனாரைப் பூஜை செய்த தலமே இன்று குமரகோட்டம் எனப்படுகிறது.

ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே வரும்போது, பாம்பன் சுவாமிகள் இத்தலத்திற்கு வந்த விவரம் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டு விளங்குவதைக் காண்கிறோம். காஞ்சிபுரக் கோயில்களைத் தரிசித்து விட்டு வந்து கொண்டிருந்த சுவாமிகளை, ஒரு சிறுவன் வழிமறித்து, ‘குமரகோட்டத்தைத் தரிசித்து விட்டீர்களா?’ என்று கேட்க, “அப்படி ஒரு திருக்கோயில் பற்றி யாரும் சொல்லவில்லையே” என்றாராம் சுவாமிகள்.

சிறுவன் அவர் கையைப் பிடித்து வந்து, கீரைப்பாத்திகளுக்கு இடையே இருந்த முருகன் சந்நதியைக் காட்டி, மறைந்து விட்டானாம். “அப்பா! குமரகோட்டக் கீரை” என்றே தொடங்குகிறது, கவிகாளமேகம் பாடிய ஒரு வெண்பா. முருகனைத் தரிசித்த பின், “சென்னை இரயிலைத் தவறவிட்டிருப்போமே” என்ற கவலையுடன் விரைந்து இரயில் நிலையத்தை அடைந்தபோது, அன்றைய தினம் இரயில் தாமதமாக வந்திருந்தது. “குமாரசுவாமியம்” எனும் தனது நூலில் சுவாமிகள் இந்நிகழ்ச்சியைப் பாடியுள்ளார்.

தமிழ் ஆன்மிக இலக்கிய வரலாற்றில் பெருமதிப்பிற்குரிய இடத்தை வகிப்பது குமரகோட்டம் கோயில். காஞ்சியில் வசித்து வந்த காளத்தியப்ப சிவாச்சாரியார், மகப்பேறு வேண்டி, குமரக் கடவுளை ஆராதித்து விரதமிருந்தார். முருகனருளால் அவருக்குப் பிறந்த அரும்புதல்வர் தாம் பிற்காலத்தில் தமிழில் கந்தபுராணம் பாடி அருளிய கச்சியப்ப சிவாச்சாரியார். பெரும்பான்மையோர் கூற்றில் இவரது காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டு என்று அறிகிறோம். குமரகோட்டத்து முருகன் இவர் கனவிலே தோன்றி தனது புகழைத் தமிழில் பெருங்காவியமாகப் பாடும்படிப் பணித்தான். திகைத்து நின்ற கச்சியப்பருக்கு, “திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான்” என்று சிவனாரைப் போற்றி அடி எடுத்துக்கொடுத்தான் குமரன். [நக்கீரருக்கு, ‘உலகம் உவப்ப’ என்றும், பிற்காலத்தில் அருணகிரியாருக்கு ‘முத்து’ என்றும் அடி எடுத்துக்கொடுத்தவராயிற்றே!]

கந்த புராண நூலைத் தூய தமிழில் எழுதி குமரகோட்டத்தில் பெரும் புலவர் சபையில் அரங்கேற்ற வந்தார் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகன் எடுத்துக்கொடுத்தபடி ஆரம்பித்த போது, ‘முருகன் மொழியே ஆயினும், “திகட சக்கரம்” என்பதில் இலக்கண விதி சரியில்லை’ என்றார் ஒரு புலவர்.இதனால் அரங்கேற்றம் தடைபட்டது. அன்றிரவு மிகுந்த வேதனையுடன் முருகன் சந்நதிக்குச் சென்று கண்ணீர் பெருக்கிய சிவாச்சாரியார், “முருகா, நாளை நீயே வந்து அரங்கேற்றத்தை நடத்தி என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று இறைஞ்சினார்.

[“ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவில் உனை ஏவர் புகழ்வார், மறையும் என் சொலாதோ” என்கிறார் நம் அருணகிரியார் பழநியில்]மறுநாள் குமரகோட்டத் திருக்கோயில் முன் போடப்பட்டிருந்த பந்தலில் புலவர் வடிவில் வந்த குமரன் தான் எடுத்து வந்த வீரசோழியம் எனும் நூலில் சக்தி படலத்தின் பதினெட்டாம் செய்யுளில், ‘திகழ் தசக்கரம்’ என்பது, ‘திகட சக்கரம்’ என்று புணருவதற்கு விதி இருப்பதை எடுத்துக்கூறி, புலவர்களின் ஐயத்தைப் போக்கினார்.

