Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தித்திக்கும் வாழ்வை அருளும் தேனுபுரீஸ்வரர்!!

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வர கோயில் புராணப் பெருமையும், வரலாற்று பழமையும் கொண்டு விளங்குகிறது. கபிலாரண்யம் என்ற புகழ் கொண்ட புராணத்தலம் தற்போது மாடம்பாக்கம் என்றழைக்கப் படுகிறது. ஏன் கபிலாரண்யம்?கர்தம பிராஜாபதி எனும் ரிஷி பாற்கடலில் பள்ளி கொள்ளும் வைகுந்தனையே தியானித்துக் கிடந்தார். மந் நாராயணன் கர்தம மஹரிஷியையும், அவரது பத்தினியான தேவஹூதியையும் கண்டு பிரமித்தார். என்னதொரு இனிய கனிந்த பக்தி என்று நெக்குருகிப் போன எம்பெருமான் கருடாழ்வாரோடு வந்திறங்கி தரிசனம் தந்தான். வைகுந்தனின் அம்சமான ஒரு ஜீவன் தமக்குள் தோன்றப் போவதை உணர்ந்தார் மகரிஷி.தர்ம பத்தினியான தேவஹூதியிடம் விஷயம் சொல்ல அவளும் அகமலர்ந்தாள். ரிஷிக் குழந்தை பெறப்போகும் பேற்றினை எண்ணி மகிழ்ந்தாள். தெய்வக் குழந்தையும் பிறந்தது. கபில வாசுதேவர் என்று திருநாமம் சூட்டினர். கபிலர் எனும் ஞானப் புயல் தேசமெங்கும் வீசியது. நாராயண அம்சம் நிறைந்திருந்த போதும் ஏனோ அவருக்குள் சிவாக்னித் கனலொன்று இடையறாது எரிந்தது. ஆதிநாயகனான ஈசனோடு ஈசனாக தான் கலந்திருக்கும் நிலையினையே ஒரு கையில் சிவலிங்கமும், மறு கையில் விலவத் தளிரையும் ஏந்திக் காண்பித்தார். ஈசனை அடைவது எங்ஙனம் என்று தொழுது எழுந்தவருக்கு கையிலிருக்கும் சிவலிங்கத்தை காட்டி ‘‘இதை பூஜித்து வா’’ என்று சைகையால் சொன்னார்.

கபில முனியின் பெருங்கருணை பசுக்களின் மீது படர்ந்தது. ஞான விளிம்பில் நிற்கும் பசு ஒன்று கபிலரைக் கண்டதும் குதூகலித்தது. அந்தப் பகுதியில் பசுவை மேய்த்துக் கொண்டிருந்த இடையன் ஒருவன் அந்தப் பசு புற்றுக்குள் பாலைப் பொழிவது கண்டு அதிர்ந்தான். கோபம் மிகக் கொண்டு சாட்டையால் விளாறினான். சவுக்கடியை தாங்காத பசு நிலைதவறி புற்றுக்குள் கால் வைத்து இடறி விழுந்தது. ‘ஐயோ’ என அழுத பசு, மடங்கிய காலை சரட்டென்று வெளியே இழுக்க புற்று சிதைந்தது. சிவலிங்கச் ஜோதி வெளிப்பட்டது. அதனின்று ரத்தமும் பீறிட, பசு மேய்ப்பவர் இதென்ன விசித்திரம் என உறைந்தான். இந்தச் சம்பவம், அன்றைய மன்னனாக இருந்த சோழ அரசனின் செவிக்கும் எட்டியது. ராஜகுருக்கள் விழித்துக் கொண்டனர். நல்லதொரு விஷயமாயிற்றே என்று அரசனிடம் சந்தோஷமாக கூறினர். சோழ மன்னனும் இடையறாது அதே நினைவினூடே தூங்காதிருந்தான். பசுவும், புற்றும், கபிலரும் கனவில் வந்து போயினர். மன்னன் அவையோரை அழைத்து சாத்திரப் பிரகாரம் கோயிலெழுப்பச் சொன்னான். கபிலரின் ஆசியால் திருக்கோயில் வளர்ந்தது. இன்றும் அருள்பெருக்கி நிமிர்ந்து நிற்கிறது.

