Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்...

பகுதி 1

துவாபர யுகத்தின் இறுதிப் பகுதியாக அமைந்த காலமது. மதுரகவி தாமிரபரணியாற்றில் குளித் தெழுந்தார். திருக்கோளூர் ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோபுரத்தை நோக்கி நமஸ்கரித்தார். சிந்தித்தபடி கோவிலை நோக்கி நடந்தார். ஒரு தேர்ந்த அந்தணர் குலத்தில் பிறந்த தனக்கு, கற்க வேண்டிய அனைத்தையும் அளித்த பெற்றோரையும் பெருமாளையும் நன்றியில் நினைவு கூர்ந்தார்.

ஒவ்வொரு நாளும் பெருமாளின் சந்நதியில் மதுரகவி சாம வேதம் இசைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றும் வேத பாராயணம் முடித்து, பெருமாளைச் சேவித்தபடி கோவிலின் படிக்கட்டில் அமர்ந்தார். தன் மனதுடன் பேசினார்.

‘எல்லாம் சரி. தினமும் ஆற்றில் நீராடுவது, நியமங்களைச் செய்வது, சாமவேதம் ஓதுவது என எல்லாமும் சரிதான். ஆனால் மனதின் உள்ளே, ஏதோ ஒரு பெரும் இறைபணி எனக்குக் காத்திருப்பதாக உணர முடிகிறது. அது என்னவென்று, எந்தத் திருநாளில் எனக்கு உணர்த்தப் போகிறானோ இந்தப் பெருமாள்?’அவர் மனதில் நினைத்த அதே பொழுதில், யாரோ யாரிடமோ, ‘ கிளம்பு! கிளம்பு!’ என்று சொல்ல, அதை ஆண்டவன் தனக்கு இட்டக் கட்டளையாக ஏற்றுப் புறப்பட்டார்.

மனதில் உள்ள பெருமாள் வழி காட்டுவார் என்ற நம்பிக்கை மனம் முழுவதும் வியாபித்திருந்தது. ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்றார். இறுதியில் அவர் அயோத்தியை அடைந்தார்.அயோத்தி நகரில் நுழைந்த தருணம் முதல், ஒரு பரவசத்தை மதுரகவி அனுபவித்தார். நகரின் ஒவ்வொரு துகளிலும் இராமனை உணர முடிந்தது. பிறந்த காலம் தொட்டு, இங்குதானே இராமன் தவழ்ந்திருப்பான், இங்குதானே வளர்ந்திருப்பான், இங்குதானே விளையாடியிருப்பான் என்று எண்ண, மனது குதூகலித்தது.

ஓட்டமாக சரயு நதிக்கரைக்குச் சென்றார். இந்த நதிக்கரை மணலில்தானே என் இராமன் நடந்திருப்பான். எண்ணிய அந்தக் கணமே கீழே குனிந்து, ஆற்று மணலையெடுத்து திருமண்ணாய் இட்டுக் கொண்டார். சரயு நதியைப் பார்த்தார். இங்கு தானே என் இராமன் நீராடியிருப்பான். அந்த நதிநீரை அள்ளிப் பருகினார். முங்கிக் குளித்தார். உடலில் நீர் வழிந்தது. கைகளைக் கூப்பி வானத்தைப் பார்த்தபடி ‘ராமா ராமா’ என்று ஜபித்தார். அந்தக் குளிர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பின், நடக்கத் துவங்கினார்.

சரயு நதிக்கரையின் அருகேயிருந்த பெரிய ஆலமரத்தினருகில் சென்றார். ‘நிச்சயம் இராமனின் கரம் இந்த மரத்தில் பட்டிருக்கும். குறைந்தபட்சம் அவன் பார்வையாவது இந்த மரத்தில் பட்டிருக்கும்.’ எண்ணம் மனதிலோட, மரத்தின் விழுதுகளைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார்.வீதிகளில் நடக்கும்போது, ‘ என் இராமன் இங்குதான் நின்றிருப்பான். நடந்திருப்பான்.’ என நினைத்து, நெகிழ்ந்து, மண்ணை நமஸ்கரித்தார். இராமாயணத்தின் ஒவ்வொரு காட்சியும் மனதில் விரிந்தது.

