Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அச்சம் தவிர்ப்பாள் அனிதாகரி யோகினி

இந்த யோகினி மற்ற யோகினியைப்போல மிருகத்தலை கொண்டவள் இல்லை. மனிதத்தலைதான் கொண்டிருக்கிறாள். ஆனால் அதிலும் ஒரு விசித்திரம் இருக்கத்தான் செய்கிறது.இந்து சமயத்தில் மகான்கள் இறைவனிடம் வேண்டுவது முக்தி என்னும் பிறவாத நிலையே. இந்த முக்தி பலவகைப்படும். சாரூப முக்தி, சமீப முக்தி, சாலோக முக்தி இப்படி பலவகைப்படும்.

சாலோக முக்தி என்றால், இறைவனோடு, இறைவனுடைய லோகமான கைலாசம், வைகுண்டம் போன்ற இடங் களில் வசிப்பது. சாமீப முக்தி என்றால் இறைவனுக்கு அருகிலேயே வசிப்பது. சாரூப முக்தி என்றால் இறைவனை நினைத்து நினைத்து நாமும் இறைவனைப் போலவே காட்சி தருவது.நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் என்று கண்ணன் பகவத் கீதையில் சொன்னதுபோல இறைவனை நினைத்து இறைவனாகவே ஆன முக்தர்களை, சாரூப முக்தர்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆதி சக்தியான காளிதேவிக்கு பக்தியோடு சேவகம் செய்து செய்து, அன்னையையே நினைத்து நினைத்து பக்தி செய்து அன்னையைப் போலவே காட்சி தருகிறாள், இந்த யோகினி.

1.காளிதேவியும் அனிதாகரி யோகினியும்

காளி தேவியைப் போலவே இந்த யோகினியும் அதிபயங்கரமாகவும் அதி உக்கிரமாகவும் காட்சி தருகிறாள். நமக்கு ஆவேசம், வெறும் கோபம் தான். இறைவனுக்கு வரும் ஆவேசம் அல்லது கோபம், தர்ம ஆவேசம் என்று அழைக்கப்படுகிறது.

தர்மத்தை காக்கவும், அதர்மத்தை அழிக்கவும், சாதுக்களை ரட்சிக்கவும் இறைவன் கோபம் கொள்கிறான். கன்றுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் கொதித்து எழுந்து ஊரையே முட்டித் தள்ளும் பசுமாட்டை போல, தனது பக்தர்களை காக்க இறைவன் கோபம் கொள்கிறான். இதனால்தான் சாது மிரண்டால் காடு தாங்காது என்று சொல்கிறோம்.

அந்த வகையில், தர்ம ஆவேசத்துடன் அதி பயங்கரமாகவும் அதி கோரமாகவும் காட்சி தருகிறாள், இந்த யோகினி. இந்த யோகினியின் கருவிழி கோபத்தால் மேலே சொருகிப் போய், நமக்கு கண்ணின் வெள்ளைப் பாகம் மட்டுமே தெரியும்படி அதி பயங்கரமாக இந்த தேவியின் கண்கள் காட்சி தருகிறது. சினம் கொண்டு சிலிர்த்து எழுந்த சிங்கத்தின் பிடரி மயிரைப்போல, இவளது கேசமும் சிலிர்த்துக் கொண்டு காட்சி தருகிறது.

இந்த அனிதாகரி யோகினி விசித்திரமான யோகினி என்றால் அது மிகையில்லை. இவள் அம்பிகையின், அழித்தல் சக்தியின் வெளிப்பாடாக கருதப்படுகிறாள். மற்ற யோகினிகளைப்போல இல்லாமல் இவள் சுடுகாட்டில் விரும்பி வசிக்கிறாள். அழகுப் பதுமைகளாக மற்ற யோகினிகள் காட்சி தரும் போது, இவள் அதி பயங்கரமாக காட்சி தருகிறாள். மரணத்தின் அதி தேவதையாக அல்லது பிரதிநிதியாக இந்த யோகினி கருதப்படுகிறாள். அதை உணர்த்தவே இவள் ஒரு மனிதத்தலையின் மீது அமர்ந்திருக்கிறாள்.