இப்பேற்பட்ட வியப்பூட்டும் விஷயங்கள் நிறைந்த ஆன்மக் கருவூலமே மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயமாகும். கபிலரின் ஜீவ சமாதி என்றும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமே தேனுபுரீஸ்வரர் என்ற கருத்தும் நிலவுகிறது. எப்படியாயினும் கபிலரின் திருப்பாதம் தாங்கிய பூமி என்ற ஒன்றே போதும்.சென்னையின் சத்தச் சுவடுகளே இல்லாத நிசப்தமான பூமியே மாடம்பாக்கம். கோயில் கோபுரத்திற்கு பக்கத்திலேயே விரிந்து பரந்திருக்கும் திருக்குளத்தை உரசியபடி நம்மை கடந்து செல்லும் தென்றல் ரம்மியமாக இருக்கிறது. இதற்கு கபில தீர்த்தம் என்று பெயர்.கோபுர நுழைவாயிற் படியில் தொடங்கி கோயிலின் கருவறை வரை சிற்பக்காடாக சிற்பங்கள் கொழித்திருக்கின்றன. செஞ்சி நாயக்கர்கள் காலத்திய மண்டபம் இது. அதிலும் சரபேஸ்வரரின் புடைப்புச் சிற்பம் பார்க்க மனம் நெகிழ்ந்து போகிறது. அதனாலேயோ என்னவோ அங்கு தனிச் சந்நதியின் அத்தனை மரியாதைகளோடும் ஞாயிற்றுக் கிழமை ராகு கால வேளையில் நாலரை மணிக்கு சிறப்பான பூசைகள் நடக்கின்றன. சில சமயம் கூட்டம் ஆயிரத்தைத் தாண்டுவதாக கூறுகிறார்கள். ஆர அமர இந்த மண்டத்தை பார்த்துப் புரிந்து கொள்ள ஆறுநாட்களாவது ஆகும்.

அங்கிருந்து உள்ளே நகர, அம்பாள் சந்நதி அமைந்துள்ளது. தேனுபுரீஸ்வரர் எனும் நாமத்திற்கு இணையாக தேனுகாம்பாள் எனும் பெயரோடு அருள்பாலிக்கிறாள், அன்னை. கருவறைக்குள் சக்ரத்துடன் அபய, வரத ஹஸ்தங்களும், பாசாங்குசமும் கொண்டு நான்கு திருக்கரங்களுடன் புன்னகை பூத்து நிற்கிறாள், தேனுகாதேவி. கருவறையை ஒட்டியுள்ள மண்டபத்தின் மத்தியில் மேல் விதானத்தில் நவாக்ஷரி யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து நேரே பார்க்க மூலவரான தேனுபுரீஸ்வரர் பேரருள் பெருக்கி வீற்றிருக்கிறார். சிறு சுனையிலிருந்து தொடங்கும் மாபெரும் நதியின் முகத்துவாரம் எத்தனை ரகசியமுடையதோ அது போன்று விளக்க முடியாத ஓர் உணர்வைத் தருகிறார், தேனுபுரீஸ்வரர். பசுவின் குளம்பு பட்டதால் மேலே சற்று பிறைவடிவத்தில் பின்னமாகி உள்ளது. வெள்ளிக் கவசத்தால் மூடி வைத்திருக்கிறார்கள்.

கருவறை வாயிலிலேயே தலத்தின் முதல்நாயகரான கபில முனிவர் சற்று உள்ளடக்கமாக தனித் தூணின் மத்தியில் பெருஞ்சிரிப்போடு விளங்குகிறார். வலக்காலை பின்பக்கம் மடித்து, இடக்காலை அதன்மீது போட்டு அமர்ந்திருக்கிறார். கண்களில் ஞானம் பெருக, முகத்தில் பூரண ஆனந்தம் விரவிப் பரவியிருக்கிறது. இடக்கையில் சிவலிங்கத்தை ஏந்தியிருக்கும் கோலம் காண மனம் குழையும். வலக்கையால் அதை பூஜிக்கும் முறையைப் பார்க்க மனம் விம்மும். கபில முனிவர் இடக்கையில் சிவலிங்கம் ஏந்தி வலக்கையால் பூசித்ததால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது என்று இக்கோயிலைப் பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஆனால் அது ஏற்புடையதல்ல என்ற வாதமும் நிலவுகிறது.

ஏனெனில் மத் பாகவதத்தில் சுகப்பிரம்ம ரிஷியானவர் கிட்டத்தட்ட பத்து அத்தியாயங்களுக்கு கபிலரின் தவ மேன்மையை, சாங்கிய யோகத்தில் கரை கண்டவர் என்று ஏற்றம் கொடுத்துப் பேசுகிறார். சகலத்திலும் ஈசனைப் பார்த்து, ஈசனோடு ஈசனாக கலந்துவிட்ட ஒரு பிரம்ம ஞானி உபதேசமாக இடக்கையில் சிவலிங்கத்தை காட்டி இதை பூசியுங்கள் என்று சொல்லக்கூடுமே தவிர, அதை நாம் தோஷமாக கற்பித்துக் கொள்ளக்கூடாது. அந்தச் சிற்பம் சுத்தச் சிவமாகி ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் கபிலரின் நிலையைச் சொல்கிறது. உட் பிராகாரத்திலுள்ள பெருமாளை சேவித்து, அருணகிரி நாதர் பாடிய முருகனை வணங்கி, கஜபிருஷ்ட விமானம் எனும் அமைப்பை ஆச்சரியமாக பார்த்து வருகிறோம். மெல்ல கோயிலை பிராகாரச் சுற்றாக வந்து கொடிமரத்தில் வீழ்ந்து நிமிரும்போது அந்த ஆனந்தக் கூத்தன் நமக்குள்ளும் நடம் புரிகிறான்.