Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தாண்டவத்திலும் சாட்சியாக இருந்து தரணியாளும் அம்பிகை

231. மஹாபைரவ பூஜிதா

சென்ற இதழின் தொடர்ச்சி...

மஹா பைரவ பூஜிதா - இப்படியெல்லாம் எல்லாவிதமான மஹா யாக கிரமங்களும் நடக்கிறதே. மஹா ஆசனத்தில் அமர்ந்திருப்பவளை மஹா தந்த்ரம், மஹா மந்த்ரம், மஹா யந்த்ரம் மூலமாக பூஜிக்கிறோம். இவ்வளவு பெரிய விஷயங்களை நமக்கு யார் காண்பித்து கொடுக்கிறார்களெனில், சாட்சாத் ஆத்ம சொரூபமாக இருக்கக்கூடிய, சிவபெருமானாக இருக்கக்கூடிய, காமேஸ்வரனே காண்பித்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு மஹா பைரவர் என்று பெயர். அந்த மஹா பைரவரே இங்கு பூஜை செய்பவராக வருகிறார். உதாரணமாக, நமக்கு ஒரு பூஜையை குருநாதர் கற்றுக் கொடுக்கிறார். அவருக்கு அவருடைய குரு. இப்படியே போனால் அந்த குரு பரம்பரை சிவ பெருமானிடம் மஹா பைரவரிடம்போய் முடியும். மேலே சொன்ன அனைத்து கிரமங்களையும் சாட்சாத் பைரவரே காண்பித்துக் கொடுப்பதால், அவளுக்கு மஹா பைரவ பூஜிதா என்று பெயர். மஹா பைரவரே இப்படித்தான் வழிபாடு செய்கிறார். மஹா பைரவராக இருக்கின்ற சிவனாலேயே பூஜிக்கப்பட்டவள், அதனாலேயே மஹா பைரவ பூஜிதா என்று பெயர்.இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. இந்தக் கிரமத்தில் அவன் பூஜையை செய்யச் செய்ய, மஹா பைரவ நிலையை அடைந்து விடுகின்றான். இந்த ஜீவாத்மா உபாசகன் சாதகனாகி, பக்தனாகி, ஞானியாகி, அம்பாளை தன் இருதய ஸ்தானத்தில் பார்த்து இறுதியில் அந்த மஹா பைரவ நிலையை அடைந்து விடுகிறான். இந்த உபாசனை செய்யும்போது சாட்சாத் பைரவமாகவே இருந்து கொண்டுதான் பூஜிக்கிறோம். அங்கு பூஜிப்பவன், பூஜிக்கப்படும் விஷயம் என்று துவைதம் இல்லை என்பது சூட்சுமமான விஷயம்.

இதற்கு முன்னர் சொன்ன ஆறு நாமங்களுக்கான கோயிலை பார்ப்போமா!

நாம் இங்கு பாஸ்கரராயரை சொல்லியிருக்கிறோம். பாஸ்கரராயருக்கு மிகவும் நெருக்கமான கோயில். அந்தத் தலத்திற்கு திருக்கோடிக்காவல் என்று பெயர். இங்கு த்ரி கோடி மந்த்ர தேவதைகள். மூன்று கோடி மந்த்ர தேவதைகள் சுவாமியான கோடீஸ்வரரையும், திரிபுரசுந்தரியையும் பூஜித்திருக்கிறார்கள். அம்பாளுக்கு கீழே யந்த்ர சொரூபம் இருக்கிறது. மந்த்ர தேவதைகள் பூஜித்திருக்கிறார்கள். இப்படி தந்த்ர, மந்த்ர, யந்த்ர சொரூபிணியாக அம்பாள் இருக்கிறாள். இதற்கெல்லாம் மேலாக அம்பாளின் நாமமே திரிபுரசுந்தரி ஆகும். பாஸ்கரராயர் பாஷ்யம் எழுதும்போது இந்த அம்பாளை பிரார்த்தனை செய்வதாகவும் உபாசித்ததாகவும் அவரது சரித்திரம் சொல்கிறது. இந்த தலம் ஆடுதுறை மற்றும் சூரியனார் கோயிலுக்கு அருகேயுள்ளது.

அடுத்ததாக கீழேயுள்ள நாமங்களை பார்ப்போம்

232. மகேஸ்வர மஹாகல்ப, மஹா தாண்டவ ஸாக்ஷிணீ.

233. மஹா காமேஸ மஹிஷீ.

234. மஹா த்ரிபுர சுந்தரி.

