``திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே’’
- என்று திருவாடிப்பூரத்தன்று இந்த உலகில் நாம் எல்லோரும் உயர்வடைய கருணையை மட்டுமே தன் விலாசமாகக் கொண்ட பூமாதேவி, ஆண்டாளாக திரு அவதாரம் புரிந்த அந்த நன்னாளைக் கொண்டாடி மகிழ்கிறது, ஆண்டாளின் வாழி திருநாமம். மாலை, திருமாலை தன் பாமாலையால் விலங்கிட்டவள் கோதை என்றே கொண்டாடப்படும், ஆண்டாள்.
தன் பாமாலைகளால் அல்லவா அரங்கனை ஆண்டாள்? மற்ற ஆழ்வார்கள் பகவானைப் பற்றிய பிரபந்த பாசுரங்களை அருளும் போது, தங்களை தாயாக, தோழியாக, நாயகியாக என தங்களைப் பெண்ணாக ஏறிட்டுக் கொண்டு, நாயகி பாவத்தில் பாடினார்கள். ஆனால், ஆண்டாளின் ஏற்றம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, பகவான் மீது தனது
உண்மையான பக்தியையும், அன்பையும் தன் பாசுரங்களின் வழி வெளிப்படுத்தியதுதான்.
``போக்தும் தவ ப்ரியதமம் பவதீ இவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த:
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா:
- என்று ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன், தான் அருளிய “ஸ்ரீ கோதாஸ்துதி”யில், இந்த கருத்தை அல்லவா அழகாய் கொண்டாடுகிறார்?
பூமாதேவி கோதையாக, ஆண்டாளாக எதற்காக திரு அவதாரம் புரிந்தாள் என்பதே ஒரு அற்புதமான வைபவம். அவளது கருணையின் ஸ்வரூபத்திற்கு எடுத்துக் காட்டாய் இருக்கும் வைபவம். திருமால், வராஹ அவதாரம் எடுத்து பூமியை, பூமி பிராட்டியை தூக்கி நிறுத்திய போது, கருணையின் பிறப்பிடமானவளும், இருப்பிடமானவளுமான, அந்த பூமிதேவியானவள், ஒரு தாய்க்கே உரிய பாசத்தால் ஓ... வென்று அழுதாளாம்.
உடனே வராஹ மூர்த்தி அவளிடம், “நான்தான் உன்னை காப்பாற்றி விட்டேனே. உன்னுடைய துன்பங்களை எல்லாம் தீர்த்து விட்டேனே. பின் எதற்காக அழுகிறாய்?” என்று கேட்க, அதற்கு பூமாதேவியோ, நம்மை எல்லாம் மனதில் கொண்டு, நமக்கெல்லாம் நன்மைகள் செய்ய வேண்டுமே என்பதை மட்டுமே மனதில் நிறுத்தி, தன்னைத் தூக்கி நிறுத்திய வராஹ பெருமாளிடம்,
ஸ்ரீ ப்ருத்யுவாச;
``அஹம் சிஷ்யாச தாஸீச
பார்யாச த்வஸி மாதவ
மத் க்ருதே ஸர்வ பூதாநாம்
லகூபாயம் வத ப்ரபோ’’
“உன்னுடைய சிஷ்யை, பார்யை நான். நான் கூக்குரலிட்டு அழைத்தபோது வந்து என்னைக் காப்பாற்றி விட்டாய். இதோ பூமியான என் மேல், எத்தனையோ கோடி சராசரங்கள் அவஸ்தைப் படுகிறார்கள். இந்த சம்ஸார சாகரத்தில் உழலும் கோடானுகோடி ஜீவாத்மாக்களை காப்பாற்ற, அவர்கள் அழைத்தால் வருவீர்களா?” என்று பூமாதேவி கேட்க, அப்போது வராஹ பெருமாள், உபதேசித்த மூன்று விஷயங்களைத்தான் பூமி பிராட்டியின் (பூமா தேவி) அவதாரமான கோதா பிராட்டியான ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் வழி உபதேசிக்கிறாள். அப்போது பகவான் சொன்ன மூன்று விஷயங்கள்;
*முதலாவது, பகவானின் திருநாமத்தை வாய்விட்டு நாம உச்சாரணம் செய்ய வேண்டும்.
*இரண்டாவது, பகவானின் திருவடி களில் மலரிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
*மூன்றாவது, பகவானுடைய திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்த மூன்றையும் மூப்பு தட்டிய பிறகு செய்யலாம் என்று இல்லாமல், இளம் வயதிலேயே செய்ய வேண்டும் என்கிறார் திருமால். அந்திமக் காலம் இந்த மூன்றையும் கடைப் பிடித்த ஒருவனை நெருங்கும் சமயத்தில், அவன் எல்லாவற்றையும் மறந்து இறக்கும் சமயத்தில் இருக்கும்போதும், நான் அவனை மறக்க மாட்டேன். அவன் என்னுடைய பக்தன். என்னுடைய திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்தவன். அவனை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன். நானே வந்து அவனை அழைத்துக் கொண்டு போவேன் என்று பகவான் சொல்ல சொல்ல... பூமாதேவிக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டானதாம். பகவான் சொன்ன விஷயங்களை எல்லாம் அப்படியே முடிச்சு போட்டுக் கொண்டாள்.
