Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சில சந்தேகங்களும் விளக்கங்களும் (ஏன்? ஏன்?)

வாழை மரம் கட்டுவது ஏன்?

விருத்திக்கு திருமண வீடுகளில் வாழை மரம் கட்டப்பட்டது. அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது. அது மட்டுமல்ல. வாழை எல்லா காலங்களிலும் கிடைக்கும். வாழை மரம் அதிக பயன்தரக்கூடியது. தன்னை அழித்துக் கொண்டு, பிறருக்கு கனி தரும். இதுபோல், தம்பதியர் ஒருவருக் கொருவர், தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக வாழை மரம் உள்ளது. குடும்ப விருத்திக்காகவும், வாழை மரத்தை கட்டுவதுண்டு. வாழையின் இலை, காய், பூ, பட்டை, தண்டு, நார் என அனைத்தும் பயன்தரக்கூடியது. சிலபகுதிகள் மருந்தாகவும் பயன்தரக்கூடியது. ஏனைய மரங்களில் இருந்து ஒரு வகையில் வாழை வித்தியாசமானது. ஒரு வாழையை நட்டால் போதும் வாழையடி வாழையாக அதன் குலம் தலைக்கும். ‘‘வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த ஏழை படும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ’’ என்பார் வள்ளலார். அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாகவே இருக்கும். ஆதலால் அதை குறைக்கவும் ஆக்சிஜன் அளவைக் கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் நம் முன்னோர்கள். அதிலும் குருத்தோலை தான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும்தான்)

நாந்தீ சிரார்த்தம் ஏன் செய்ய வேண்டும்?

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சியின் போது, மறைந்த முன்னோர்களில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு நாந்தி சோபன பித்ருக்கள் (மங்களமான பித்ருக்கள்) எனப்பெயர். அவர்களுக்காக நடத்தப்படுவது ‘‘நாந்தி சிரார்த்தம்’’. நாந்தி சிரார்த்தம் செய்யாமல் விட்டால் பித்ருக்களின் தோஷம் ஏற்படும். இவர்கள் நமது வீட்டில் மங்களமான நிகழ்ச்சிகள் நடக்க இருக்கும் போது, ஒரு சில நாட்கள் முன்னதாகவே நம்முடைய இருப்பிடத்திற்கு, சந்தோஷத்துடன் ஆசிகூற அவர்களாகவே வருகிறார்கள். அவ்வாறு வரும் அவர்களுக்கு சாப்பாடு போட்டு நல்ல வஸ்த்ரம் கொடுத்து, அவர்களை சந்தோஷப்படுத்தி அவர்களின் ஆசியை பெறும் செயல்தான் நாந்தி. இதில் அமங்கலம் எதுமில்லை. இதுவும் மங்களமானதுதான்.

உபநயனம், விவாஹத்திற்கு முன் அவசியம் செய்ய வேண்டும். நாநிஷ்ட்வா து பித்ரூன்ச்ராத்தே, வைதிகம் கர்ம ஸமாசரேத், என்பதாக ஆபஸ்தம்பர், முதலிய அனைத்து மகரிஷிகளும் வலியுறுத்தி கூறுகிறார்கள். நாந்தி பித்ருக்களை பூஜிக்காமல் வேதத்தில் கூறப்பட்ட எந்த கர்மாவும் செய்யக்கூடாது. பித்ருக்களில் பல வகை உண்டு. அதில் நாந்தி முக என்பவர் சுப காலத்தில் ஆராதிக்க தக்கவர். இதையும் சுப கார்யங்களுக்கு முன்னால் செய்ய வேண்டும். அப்யுதயம் = இந்த சொல் தர்மம், அர்த்தம், காமம், ஆகியவற்றின் வளர்ச்சியை குறிக்கும். அவை வளர்வதற்காக பித்ரு தேவதைகளுக்கு செய்யும் ஆராதனைக்கு அப்யுதய சிராத்தம் என்று பெயர். தேவதையின் ஆசியை கோறுதல் = நாந்தி என்ற சொல்லால் குறிக்க படுவதால் அப்யுதய சிராத்தத்தை நாந்தி என்றும் சொல்வது வழக்கம்.

அரசாணைக்கால் ஏன்?

முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைத்து திருமணத்திற்கும் அரசனால் செல்ல இயலாது. எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பிவைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது. இன்று பதிவுத் திருமணம் போல் அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப்பட்டது. ஆகவே அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இதுவே இன்று திருமணப் பந்தலில் கலியாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதற்கு பட்டுச்சாத்தி அலங்கரித்து வைப்பர்.

காப்பு கட்டுதல் ஏன்?

ரஷாபந்தனம் (பிரதி சர பந்தம்) என்பார்கள். காப்பு என்பது அரண் போன்றது. மங்களகரமான சக்தி வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது. திருமணத்தின் போது எந்த இடையூறும் நேராமல் இருக்க இந்த நிகழ்வு. இடையூறுகள் வராமல் காப்பதால் இந்த மஞ்சள் கயிறுக்கு காப்பு என்று பெயர். தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும். மணமகளுக்கும் காப்பு உண்டு. மணமகனுக்கு வலது கையில் ஆச்சாரியார் கட்ட, மணமகன் பெண்ணுக்கு இடது கையில் கட்டுவார். ஆணுக்கு தெய்வம் காப்பு. பெண்ணுக்கு ஆண் காப்பு. இந்த காப்பு கட்டி விட்டால் அது அவிழ்க்கும் வரை எந்தத் தீட்டும் அவர்களைச் சேராது.