தினந்தோறும் தாம் பாடிய கந்த புராணப் பகுதியை முருகன் திருவடிக்கீழ் வைக்க, மறு தினம் காலையில் அதில் திருத்தங்கள் காணப்பெறுமாம். இவ்வாறாக, 10,345 பாக்களையும் எழுதி முடித்து அரங்கேற்ற கச்சியப்பர் எடுத்துக்கொண்ட காலம், ஓராண்டு. இதைத் தான், ‘கருப்பற்றி’ எனத் தொடங்கும் கச்சித் திருப்புகழில்,

“திருத்தத்தில் புகற் சுத்தத் தமிழ் செப்பு த்ரயச் சித்ரத்

திருக்கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே”

[பிழையில்லாத வகையில் தூய இயல் இசை எனும் மூவகைத் தமிழும் ஓதப்படும் சிறப்பு வாய்ந்த கச்சிப் பதியில் விளங்கும் அழகிய பெருமாளே!] என்று அருணகிரியார் பாடுகிறார் போலும்!

கோயிலில் பலிபீடம், கொடிமரம், மயில் மண்டபம் இவற்றை தரிசித்து, கொடிமரத்தைச் சுற்றி வருகிறோம். இடப்புறம் பாம்பன் சுவாமிகளும் முருகப் பெருமானும் காட்சி அளிக்கின்றனர். பெரிய உருவம் கொண்ட வரசித்தி விநாயகர் வலப்புறம் வீற்றிருக்கிறார். மண்டபத் தூணிலுள்ள அனுமனை வணங்கி உள்ளே செல்கிறோம். வெளிப் பிராகாரத்தில் கிழக்கு பக்க கோபுரத்தினை ஒட்டி திருக்குளம் அமைந்துள்ளது. குளத்தை ஒட்டியே சற்று தூரம் நடந்து சென்றால் காமாட்சி கோயிலை அடையலாம்.

கோயில் வாயில் கதவுகளைக் கடந்து உள்ளே சென்றால் இடப்புறம் சந்தான கணபதியைத் தனிச்சந்நதியில் தரிசிக்கலாம். ஒரு ஓரத்தில் சில படிகள் ஏறிச் சென்று தண்டாயுதபாணியை வணங்குகிறோம். இச்சந்நதியின் இருபுறமும் விநாயகரும் ஜடாமுடியுடன் மச்ச முனியும் காட்சி அளிக்கின்றனர். அடுத்ததாக மயில் மேல் அமர்ந்திருக்கும் ஆறுமுகரையும் வல்லிமார் இருவரையும் தரிசிக்கலாம்.

“தரை விசும்பைச் சிட்டித்த இருக்கன்

சதுர்முகன், சிட்சைப் பட்டொழியச் சந்

ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் பகையோடத்

தகைய தண்டைப் பொற்சித்ர விசித்ரந்

தரு சதங்கைக் கொத்தொத்து முழக்குஞ்

சரண கஞ்சத்திற் பொற் கழல் கட்டும்

பெருமாளே”

- எனும் காஞ்சித் திருப்புகழ் அடிகளைச் சமர்ப்பிக்கிறோம்.

[மண்ணுலகையும் விண்ணுலகையும் படைத்த ரிக் முதலான வேதம் வல்ல நான்முகன் தண்டனை அடைந்து விலக, எப்போதும் வணங்கப்படுபவர்களாம் தேவர்களுடைய பகைவர்கள் ஓட்டம் பிடிக்க, அழகிய தண்டையும் பொன்னாலான அழகிய விசித்ரமான சதங்கையும் கிண்கிணிக் கூட்டமும் தாளங்களுக்கேற்ப ஒலிக்க, திருவடித் தாமரையில் பொலிவுள்ள வீரக்கழலை கட்டிய பெருமாளே]பிரகார வலம் வரும்போது உருகும் உள்ளப் பெருமாள், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமார சுவாமி, கஜவல்லித் தாயார் ஆகியோரைத் தரிசிக்கலாம். வடகோடியில் வள்ளியம்மை, தென் கோடியில் தெய்வயானை சந்நதிகளையும், நவக்கிரகங்களையும் காணலாம். வடக்கு நோக்கி வீற்றிருக்கிறார் அருணகிரிநாதர். வள்ளலார், பாம்பன் சுவாமிகள், கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகியோர் திருவுருவங்களும் உள்ளன.