வசிஷ்டர், தசரதர், கெளசல்யை, கைகேயி, சுமித்திரை, இலக்குவன், பரதன், சத்ருக்னன், விஸ்வாமித்திரர் என ஒவ்வொருவராய் அயோத்தியின் ஒரு மாடத்திலிருந்து வாழ்த்துவது போலத் தோன்றியது. அனுமனின் ‘ஸ்ரீராம் ஜெயராம்’ மந்திர உச்சாடனம் கேட்டது. செந்தூர வண்ணத்தில் அனுமாரைப் பார்க்கையில் மனது விம்மியது.இராமனும் சீதையும் தன்னைஆசிர்வதிப்பதை மதுரகவியால் உணர முடிந்தது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மண்டபத்தில் அமர்ந்து, அயோத்தியில் நிகழ்ந்த இராமாயண நிகழ்வுகளை மனதில் நிறுத்தி, பக்தி செய்தார்.நாட்கள் கடந்தன. அயோத்திவாசம் மதுரகவிக்குப் பிடித்துப் போய்விட்டது.

ஒருநாள் ஒரு பெரிய ஜோதி வானில் தெரிந்தது. சூரிய ஒளியைப் போன்றும் இல்லாமல், ஒரு தீப்பந்தம் கொழுந்துவிட்டு எரிவது போலவும் இல்லாமல், ஒளிர்ந்தது. இரவில் மட்டுமல்ல, பகலில்கூட அவரால் ஒளியைக் காண முடிந்தது. சில நாட்கள் இது தொடர்ந்தது. கண்ணை மூடித் தியானிக்கையில்கூட அந்த ஒளிவெள்ளம் அவரைவிட்டு அகலவில்லை.இராமரை மனதில் வரித்தார். இராமர் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் ஏதோ ஒரு செய்தி புரிந்தும் புரியாததுபோல இருந்தது.

உள்ளுணர்வு, அந்த ஒளியைப் பின் தொடரச் சொல்ல, அயோத்தியிலிருந்து புறப்பட்டார். தெற்குத் திசையில் பயணம் தொடர்ந்தது. வடக்கு மாநிலங்களைக் கடந்தார். அஹோபிலம், திருவேங்கடம் கடந்தார். அந்த ஒளி அரங்கன் உறையும் ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறதோ என எண்ணினார், ஸ்ரீரங்கத்தைக் கடந்தும் நடந்தார். இன்னமும் தெற்குத் திசையில் வானில் ஒளி திகழ்ந்தது. தொடர்ந்து பயணித்தார். திருமாலிருஞ்சோலை, திருவில்லிபுத்தூர் ஆகிய தேசங்களைத் தாண்டியும் அவ்வொளி தொடர்ந்தது. தெற்கு நோக்கிப் பயணத்தை மேலும் தொடர்ந்தார். கடைசியாக அந்த ஒளி, திருக்குருகூர் வரைச் சென்று, அதைத் தாண்டியபோது தெற்குத் திசையில் மறைந்தது. ஒளி வடக்கு திசையில் தெரியத் துவங்கியது. ஒளி தெரிந்த திசையில் தொடர்ந்தார். இறுதியில் அந்தப் பேரொளி மதுரகவியை ஒரு புளிய மரத்தின் அடியில் நிறுத்தியது.

யாரோ ஒரு இளைஞர் கண்மூடி புளிய மரத்தினடியில் தியானத்திலிருந்தார். அங்கு சூழ்ந்து நின்றிருந்தவர்களைப் பார்த்து மதுரகவி கைகூப்பினார்.“என்னை ஒரு ஒளி வழி நடத்தி இங்கு கொண்டு சேர்த்திருக்கிறது. இங்கு ஏதாவது விசேஷமா? இந்த ஊரில் உள்ள பெருமாளுக்கு ஏதாவது சிறப்பான உற்சவமா? ஏதாவது இங்கு அதிசயமாக நடந்துள்ளதா?’

அருகிலிருந்த ஒரு முதியவர் மதுரகவி அருகில் வந்தார்.

“இதோ பார்க்கிறீர்களே! இவர்தான் நீங்கள் தேடி வந்த அதிசயம்!”

எந்தச் சலனமுமின்றி இளைஞர் கண் மூடியிருந்தார்.

