Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எது மகிழ்ச்சியான விடுதலை?

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 113 (பகவத்கீதை உரை)

மனித வாழ்க்கையின் மிகப் பெரிய துக்கம் என்பது மரணம்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது துக்கமே அல்ல, ஆனந்தம்தான் என்பதை நம் ஆன்மா அறியும். ஆமாம், அதுவரை பலவகையிலும் உழன்று கொண்டிருந்த உடலுக்கும், புலன்களுக்கும், மனசுக்கும் ஒட்டு மொத்த விடுதலை! ஆழ்ந்து சிந்தித்தோமானால், உயிர் பிரிவதால் வலி ஏற்படுவதில்லை; அதற்குக் காரணமாக அமையும் உடல் நோய், அதனால் ஏற்படும் வேதனைகள், ஒருவேளை இறுதி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால், அதற்கு ஆகும் செலவு, நெருங்கியவர்களைப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஏக்கம்… இவற்றால்தான் வலி ஏற்படுகிறதே தவிர, உயிர் பிரியும் சமயத்தில் உண்டாவதில்லை.

அதை ``மரணாவஸ்தை’’ என்று வேண்டுமானால் சொல்லலாம். உடனிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அச்சமயத்தில் அவர் அதிக பட்ச துன்பத்தை அனுபவிக்கிறார் என்று தோன்றக்கூடும். ஹிரண்ய வதத்தை அவனுடைய கோணத்திலிருந்து நோக்கும்போது, அது வதம் அல்ல; இதம் என்பது புரியும். ஆமாம் தானே! பிரபஞ்சத்துக்குத் தலைவன் என்ற இறுமாப்பு கொண்டிருந்த அவன், தன்னைவிட மேலானவனாகப் பிறர் எண்ணிக் கொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனை அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். அவனுடைய புலன்கள் எல்லாம் அந்த இலக்கையே குறிவைத்து அவனை உத்வேகப்படுத்தின.

யாராலும், ஏன் அந்த நாராயணனாலுமே தன்னை அழிக்க முடியாது என்ற வகையில் மிக சாமர்த்தியமான வரத்தை அவன் பெற்றிருந்தான். ஆகவே, தனக்கு அழிவில்லை என்ற அகந்தையில் அவன் நாராயணனை அனைத்து உலகிலும் தேடி வந்தான். தன்னால் கண்டு பிடிக்க முடியாததால், நாராயணன் என்ற திருவுரு இல்லவே இல்லை. என்றோ அல்லது தனக்கு பயந்து எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது என்றோதான் அவன் நினைத்தான். இவ்வாறு எல்லா நேரங்களிலும் நாராயண ஸ்மரணையாக இருந்த அவனுக்குப் பிறந்த பிரஹலாதன், அதனாலேயே பரிபூரண நாராயண பக்தனாகத் திகழ்ந்தான்! நாளாக ஆக, தனக்குப் பிறந்தவனே தன் எதிரியைத் துதிபாடுவது கண்டு, வெகுண்டான் ஹிரண்யன். இப்போது அவனுக்கு இரண்டு எதிரிகள்! ஒரு கட்டத்தில், தான் விதிக்கும் எந்தவகை தண்டனையிலிருந்தும் தப்பிவிடும் பிரஹலாதனிடம் சமாதானத்துக்கு வந்தான்.

‘‘சரி, உன் நாராயணன்தான் உயர்ந்தவன் என்று நீ தீர்மானமாகச் சொல்கிறாய் அல்லவா, இப்போது அவனைக் காட்டு. நான் பிரபஞ்சமெல்லாம் தேடியும் கிடைக்காத அவன் இப்போது வருவான் என்றால், நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்’’ என்று சவால்விட்டான். உடனே பிரஹலாதன் வேண்டிக்கொள்ள, ஸ்ரீமன் நாராயணன், நரசிம்ம அவதாரம் எடுத்து ஒரு தூணைப் பிளந்து கொண்டு அவனுக்குக் காட்சியளித்தார். அந்த ஒரு நொடியில், தன்னை மரணம் சமீபித்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டான் ஹிரண்யன். ஆமாம், மனிதரல்லாத, விலங்குமல்லாத ஒரு பிறவியினால்தான் தனக்கு இறப்பு நிகழ வேண்டும் என்று அவன் பெற்றிருந்த வரம் இப்போது மெய்யாகிவிடும் போலிருக்கிறது! தான் கேட்டதுபோல பகல் மயங்கி, இரவு விழிக்கும் அந்தி வேளை அது என்பதும் இன்னொரு சமிக்ஞை.