வள்ளி தெய்வயானையுடன் முருகன் கலியாண சுந்தரராகக் காட்சி அளிக்கிறார். வள்ளியம்மையை மணம் புரிவிக்க விநாயகர் யானையாய் வந்ததைக் குறிக்கும் வகையில் இரண்டு தந்தங்களுடன் இருகோட்டு விநாயகர் காட்சியளிக்கிறார். ‘அறிவிலாப் பித்தர்’ எனத் தொடங்கும் காஞ்சித் திருப்புகழில்,

“குறவர் கூட்டத்தில் கிழவனாய்ப் புக்கு நின்று

குருவி ஓட்டித் திரிந்த தவமானைக்

குணமதாக்கிச் சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்து

குமரகோட்டத்தமர்ந்த பெருமாளே.”

- என்று பாடுகிறார்.

[வள்ளிமலையில் குறவர் குடிலை அடைந்து, கிழ வேடத்தில் புகுந்து, புறத்தில் தினைப்பயிரைக் கொத்த வரும் பட்சிகளைத் துரத்தியும், அகத்தில் பக்திப் பயிரை அழிக்க வரும் காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்சர்யமாகிய அறு பகைவர்களைத் துரத்திவிட்டு, தவ வாழ்க்கையில் இருந்த மான் போன்ற வள்ளியை, இல்லம் - சுற்றம் முதலான பற்றுக்களை விடும்படிச் செய்தும், தனது அருள் வடிவமான ஆறுமுகச் சொரூபத்தைக் காட்டி, அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்ட குமரகோட்டத்துப் பெருமாளே!]

மூலஸ்தானத்தில், முருகப் பெருமான், பிரமனைச் சிறையிட்டு, தானே படைப்புத் தொழிலையும் மேற்கொண்டிருந்த காலத்தில் இருந்த திருக்கோலத்தில், ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்ட அழகிய திருமேனியுடன் திகழ்கிறார். மேல் வலக்கரத்தில் ருத்ராட்ச மாலையும், மேல் இடது கரத்தில் கமண்டலமும் உள்ளன. கீழ் வலது கரம், அபய முத்திரையுடனும், கீழ் இடது கரம் இடுப்பில் தொடையின் மேல் புறம் ஊன்றிய நிலையிலும் அமைந்துள்ளன.

குமரகோட்ட முருகனை,

“பனவி ஒன்றெட்டுச் சக்ர தலப்பெண்

கவுரி செம்பொற் பட்டுத்தரியப் பெண்

பழய அண்டத்தைப் பெற்ற மடப்பெண் பணிவாரைப்

பவதரங்கத்தைத் தப்ப நிறுத்தும்

பவதி கம்பர்க்குப் புக்கவள், பக்கம்

பயில் வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே”

- என்று விளிக்கிறார். பின்வரும் வேண்டுதலையும் முன் வைக்கிறார்.

“ஒருவர்க்கும் தெரிவரும் சத்யத்தைத் தெரிசித்துன் செயல்பாடித்

திசைதொறும் கற்பிக்கைக்கினி அற்பந்

திருவுளம் பற்றிச் செச்சை மணக்குஞ்

சிறுசதங்கைப் பொற் பத்மமெனக்கென் றருள்வாயே.”

[ஒருவருக்கும் தெரியாத சத்யப் பொருளைத் தரிசித்து, உன் திருவிளையாடல் களைப் பாடி, எத்திசையிலும் உள்ளவர்க்கு எடுத்துரைக்க வாசம் வீசும் வெட்சி மாலையும், சிறு சதங்கையும் அணிந்த உன் அழகிய பாதத் தாமரைகளை அடியேனுக்கு எப்போது அருள்வாய்?]முருகன் அவரது வேண்டுதலைச் செவிமடுத்தார் என்பதை பின்வரும் திருச்செங்கோடு பாடலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

“பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள

பக்தர்கள் அற்புதம் என ஓதும்

சித்ர கவித்துவ சத்த மிகுத்த

திருப்புகழைச் சிறிதடியேனும்

செப்பென வைத்துலகில் பரவத்

தெரிசித்த அநுக்ரக மறவேனே.”

குமரனையும் அவர் பூசித்த தேவசேனாபதீஸ்வரரையும் வணங்கி வெளிவருகிறோம்.

சித்ரா மூர்த்தி