Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அபூர்வ வடிவில் ஆஞ்சநேயர்

சென்னை, வண்டலூர் அருகில் உள்ள திருத்தலம் புதுப்பாக்கம். இங்கு திருமலை என்றிட்ட கஜகிரியில் சாளக்கிராமக் கல்லாக, சுயம்புவாக, ஆயுதங்கிளின்றி நிராயுதபாணியாக, பறக்கின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றான் வீரஆஞ்சநேயன். மலைமேல் 108வது படியின் மேல், சுயம்புவாக, உடலை கிழக்கு நோக்கியும், முகத்தை வடக்கு நோக்கியும், ஒரு காலை பூமியில் ஊன்றியும், மற்றொரு காலை பறக்கும் வண்ணமும், வாலில் மணிகளோடும், தொப்புளிலிருந்து தாமரை மலர் தோன்றியிருக்கின்ற அற்புதக் காட்சியோடு வீர ஆஞ்சநேயன் அருள்பாலிக்கின்றான். பொதுவாக, திருமாலின் நாபியில் கமல வடிவில் பிரம்மனை பார்த்திருக்கின்றோம். இங்கே ஆஞ்சநேயனின் தொப்புளில் கமலம் பூத்து நிற்பது ஒரு அபூர்வ வடிவாகும்.

மீசையுடன் ராமர்!

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ராமபிரான் கைகளில் வில், அம்பு ஏந்தி முறுக்கிய மீசையோடு காட்சியளிக்கிறார். அசுர வதைக்காக ஸ்ரீ ராமன் போர்க்கோலம் பூண்டதையே முறுக்கிய மீசை உணர்த்துகிறதாம்.

நந்தி கையில் கத்தி!

பொதுவாக அதிகார நந்தி வடிவங்கள் சிவனை வணங்கும் பாவனையிலேயே அமைக்கப்படும். திருநாகேஸ்வரத்தில் அதிகாரநந்தி வாளுடன் இருக்கும் வித்தியாசமான அமைப்பு காணப்படுகிறது. கருங்கல் மண்டபத்தில் வலப்புறம் உள்ளது இந்த விக்கிரகம். சிவபெருமான் இத்தலத்தில் நந்திக்கு வீரவாள் அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

உயர்ரக தங்க விக்கிரகம்

மதுரைக்கு அருகில் உள்ளது அழகர்மலை. இத்தலத்து பெருமாளுக்கு கள்ளழகர் என்று ஒரு பெயர் உண்டு. இவரது உற்சவமூர்த்திக்குத் தான் அழகர் என்றும், சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உள்ளன. இந்த விக்கிரகம் அபரஞ்சி-- என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது. இந்த மூர்த்திக்கு இங்குள்ள மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்பட வேண்டும். பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும். இது போன்ற அபரஞ்சி விக்கிரகம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துளசி தீர்த்தம், விபூதி பிரசாதம்

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராஜபாளையம் திருத்தலத்தில் சங்கர நாராயணர் திருக்கோயில் இருக்கிறது. சிவன், அம்பாள் சந்நதிக்கு நடுவில் சங்கர நாராயணர் சந்நதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறார்.

திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசி மணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரமம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறார்.இச்சந்நதியில் காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தம் தரப்படுகிறது. மற்ற நேரங்களில் விபூதி பிரசாதம் தருகின்றனர்.

வினோத தல விருட்சங்கள்

திருமறைக்காடு திருத்தலத்தின் கோயிலில் இருக்கும் தல விருட்சமான புன்னை மரத்தின் காயில் பருப்பு இருப்பதில்லை.திருநாகைக் காேராணம் தலத்துக் கோயிலின் தல விருட்சமான மாமரத்தின் இரண்டு கிளைகளிலும் இரண்டு விதமான சுவையுடைய பழங்கள் காய்க்கின்றன.

திருமருகல் தலத்துக் கோயிலின் தல விருட்சமான வாழை, மலை வாழை இனத்தைச் சார்ந்தது. சிறியதாகத் தாள் வளர்கிறது. கோயிலுக்கு வெளியே வளர்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்புவனம் தலவிருட்சமான வேர்ப்பலா மரத்தில் ஒரு பழம் தான் பழுக்கும். ஒன்றுக்கு மேல் பழுத்தால் ஊரில் நன்மை அல்லது தீமை ஏற்படுமாம்.

நாகலட்சுமி