முளைப்பாலிகை ஏன்?

“விரித்த பாலிகை முளைக்கும் நிரையும்” என்கின்றது சிலப்பதிகாரம். நவ தானியத்தின் (நெல், கோதுமை, பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை) மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது. முளைப் பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சடங்கு.

அங்குரார்ப்பணம் (வித்திடுதல் என்று அர்த்தம்) என்றும் சொல்வார்கள்.

சந்திர கும்பத்தை பூசித்து, சுமங்கலிப் பெண்களை கொண்டு நவதானியம் இட்டு, தண்ணீர் தெளித்து, புஷ்பம் சாத்தி, பூசைகள் செய்வது. அப் பெண் களுக்கு வெற்றிலையில் பழம், பூ வைத்து உபசாரம் செய்தனுப்புவார்கள். அதன்பின் கற்பூரம் காட்டப்படும். சிலர் முன்பே பாலிகை போட்டிருந்தால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதுமானது.பெண் வீட்டில் முன்பே பாலிகை போட்டிருந்தால், தினம் பூஜை செய்து திருமணத்தன்று மணவறைக்குக் கொண்டு போவார்கள். சிலர் பொன்னு ருக்கலன்று செய்வார்கள் (இதை 3 நாட்களுக்கு முன்னாவது செய்தால் நவதானியம் வளர்ந்து இருக்கும்.முளைப்பாலிகை இடுவதன் நோக்கம், மணமக்களும் அவர்கள் குடும் பமும் முளைவிட்டு பல்கிப் பெருகி வாழ வேண்டும் என்பதே. இந்தப் பாலிகையானது திருமணத்திற்குப் பின் நதியிலே சேர்த்து விடலாம். இதற் கென்று மந்திரங்கள் உண்டு. கிழக்கே இந்திரன், தெற்கே கால தேவன், மேற்கே வருணன், வடக்கே குபேரன், மத்தியில் ப்ரம்மம் என்று மந்திர ஆவாஹனமும் உண்டு. சிலர் நதியில் கரைக்கும் போது தூப தீபம் காட்டி கும்மி அடித்துப் பாடுவார்கள்.

தாரை வார்த்தல் ஏன்?

திருமணச் சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல். தாரை வார்த்த பின்புதான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான். ‘‘என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன்’’ என மணமகளின் பெற்றோர், தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு - மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி. எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க, அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை, மணமகனின் கை, மணப்பெண்ணின் கை, மணப்பெண்ணின் தந்தையின் கை, எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை. இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும். உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்.‘‘மகாவிஷ்ணுவின் ரூபமான உன்னிடம், மகாலட்சுமி ரூபமான இவளை ஒப்படைக்கிறேன்’’ என்று தாரை வார்க்கும் போது மந்திரம் வரும். மணமகள் = செல்வம்; மணமகன் = அதைக் காப்பவர்.

செல்வத்தைக் காப்பதற்கு தகுதியானவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு என்று எடுத்துக் கொள்ளலாம். “கன்னிகாதானம் என்று பெயர். தானம் கொடுத்தவர், தானம் பெறுபவரை விட மகா பாக்கியசாலி ஆகிறார். கன்னிகாதானம் மந்திரம் இதை அவ்வளவு உயர்வாகச் சொல்கிறது.பொதுவாக சாத்திரத்தின் விதிகளையும், விதிவிலக்குகளையும் கவனத்தில் கொண்டால், பெரியவர்கள் எத்தனை நுட்பமாகச் சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரியும். ஆண் குழந்தைகள் குறித்த பெருமிதம் அக்காலத்திலும் உண்டு. இக்காலத்திலும் உண்டு. என்ன இருந்தாலும் ஆண் பிள்ளை.

அப்படியானால் பெண்ணைப் பெற்றவர்கள் என்ன செய்வது?

அவர்களுக்கு சாஸ்திரத்தில் சாதகமாக பெருமிதம் கொள்ள ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்ற ஒரு கேள்வி வருகிறது அல்லவா. இதற்கு விடை சொல்கிறது சாஸ்திரம். ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து, அவர் தகுதியுள்ள ஒரு ஆணுக்கு அந்தப் பெண்ணை கன்னிகாதானம் செய்துவிட்டால், அது அவருக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறை, அவருக்கு பின்னால் வருகின்ற பத்து தலைமுறை, அவரோடு சேர்ந்து இருபத்தொரு தலைமுறைகளுக்கும் பிரம்ம உலக பிராப்தியை அளிக்கிறது என்று மந்திரம் சொல்கிறது. ‘‘தசானாம் பூர் வேஷாம், தசானாம் பரேஷாம், மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண’’ என்று அந்த மந்திரம் நீள்கிறது. கன்னிகாதானம் எத்தனை உயர்வானது என்பது இந்த மந்திரத்தால் தெரிகிறது. அது செய்வதற்கு நீர் வார்த்து தரும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாங்கல்ய தாரணம் ஏன்?