ஆனால், வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல், வெளியேயும் இல்லாமல், எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் தன்னை வதைக்க வேண்டுமே? அது எப்படி இந்த மனித மிருகத்தால் முடியும்?

அவனுக்கு ஆவல் அதிகரித்தது. அந்த அனுபவம் எப்படி இருக்கும்? இந்த கட்டத்தில்தான் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் மரணத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் அவனுள் எழுந்தது. நரசிம்மம் அவனை அப்படியே தூக்கியது. உள்ளேயும் அல்லாத, வெளியேயும் அல்லாத வாசல் நிலைப்படிக்குக் கொண்டு சென்றது. சூரியன் மறைந்து பகலை விடைபெற்றுக் கொள்ளச் சொல்ல, நிலவு வரட்டுமா என்று இரவைக் கேட்ட அந்திப் பொழுது. பூமியில் அல்லாமல், நிலைவாசல் படியில் தானமர்ந்து, தன் மடியில் ஹிரண்யகசிபுவைக் கிடத்திக் கொண்டார் நரசிம்மர். `ம், ஆரம்பி,’ என்று ஆவலாய் காத்திருந்தான் அரக்கன். சிங்கமுகம் அவனை அச்சுறுத்தவில்லை, ஆனந்தப்படுத்தியது.

அணு அணுவாய் உயிர் பிரியும் ஆனந்தத்தை அவன் அனுபவிக்கத் தயாரானான். சிங்கக் கரங்களின் நீண்ட, கூரிய நகங்கள் கொண்ட விரல்கள் அவனது வயிற்றைக் குத்திக் கிழித்தன. அடடா, அது வலியா, சுகமா? கிழிபடும் தசை நார்கள், பிடுங்கி எடுக்கப்படும் குடல், ரணப்படுத்தப்படும் அங்கங்கள், ஹிரண்யகசிபு துடிக்கவில்லை, மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை, ஏகாந்தமாக நாராயணன் மடியிலேயே கிடந்தான்.

இந்த வேதனையும் ஒரு சுகமே! இதை அங்கீகரிப்பது போல தன் குடலையே மாலையாக நாராயணன் அணிந்து கொண்டிருக்கிறானே, இதைவிடப் பேறு வேறு என்ன வேண்டும்.... ``நாராயணா, நாராயணா, நாராயணா...’’தன்னைவிட, ஏன் உலகோர் அனைவரையும்விட உயர்ந்தவன் ஸ்ரீமன் நாராயணனே என்று அறிந்து கொள்ளவும், அறிவிக்கவும் தன் உடல் கசாப்பு செய்யப்பட்டு உயிர் பிரிக்கப்பட்ட இந்த அனுபவம் தனக்கு மகிழ்ச்சியையே தருவதாக ஹிரண்யன் உணர்ந்து கொண்டிருப்பான். ஆக, மரணம் என்பது பெருந்துக்கம் அல்ல; மகிழ்ச்சியான விடுதலை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இவ்வாறு உணர ஒரு யோகியால்தான் முடியும்.

``தம் வித்யாத்து கஸம்யோகவியோகம் யோகஸம்ஞிதம்

ஸ நிஸ்சயேன யோக்தவ்யோ யோகோ நிர்வண்ண சேதஸா’’ (6:23)

‘‘துக்க அனுபவங்கள் உன்னை அடையலாம்; ஆனால் அந்த துக்கம் உன்னை அடையாமல் பார்த்துக் கொள். அதாவது அந்த அனுபவம் உனக்குள் எந்த உணர்வு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கட்டும். இவ்வாறு துக்கத்திலிருந்து விலகி இருப்பதே யோகம். அந்த யோகத்தை அலுப்படையாத சித்தத்துடன், ஆழ்ந்த ஈடுபாட்டுடன், பயில வேண்டும்’’பொதுவாகவே எந்த வேலையில் நாம் ஈடுபட்டாலும் விரைவில் அயர்ச்சி அல்லது அலுப்பு ஏற்பட்டு விடுகிறது. ஒருவேளை அந்த வேலை நம் மனசுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட வேலையை எடுத்துக் கொண்டுவிட்ட பிறகு, அது முழுமையடையும் முன்னரே, அதில் சலிப்பு ஏற்படுவது இயல்பு. ஏனென்றால் எந்த வேலையானாலும் விரைவில் முடிந்துவிட அல்லது முடித்துவிட வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான்.