இதற்கு முன்பு நாம் ஒவ்வொரு நாமத்தையும் பார்த்துக் கொண்டே வருகிறோம். அதில் ஒவ்வொரு நாமத்திலும் மஹா… மஹா… என்று சொன்னது போதவில்லை என்பதுபோலும், ஒரே நாமாவில் மஹா... மஹா… மஹா… என்று வர்ணிக்கின்றனர்.

அதாவது, மஹா ஈஸ்வர… மகேஸ்வர. மஹா கல்பம், மஹா தாண்டவ ஸாக்ஷிணீ என்று வர்ணிக்கிறார்கள். இங்கு மகேஸ்வரன் மகா கல்பத்தில் மகா தாண்டவம் செய்யும்போது அம்பாள் சாட்சிணீயாக இருக்கிறாள்.

மகேஸ்வரன் என்றால் சிவபெருமான். மகா கல்பம் என்றால் என்ன?

மகா கல்பம் என்பது மிகப் பெரிய கால அளவீடு. அது நம்முடைய வாக்கிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட time zoneதான். நமக்குத் தெரிந்தது காலை சூரிய உதயம். மாலை அஸ்தமனம். ஒரு நாள், வாரம், மாதம், வருடம், நூற்றாண்டுகள்…. இதெல்லாம் தாண்டி பெரிய கால அளவீடுகளெல்லாம் இருக்கின்றன. யுகம் என்கிற கலியுகமெல்லாம் மிகப் பெரிய காலம். ஆனால், இந்த யுகத்திற்கு மேல் சதுர்யுகம் உண்டு. அதற்கு மேல் கல்ப காலம் இருக்கிறது. இந்த கல்ப காலத்திற்கெல்லாம் மேலே மகா கல்ப காலம் இருக்கிறது. இதை நம்மால் புரிந்து கொள்ள இயலாது.

இப்படிப்பட்ட கால அளவீட்டை உண்டாக்கி தன்னுடைய மகா தாண்டவம் மூலமாக நிர்வகிக்கிறார்.

இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஜீவனும் காலம் - TIME என்பதில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த trapல்தான் மாட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னும் கேட்டால் time and spaceல் தான் மாட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் எதை வேண்டுமானாலும் கடந்து விடலாம். ஆனால், இந்த time and space ஐ கடக்க முடியவில்லை.

ஆனாலும், time and space இல்லாத ஒரு நிலையைத்தான் ஆன்மிக சாஸ்திர விஷயங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

அப்போது நேரமும் இடமும் (time and space) இல்லாத அந்த நேரத்தில் பகவான் மகா கல்பம் என்கிற நேரத்தை உண்டாக்கி, அதன் மூலமாகவே மற்ற பிரபஞ்சங்களையெல்லாம் உண்டாக்கி நிர்வகித்துக் கொண்டிருக்கிறார். அந்த மகா கல்பத்திற்கான காலம் முடிந்தவுடன், மீண்டும் அவர் எதையெல்லாம் உண்டாக்கினாரோ... அந்த மொத்த பிரபஞ்சத்தையும், அந்த கல்ப காலத்தையும் சேர்த்து தனக்குள் ஒடுக்கி விடுவார். இப்படி time - space எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கிக் கொண்ட ஒரு வெளியினில் பகவான் மட்டும் தாண்டவம் செய்து கொண்டிருப்பார். அந்த தாண்டவம் பண்ணக் கூடிய நிலைக்குத்தான் மகா பிரளயம் என்று பெயர். இப்படி முறைப்படி எல்லாவற்றையும் உண்டாக்கினாரோ அதேபோல முறைப்படி எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொண்டே வருவார்.

காலையில் எழுந்தவுடன் வெளியே புறப்பட்டு, வேலையெல்லாம் செய்து விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்து எழுந்த அதே படுக்கையில் படுத்துக் கொள்வதுபோலத்தான் இது.

பகவானுக்கு இதுவொரு வேலையாக லீலையாக செய்து கொண்டிருக்கிறார்.