எல்லா அவதாரங்களையும் வரிசையாக எடுத்த திருமால், கிருஷ்ணாவதாரத்தையும் முடித்துக் கொண்டு, ஸ்ரீ வைகுண்டத்தில், ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி சமேதனாக நித்ய சூரிகள் புடை சூழ அமர்ந்திருந்த ஒரு சமயத்தில், பூலோகத்தைப் பார்த்தானாம். பூலோகத்தில் அடுக்கடுக்காய் பல துயரங்கள் நடந்து கொண்டிருப்பதை பார்த்த கிருஷ்ண பரமாத்மா “பகவத் கீதையை சொல்லிவிட்டு வந்தோமே. ஆனாலும் யாருமே அதை பின்பற்றுவது போலத் தெரியவில்லையே” என்று சொல்லிவிட்டு அங்கே அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீ தேவியான மகாலட்சுமியை பார்த்து,
“நான் கீதையைச் சொன்னது பிரயோஜனப்படவில்லை.என் வாக்கு சரியில்லை போலும். அதனால் நீ அவதாரம் எடுத்து, கீதார்த்தத்தை பூலோகத்தில் சொல்லி உலகத்தை திருத்த வேண்டும்” என்று கேட்டாராம். அனபாயினியாக அதாவது பெருமாள் செய்யும் அத்தனை அவதாரங்களிலும் கூடவே திரு அவதாரம் செய்யும் மகாலட்சுமி, தான் ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் பெருமாளோடு கூடவே வந்த போதும், பல துன்பங்களை பட்டுவிட்டேன். அதனால் தனியாக சென்று திரு அவதாரம் புரிய மாட்டேன் என்றுகூறி விட்டாளாம்.
ஸ்ரீ தேவி தாயாரிடம் சொன்ன அதே விஷயத்தை, திருமால் இந்த பக்கமாக திரும்பி, பொறுமைக்கு எல்லை நிலமாய் நின்று, அடியார்களின் குற்றங்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் பூமாதேவியிடம் சொன்னாராம். பொறுமையே உருவானவள் என்ற பெருமையின் உருவமானவள் அல்லவா பூமாதேவி? நாம் எவ்வளவுதான் தப்பு செய்தாலும், அதை அப்படியே திருமாலிடம் சொல்ல மாட்டாளாம். மாறாக, நாம் ஒரே ஒரு துளி நல்லது செய்துவிட்டால்கூட போதும், அதை அப்படியே பெரிதுபடுத்தி அவனிடத்திலே சொல்லி விடுவாளாம்! அப்படிப்பட்டவளிடம்தான் பகவான், “மகாலட்சுமி சொன்னதை எல்லாம் நீயும் கேட்டாய். இப்போது நீ போய் கீதாசாரத்தை எடுத்துச் சொல்லி, உலகத்தில் உள்ளவர்களை திருத்துவாயா?” என்று கேட்க, “அதற்காகத்தானே காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன் ஸ்வாமி” என்றாளாம்.
வராஹ அவதாரத்திலே, வராஹ மூர்த்தியின் மூக்கின் மேலே உட்கார்ந்திருந்த போது, தான் கேட்ட மோட்சத்திற்கான வழிக்கு, பகவான் சொன்ன மூன்று விஷயங்களுக்காக போட்ட மூன்று முடிச்சுக்களோடு, பூமாதேவி கலியுகத்தில் அபார கருணையால், ஒரு நளவருடம், ஆடி மாதம், சுக்லபட்சம் சதுர்த்தி திதி சேர்ந்த செவ்வாய்க்கிழமையும், அர்யமா எனும் தேவனுக்குரிய பூர நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில், அயோனிஜையாக, துளசி வனத்தில் திருஅவதாரம் புரிந்து பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்து, திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்களின் வழி, பகவானின் முதல் உபதேசத்தை வலியுறுத்தி “பேர் பாடு” என்று எடுத்துக்காட்டி, அடுத்த 11 முதல் 20 பாசுரங்களில், அவன் தன் திருவடியில் மலரிட்டு அர்ச்சனை செய்யுங்கள் என்று உபதேசித்து, 21 முதல் 30வது திருப்பாவையின் வழி, பகவானின் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்யுங்கள் என்றல்லவா உபதேசித்திருக்கிறாள்?ஆண்டாளின் திரு அவதார நன்னாளான திரு ஆடிப்பூரத்தை, அவள் சொல்லித் தந்த உபதேசங்களை கடைப்பிடித்துக் கொண்டே கொண்டாடுவோம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
நளினி சம்பத்குமார்