ஒரு வேலை முடிய இத்தனை நேரம் ஆகும் என்ற நம் அனுமானம் ஆரம்பத்தில் சரியாகவே இருக்கலாம். ஆனால் ஈடுபடும்போது ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ, அந்த வேலைப் ‘பயணத்தில்’ எந்தப் பகுதியாவது வெற்றிகரமாக உடன் இணைய முடியாவிட்டாலோ, சட்டென்று அலுப்பு ஏற்பட்டு விடுகிறது. இடர்களையும், தடங்கல்களையும் விலக்கி விட்டோ அல்லது சமாளித்துக் கொண்டோ, அந்த வேலை முடியும்வரை காத்திருக்க நமக்குப் பொறுமையில்லை.

பொதுவாகவே எல்லாமே நம் விருப்பத்திற்கேற்ப ஆடோமாடிக் ஆக நிகழுமானால் சந்தோஷம்தான். அப்படி நிகழ்ந்து விட்டால், அது நாம் மேற்கொண்ட முயற்சிக்கு அவமானமா அல்லது வெகுமானமா? ஆனால், அப்படி நிகழ்வது இல்லையே! ‘`தேர் ஆர் ஸோ மெனி ஸ்லிப்ஸ் பிட்வீன் கப் அண்ட் லிப்’’ என்று ஆங்கில சொலவடை ஒன்று உண்டு. டீ கோப்பையை நாம்தான் உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். அதை மேசை மீதிருந்து நம்முடைய வாயை நோக்கிதான் நாம்தான் கொண்டு செல்கிறோம்.

அதற்குள் என்ன தடங்கல் வந்துவிடப் போகிறது? வருகிறதே! பிடி நழுவலாம், எடுத்த வேகத்தில் டீ தளும்பி வழியலாம், பக்கத்தில் போய்க் கொண்டிருப்பவர் அவர் அறியாமல் நம் முழங்கையைத் தட்டி விடலாம், அந்த நேரத்துக்குள் டீக்குள் ஏதேனும் பூச்சி எங்கிருந்தேனும் பறந்து வந்து விழலாம். அதேசமயம், நம் எதிரே வந்து உட்காருபவர் ஏதோ கேட்க அவருக்கு பதில் சொல்ல முக்கியத்துவம் கொடுக்கலாம். மேலே விதானத்திலிருந்து பெயின்ட் காரை உதிர்ந்து விழலாம்.

‘`அந்த டீயைக் குடிச்சிடாதீங்க; தவறுதலாக அதிலே சர்க்கரைக்கு பதிலாக உப்பு போட்டுவிட்டேன்’’ என்ற எச்சரிக்கை குரல் வரலாம்….. இந்தத் தடங்கல்கள் நாமாக ஏற்படுத்திக் கொள்வதில்லைதான். ஆனாலும், வாய்ப்பு இருக்கிறது. இப்படி சாதாரண விஷயத்துக்கே இத்தனை இடையூறு என்றால், பிறவற்றிற்கும் வேறு வேறு வகையில் வரக்கூடும்.

இச்சமயத்தில், நாம் எவ்வாறு பொறுமை காக்கிறோம், சகித்துக் கொள்கிறோம், மாற்று ஏற்பாடு செய்து கொள்கிறோம் என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டியவை. யோகப் பயிற்சி மேற்கொள்பவருக்கு இவற்றைப் போல எத்தனையோ மடங்கு அதிகமாகவும், கடுமையானதாகவும் குறுக்கீடுகள் வரலாம். ஆனால், அவர் தன் இலக்கை நோக்கி எவ்வளவு உறுதியாகச் செல்கிறார் என்பது முக்கியம். ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கும்போது ஏற்படும் அலுப்பு ஒருவகை என்றால், அந்த முயற்சியால் பலன் கிட்டிய பிறகு ஏற்படும் அலுப்பு இன்னொரு வகை. நமக்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய ஒரு பலனுக்காக முயற்சிக்கும்போது அங்கே உற்சாகம் பொங்குகிறது, சலிப்படைவதேயில்லை. ஆனால், அது கைக்கெட்டிய பிறகு அலுத்துவிடுகிறது.