பனை (தாலம்) ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக் காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். பண்டைய இலக்கியங்களில் இதை “மங்கள நாண்” என்று கூறப்பட்டுள்ளது. மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது. தெய்வீககுணம், தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே, ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணிவிக்கப் படுகிறது.

அழல் ஓம்புதல் (ஹோமம் வளர்த்தல்) ஏன்?

வேதங்களில் சொல்லப்பட்டப்படி, அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும். அக்னியின் முன் செய்து கொள்ளப்படும் எந்த உறுதிமொழியும் காக்கப்படவேண்டும். எல்லாவற்றையும் பார்ப்பவனுக்கு அக்னி என்று பெயர். அக்னி சாட்சி என்பார்கள். அக்னி காக்கவும் செய்யும். சத்தியம் தவறினால் அழிக்கவும் செய்யும். அது மட்டுமல்ல. வாழ்வின் உன்னத பலன்களைப் பெற உதவுபவன் அக்னி. வேதங்களில் இந்திரனுக்கு அடுத்தபடியாக அதிகப் பாடல்கள் அக்னிக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அரணிக்கட்டை அக்னியின் உறைவிடம். ஏழு நாக்குகளை உடையவன். தூய்மையானவன். தூய்மைப் படுத்துபவன். பாவங்களை அழிப்பவன். ‘‘பாவங்கள் தீயினில் தூசாகும்’’ என்பதே ஆண்டாள் வாக்கு. உண்ணும் உணவை எரித்து, வித விதமான சக்திகளாக ஆக்கி, உடலை இயங்க வைப்பது போல, உயிர்களை இயங்க வைப்பவன். எனவே எச்செயலும் அக்னி சாட்சியாகவே நமது மரபில் நடக்கிறது. அக்னிக்கு “புரோகிதன்” என்ற பெயர் உண்டு. எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால்தான் சாஸ்திரப்படி சரியாகும். ஹோமத்தின் மூலம் நவகிரகங்களைத் திருப்திப்படுத்த வேண்டும். ஹோமத்தில் இடப் படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமப்புகை உடலுக் கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

அம்மி மிதித்தல் ஏன்?

அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று குறிப்பிடுவார்கள். இந்து மதத்தில் திருமணத்தின்போது செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு இது. “அச்மன்” என்றால் கல் என்று பொருள். அசைவற்ற ஒரு கல்லின் மீது மணப்பெண்ணை நிற்க வைத்து மணமகன் ‘‘ஆதிஷ்டேமம் அஸ்மாநம் அஸ்மேவத்வம் ஸ்திராபவ அபிதிஷ்ட ப்ரதந்யத: ஸஹஸ்வ ப்ரதநாயத:” என்று துவங்கும் மந்திரத்தைச் சொல்வார். “மணப்பெண்ணே! நீ இந்த பாரங்கல்லின் மேல் ஏறி நில்.! அதன் உறுதித்தன்மை உனக்குப் புலனாகும்! நீ உறுதியிலும், பொறுமையிலும் இந்த கல்லைப்போல் இருக்க வேண்டும். உன்னை எதிர்ப்பவர்களிடத்தும், உன் நற்பண்புகளை குலைத்து, கெட்ட வழியில் இட்டுச் செல்பவர்களிடத்தும் கவனமாக இரு. குடும்பத்துக்கு கேடுவிளைவிக்கும் பகைவர்களிடம் உறுதியோடும் பொறுமை யோடும் வெல்வாய். திருமண பந்தத்தால் ஏற்பட்ட நல்ல நட்பு நம்மிடம் மலர்ந்தது. இந்த உறுதித்தன்மையை காத்து வருவாயாக” என்பது மந்திரத்தின் பொருள்.பெண்ணின் வலதுகாலை (அதாவது எட்டாவது அடி) மணமகன் கையால் தூக்கி, அம்மியில் வைத்து, பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும், மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.

அருந்ததி பார்த்தல் ஏன்?

அருந்ததி என்ற வார்த்தைக்கு, தர்மத்திற்கு விரோதமான காரியத்தைச் செய்யாதவள் என்று பொருள். அருந்ததி பார்ப்பது, திருமண நாள் அன்று மாலையில் சூரிய அஸ்தமனம் ஆன பின் செய்யப்பட வேண்டிய ஒன்று. தற்காலத்தில், மண்டபத்திற்கு உள்ளேயே முடித்து விடுகிறார்கள். இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம். ஆறாவது நட்சத்திரமாக ஒளி வீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம். அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் மனைவி. வசிஷ்டரும், அருந்ததியும் ஒன்று சேர்ந்து, எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள். அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும், நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.அதேபோல் மணமக்கள் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணிய மாகவும், கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்கச் சொல்கிறார்கள்.

(தொடரும்)