மதுரகவி, அவரிடம் அசைவு இருக்கிறதா எனச் சோதிக்கும் முகமாக, அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்தார். கீழே, சப்தம் வரும் விதமாக எறிந்தார்.சப்தம் கேட்டு, வாழ்வில் முதன் முறையாக இளைஞர் கண் திறந்தார். மதுரகவியைப் பார்த்தார்.மதுரகவி, அவரின் அறிவைச் சோதிக்கும் வண்ணம் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’

கண் திறந்த இளைஞர், வலது கரத்தில் உபதேச முத்திரை கொண்டு, முதன் முதலாக தனது வாயைத் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்றார்.இதன் பொருள் ‘உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன் என்னும் சிறியது பிறந்தால், பாவ புண்ணியங்களின் பயன்களை நுகர்வதே அதற்கு வாழ்க்கையாக இருக்கும். அறிவற்ற ஜீவனுக்கு, பரமாத்வான திருமாலைப் பற்றிய அறிவு ஏற்பட்டால், அதைப் பற்றிக் கொண்டே பக்தி வளரும்.

கேள்வி கேட்ட மதுரகவிக்கு, தன் அஞ்ஞானங்கள் எல்லாமும் விலகின. தன் ஞானகுருவை கண்டுகொண்ட மகிழ்வில், நிறைந்து போனார். இத்தனை நாள் மனதில் தான் தேடிய தன் வாழ்வின் குறிக்கோளைப் புரிந்து கொண்டார். இவரே, தான் தேடிய குருஎன்பதை உணர்ந்தார். “என் குரு நீங்கள். அந்தப் பெருமாள் வேறு, நீங்கள் வேறு அல்ல. என்னை நீங்கள் உங்கள் சீடனாக ஏற்க வேண்டும். அருள் செய்யுங்கள்.”கண்ணீர் மல்க அவரின் காலடியில் பணிந்தார்.

ஆமோதிக்கும் வண்ணம் அந்த இளைஞர், அமைதியாக புன்முறுவல் செய்தார்.மேகம் திரண்டது. மெல்லிய மழை பெய்ய ஆரம்பித்தது. கோவிலிலிருந்து மங்கள ஓசை கேட்டது. காற்றில் நறுமணம் வீசியது. இத்தனை நாள் காத்திருந்ததே இந்த நிகழ்வுக்காகத்தான் என்பதுபோல புளிய மரம், தன் கிளைகளை அசைத்தது. நிலமும், அங்குள்ளோரின் மனதும் குளிர்ந்தது.

பின்பழகிய பெருமாள் ஜீயர் தொடர்ந்தார்.

“அந்த இளைஞர் யார் தெரியுமா?

நம் ஆழ்வார்தான் அவர்.

இவரின் தந்தை, வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி. அவர் திருவண்பரிசாரம் ஊரைச்சேர்ந்த உடையநங்கையை மணமுடித்தார். தம்பதியர் திருமணமான புதிதில் அந்த ஊரிலிருந்து திருக்குருகூருக்குச் செல்லும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் எழுந்தருளியுள்ள நம்பியைச் சேவித்தார்கள். பிள்ளை வரம் வேண்டினார்கள். அந்த நம்பியைப் போன்றே பிள்ளை வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.அன்று இரவே, திருக்குறுங்குடி நம்பி இருவர் கனவிலும் தனித்தனியே தோன்றினார். ‘என்னைப்போன்றே பிள்ளையென்பதை விட, நானே உங்கள் பிள்ளையாகப் பிறப்பேன்.’ அதன்படி, கலியுகத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் திருக்குறுகூரில், பிரமாதி வருஷம், வைகாசி மாதம், விசாக நட்சத்திரம், பெளர்ணமியுடன் கூடிய, வெள்ளிக்கிழமையன்று நம்மவர் பிறந்தார்.

பெருமாளே ஆழ்வாராகப்பிறந்தார், என்பதுதான் நம்மாழ்வாரின் தனிப்பெருஞ்சிறப்பு.நம்பெருமாள் முதலாவது யுகமான க்ருத யுகத்தில், முதல் குலமான அந்தணர் குலத்தில், காசியப ரிஷிக்கு வாமனனாய் அவதரித்தார்.இரண்டாவது யுகமான த்ரேதா யுகத்தில், இரண்டாம் குலமான, அரசர் குலத்தில் ஸ்ரீராமனாய் அவதரித்தார்.மூன்றாவது யுகமான துவாபர யுகத்தில், மூன்றாம் குலமான, யாதவ குலத்தில் கண்ணனாய் அவதரித்தார்.நான்காவது யுகமான கலி யுகத்தில், நான்காம் குலமான, வேளாளர் குலத்தில் நம்மாழ்வாராக அவதரித்தார் என்று போற்றுவதுண்டு.

கோதண்டராமன்