ஏனென்றால் மனம் இன்னொரு சந்தோஷமான விஷயத்தை நோக்கி நம் கவனத்தைத் திருப்புவதுதான். லௌகீக விஷயங்கள் சலனமற்ற நீரில் தெரியும் நம்முடைய பிம்பத்தைப் போல. ஆமாம், தலைகீழாகத் தெரியும்! ஆனால் பரமாத்மா ஈடுபாடு அத்தகையது அல்ல. பரமாத்மாவைக் குறித்த முயற்சிகள் ஒரு யோகிக்கு அலுப்பைத் தருவதேயில்லை. பரமாத்மா நிஜம் என்றால், யோகி அதன் நிழல். அதே பரிமாணத்தில் அவன் பரமாத்மாவை விடாமல் தொடர்கிறான். அப்படிப்பட்ட யோகியால்தான் களைப்படையாமல், அலுத்துக்கொள்ளாமல் யோகத்தில் சாதனை செய்ய முடியும் என்கிறார் கிருஷ்ணன். யோகப் பயிற்சி மேற்கொள்பவனுக்கு அலுப்பு என்பது ஒரு பெரிய தடைக்கல்.

அந்த உணர்வே அவனுக்கு வரக்கூடாது. தினசரி பூஜை செய்யும் ஒருவன், ஏதோ காரணமாக ‘இன்றைக்கு வேண்டாம், நாளைக்குச் செய்து கொள்ளலாம்’ என்று அன்றைய பூஜையைத் தவிர்ப்பானேயாகில், அவன் தினசரி பூஜையில் அலுத்துவிடுகிறான் என்று அர்த்தம் அல்லது அந்த நேரத்தில் அதைவிட முக்கியமாக அவனுக்குத் தோன்றும் பணியில் அவன் ஈடுபட விரும்புகிறான் என்று அர்த்தம்.

அதாவது இப்படி குறுக்கிட்டப் பணியின் பலன் உடனே கிடைத்துவிடும் என்பதாலும், பூஜையின் பலன் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருப்பதாலும் ஏற்படும் அலுப்பு அல்லது ஒத்திப் போடுதல் அது. கீதையின் அடிநாதமான, ‘பலனை எதிர்பாராதே, கடமையைச் செய்’ என்பது ஒவ்வொரு கட்டத்திலும் நிலை நிறுத்தப்படுகிறது என்றே சொல்லலாம். அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் கிருஷ்ணன், அந்த அடிநாதத்தைப் பல வார்த்தைகளால் கோர்த்து, பல வகையாக இசைத்து உணர்த்த விரும்புகிறார்.

பலனை எதிர்பார்ப்பவன்தான் அதற்கான காலகெடுவையும் ஊகிக்கிறான். அது, ‘விரைவில்’ என்ற அவனுடைய ஆசையை நிராசையாகவும் மாற்றிவிடும். இத்தனை நாளைக்குள் என்ற எதிர்பார்த்தல், அவனே அறியாமல் அந்தக் காலக் கெடுவைக் குறைத்துக் கொண்டே வந்து, நாளைக்கே, இன்றே, இப்போதே என்றெல்லாம் சுருங்கி, பிறகு ஒன்றுமில்லாமல் போய்விட, அவன் அயர்ச்சியுறுகிறான்.

களைப்பும், அலுப்பும் நீங்க, ஒருவனுக்கு ஆர்வம் அதிகரிக்க வேண்டும். தாம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபாடு, அது முழுமையாக நிறைவேற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இவற்றை அந்த ஆர்வம் வளர்க்கும்.அதற்குப் பிறகு கிட்டும் பலன் உன்னதமானதாக இருக்கும்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்