Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மானிடர் உய்ய ஓர் அமிர்தம்

சஞ்சீவி மூலிகையைத் தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை. அதனினும் மேம்பட்ட ஒரு மூலிகையை வானோர்கள் நமக்குத் தந்துள்ளனர். அதுதான் வைத்தீஸ்வரன் கோயிலில் குடி கொண்டிருக்கும் வைத்தியநாதசுவாமி. இந்த இறைவன், சஞ்சீவி மூலிகை உள்ளிட்ட எண்பத்து எட்டு கோடி மூலிகையைக் கொண்ட சக்தியை உடைய லிங்க வடிவம் என்கிறது நாடி. இதனை அகஸ்தியர்,

‘‘எண்பத்தெட்டு கோடி வகை மூலிகை தம்பலம் கூடியவன் - தைலாம்பிகையை தன் பக்கத்தில் கொண்டான் - குறைவின்றி மாந்தர் பிணி போக்க கொலுவீற்றிருப்பான் புள்ளிருக்கவேளூர் தலத்தே’’ என்கிறார். புள்ளிருக்கவேளூர் என்பது முன்னை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இருந்த பெயர். எப்படிப்பட்ட நோயையும் குணமடையச் செய்யும் சக்தி, இந்த இறைவனுக்கு உண்டு. யம பயத்தை போக்குவதுடன், காலனைக் காத்திருக்கச் செய்யும் சக்தி படைத்தவன் ஆவான் என்கிறது பழம்பெருநூல்.

‘‘காலனே காத்திருக்கும்படி வாயுளை நீட்டிக்கும் ஆற்றலும் அண்ணலிவனுக்குண்டே’’ என்கிறார் சித்தர். கையில் நோயை குணஞ்செயும் தைலமதனைக் கொண்டவள் தையல்நாயகியாம் - வைத்தீஸ்வர சுவாமியின் பிராட்டியார். இங்குள்ள புஷ்கரணியை,

‘‘சித்தாமிர்த தீர்த்த புஷ்கரணீ என்பார் தேவர்’’. தேவாமிர்தம் என்பது தேவர்க்கும், அமரர்க்கும் உரித்தது. ஆனால் மானிடர் உய்ய ஒரு அமிர்தம் வேண்டும் என்று அங்காரக பகவான் தவம் செய்து பெற்றதுதான் இந்த சித்தாமிர்தம் என்ற தெய்வக் குழம்பு. செவ்வாய் பகவான் இந்த மண்ணில் கலந்துள்ளார். இந்த பொய்கையில் நீராடிய பின்னர்தான் வைத்தியநாத சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது நியதி. ஆகம விதி சற்றும் பிசகாது அமைந்துள்ள இந்த சித்தாம்ருத தீர்த்த குளத்தில் தேவர்களும் நீராடி புனிதமடைகின்றனர் என்றால் நமக்கு வியப்பு மேலிடுகிறது.

இந்த புண்ணிய சேத்திரத்தில் குணப்படுத்த அதிக சிரமம் உடைய குஷ்டரோகம் என்ற நோய் முற்றிய நிலையில் வேதனை தாங்காது அங்காரகன் என்று ஜோதிட வல்லுநர்களால் அழைக்கப்படும் செவ்வாய் கிரக அதிபதியே - ஒரு முகூர்த்த காலம் மூழ்கி நீராடி இறைவனை வழிபட, குஷ்டரோகம் முழுவதுமாக விலகிற்று என்கிறது நாடி சாஸ்திரம்.

‘‘பட்ட பீடை குட்டந்தன்னால் பட்டது கண்டோம் - முகூர்த்த காலமது குஜனவன் சித்ராமிர்த பொய்கை மூழ்கி வயித்தியநாதனை தொழவே’’ என்கிறார் அகத்தியர். இந்தப் பொய்கையில் நீராடி இறைவனை வழிபட்டால், நோய் மட்டும் நீங்கும் என எண்ணாதீர். செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் எல்லாமும் கண்டிப்பாக நீங்கும். ஆயுள் வலுப்பெறும். அன்று பிரம்மன் எழுதிய ஆயுட்காலம் முடிந்தாலும், மார்க்கண்டேய மகரிஷிக்கு கிட்டிய பேறு நமக்கும் கிட்டுகிறது. ஆயுள் நீடிக்கும். இதனையே, ‘‘காலனும் காத்திருப்பான்’’ என்கிறது பாடல். இந்த தலத்தில்தான் ஜடாயு குண்டம் என்று ஒன்று இருக்கிறது. சீதாபிராட்டியாரை சிறை எடுத்து ராவணேஸ்வரன் செல்கையில் அவனை தடுக்க முற்பட்ட ஜடாயு என்ற பட்சிராஜனை ராவணன் தூக்கி வீச ஜடாயு விழுந்த இடம்தான் இந்த வைத்தீஸ்வரன் கோயில்.

முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனால் ஜடாயு, ராம - லட்சுமணரை தரிசித்தான். ராவணனே சீதையை சிறை எடுத்து தெற்கு நோக்கி சென்றான் என்ற செய்தியை ராமபிரானுக்கு உரைத்து, பிறகு உயிரை விட்ட இடம் இது. உலகத்தையே உண்டு உமிழ்ந்து அளந்த அந்த சிவதனுசுவை முறித்த இறைவனே தனது பொற்கரங்களால் பட்சிராஜனாம் ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்து முடித்தான். ஜடாயுவின் அஸ்தியைக் கொண்ட கலசம் புதையுண்ட தலமே ஜடாயு குண்டம் என்பது.

பக்தி, தியாகம், சத்தியம் போன்றவற்றின் இருப்பிடமான இந்த ஜடாயு ஆழ்வானை நெஞ்சார துதிப்போர்க்கு எப்படிப்பட்ட பாவியாயினும் மோட்சம் கிட்டும் என்கிறார், அகத்தியர்.

‘‘பிறாந்தாரிலுயர்ந்தார் சடாயுவெனும் பறவைக்கரசனே - ராமனுமிவர்க்கு கொள்ளியிட தேவரும் போற்றி தொழுந் தெய்வ லோகமிது சடாயு குண்டமென விளங்க நாடி ஓடி தொழுது சன்ம சாப மோசனங் கொள்வீரே’’. ஆறுமுகமான முருகப் பெருமான் சூரபத்மனை வதைக்க அவனுடன் யுத்தம் செய்தபோது பலவிதமான காயங்களுடன் அவதிப்பட்டு, இங்குள்ள புஷ்கரணியில் மூழ்கி, வைத்தியநாத சுவாமியை வழிபட காயங்கள் மறைந்து முத்துக் குமார சுவாமியாய் இன்றும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறான்.

செவ்வாய்க் கிழமை, ராகு காலம் மற்றும் அஸ்தமன சமயங்களில் இவரைத் தொழுபவர் வாழ்வில் எவ்வளவு வடுக்கள் வந்தாலும் மறையும் என்கிறது நாடி சாஸ்திரம்.