இறைவனை நமது கண்ணில் இருந்து மறைப்பது மும்மலங்கள். இவை ஆணவம், கன்மம், மாயை எனப்படுகிறது. இந்த, நான் எனது என்னுடைய, என்ற ஆணவம் அழியும்போது தான் ஆனந்த மயமான இறைவன் தோன்றுகிறான். ஆன்மிக சாதனையில் முன்னேறும் பக்தனுக்கு, தடையாக இருக்கும் அவனது ஆணவத்தை அழித்து பேரின்பம் தருபவள் இந்த யோகினி என்பதைக் காட்ட, மனிதத் தலையை தரையில் அழுத்தியபடி அமர்ந்திருக்கிறாள்.

2. திரிசூலமும் ரத்த பாத்திரமும்

அதி பயங்கரமாக காட்சி தரும் இந்த யோகினி கையில் ஒரு சூலத்தை தாங்கி இருக்கிறாள். இந்த திரிசூலம், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்கால ஞானத்தை காட்டுகிறது. விழிப்பு நிலை, உறக்க நிலை, விழிப்பும் உறக்கமும் கலந்த நிலை என்ற மூன்று நிலைகளிலும் பாதுகாப்பு தருபவள், இந்த யோகினி என்று இது காட்டுகிறது.

தெய்வங்களால் அல்லது இயற்கையால் வரும் ஆபத்து, மற்ற உயிர்களால் வரும் ஆபத்து, தனக்குத்தானே தரும் ஆபத்து என்ற மூன்று ஆபத்தையும் நீக்குபவள் இந்த யோகினி என்பதை இவள் கையில் இருக்கும் சூலம் காட்டுகிறது.கையில் ரத்தம் நிறைந்த காபாலமும் காட்சி தருகிறது. இந்த யோகினியின் கையில் இருக்கும் கபாலம், சிவ தத்துவம். அதில் நிறைந்திருக்கும் ரத்தம், சக்தி தத்துவம். சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் கபாலத்தை இந்த யோகினி தாக்குவதாக புரிந்து கொள்ளலாம். இந்த யோகினி, பேய்கள் ஆவிகள் போன்றவற்றை விரட்டி அடித்து, அவற்றின் ரத்தத்தை குடிப்பதால் இவள் கையில் ரத்தம் நிறைந்த கபாலம் காணப்படுகிறது. அதாவது துஷ்டர்களை அழிப்பவள் என்பது கருத்து.

3. விக்ரமாதித்த மகாராஜாவுக்கு அருளிய யோகினி

காளிதேவியின் அருள் பெற்ற விக்ரமாதித்த மகாராஜாவின் ஆசைக் குதிரைக்கு, இன்னதென்று சொல்ல முடியாத ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது. எப்படிப்பட்ட பெரிய வைத்தியரால்கூட அந்த நோயை குணப்படுத்த முடியவில்லை. அந்த சமயம் விக்ரமாதித்த மாமன்னனுக்கு காளிதேவி கனவில் வந்து வழிகாட்ட, இந்த யோகினியை வழிபட்டான். இந்த யோகினியின் அருளால், அவனது குதிரையும் நலம் பெற்றது என்று வரலாறு சொல்கிறது.

4. மகாபாரதத்தில் யோகினி

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு, தேவியின் கட்டளைப்படி சூட்சும ரூபத்தில் இந்த யோகினி எப்போதும் துணையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. எமனின் பிரதிநிதியாக இந்த யோகினி சொல்லப் படுகிறாள். ஆகவே, இவளை வழிபட்டால் மரண பயம் நீங்கும். அகால மரணத்தை தடுக்கலாம். தீராத நோய்களையும் இந்த யோகினியின் வழிபாடு தீர்க்கும் என்ற

நம்பிக்கையும் உள்ளது.

5. இந்த யோகினியின் வாகனம்

பைரவருக்கு எப்படி நாய் வாகனமோ, அதுபோல இந்த யோகினியும் நாயை வாகனமாக கொண்டிருக்கிறாள். மந்திர தந்திரம் செய்பவர்கள் இந்த யோகினியை பூஜித்து பல விசித்திர சக்திகளை எளிதில் பெறுகிறார்கள்.நாய்கள் எப்படி தீய சக்திகளை எளிதில் மோப்பம் பிடிக்குமோ, அதேபோல இந்த யோகினியும் தீய சக்திகளை அடக்கி தன்னிஷ்டம் போல ஆட்டிப் படைக்கிறாள். பக்தர்களுக்கு உபாசனையின் முடிவில் பல அமானுஷ்ய சக்திகளைத் தருகிறாள்.

ஜி.மகேஷ்