அப்படி ஒடுக்கியதற்குப் பிறகு என்ன ஆகும்? அந்த ஒடுக்கத்தில் ஒரு ஆனந்தம் உண்டாகும். நம்முடைய தினசரி வாழ்விலேயே அதைப் பார்க்கலாம். ஏதோ ஒரு விஷயத்தை மன ஒருமைப்பாடோடு செய்கிறோம். அது முடிந்தவுடன் நமக்கே ஒரு ஆனந்தம் உண்டாகிறது. இதையும் தாண்டி எல்லாமும் முடிந்தது என்று படுக்கைக்கு செல்லும்போது ஒரு அமைதி உண்டாகிறது. அதில் ஆனந்தமும் சந்தோஷமும் ஏற்படுகிறது. இப்படி எல்லாமே ஒரு ஒடுக்கத்திற்கு வரும்போதும், இதற்கு மேல் எனக்கு செய்வதற்கு எதுவும் இல்லை என்று வரும்போதும் நமக்கு பெரிய ஆனந்தம் வருகின்றது. அப்போது இனி நமக்கு கர்மாவே இல்லை என்கிற நிலை வந்தால் நமக்கு எவ்வளவு பெரிய ஆனந்தம் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது பகவானைப் பொறுத்தவரையில் இந்த ஒடுக்கத்தின்போது நேரமும் இடமும், சிருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம்… காத்தல் என்று எதுவுமே இல்லை. இப்படி எல்லாமும் ஒடுங்கியதுக்கு பிறகு பகவான் ஒரு ஆனந்தத்தில் இருப்பாராம். அந்த ஆனந்தத்தை வெளிப்படுத்துவதற்காக பகவான் மகா தாண்டவம் புரிகிறார்.

அவர் மட்டும் தனியாக ஏன் தாண்டவம் புரிகிறார் தெரியுமா?

அவர் மகா தாண்டவம் செய்யும் போது இவள் ஒருத்தி மட்டும் சாட்சியாக இருப்பார். அவள்தான் சித் சொரூபிணீயாக இருக்கக் கூடிய அம்பாள். லலிதா பரமேஸ்வரி.

இப்போது நாமத்தை பாருங்கள்.

மகேஸ்வர மஹா கல்ப மஹா தாண்டவ சாக்ஷிநீ.

மகேஸ்வரன் மஹா கல்ப காலத்தில் எல்லாமும் ஒடுங்கிய காலத்தில் செய்யக் கூடிய மகா தாண்டவத்திற்கு நீ மட்டும்தான் சாட்சியாக இருக்கிறாய்.

ஏனெனில், மகா தாண்டவ பண்ணுவதற்கு அவள்தான் காரணமாக இருக்கிறாள். மகா கல்பத்திற்கும் அவள்தான் காரணமாக இருக்கிறாள்.

யார் மஹா கல்பத்தில் மகா தாண்டவம் செய்திருந்தாரே அவரை தன்னுடைய பார்வையினால் மகா காமேஸ்வரராக மாற்றி விட்டாள். உக்கிரமான ஒரு தாண்டவம் செய்து கொண்டிருந்தவரை மிகவும் சௌம்யமாக, சாந்தமாக மாற்றி விட்டாள். அவருக்கு தலைவியாக இருந்து கொண்டே மீண்டும் பஞ்ச கிருத்தியங்கள் என்று சொல்கின்ற சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம். திரோதாணமெல்லாம் எதற்கு செய்கிறாள் எனில், ஐந்தாவதாக இருக்கக் கூடிய அனுக்கிரகம் செய்வதற்காகத்தான். நமக்கெல்லாம் தாயாக இருந்துகொண்டு அருளுதல் என்கிற விஷயத்தை செய்கிறாள். இதுவே அடுத்த நாமாவாக வருகிறது,

234. மஹா திரிபுர சுந்தரி

இந்த நாமம் நமக்கு முழுக்க முழுக்க அனுக்கிரகத்தை காண்பித்துக் கொடுக்கிறது. ஏனெனில், எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கிறாள் என்று பார்த்தோம். இதனால் த்ரிபுடி என்று சொல்லக் கூடிய எந்த வேறுபாடுமற்ற நிலையில் இருப்பதால் திரிபுர சுந்தரி என்று பெயர். பார்ப்பவன், பார்க்கப்படும் வஸ்து, பார்த்தல் என்று மூன்றும் எங்கு ஒரே நேர்க்கோட்டில் வருகிறதோ, எங்கு த்ரிபுடி என்பது ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதோ அதற்குத்தான் த்ரிபுரம் என்று பெயர். இதேபோன்று தியானிப்பவன், தியானிக்கப்படும் வஸ்து, தியானம் என்று மூன்றாக இல்லையோ அதுவே த்ரிபுர ஞானமாகும். இதையொரு அனுக்கிரகமாகச் செய்வதால் அவளுக்கு மஹா திரிபுரசுந்தரி என்று பெயர். இந்த நிலையை அவள் அனுக்கிரகம் செய்வாள். அதுவே நமது சொரூபமும் ஆகும்.

இறுதியாக இன்னொரு சூட்சுமமான விஷயத்தை பார்க்கலாம்.

முதல் நாமாவில் மகேஸ்வர மஹாகல்ப, மஹா தாண்டவ ஸாக்ஷிணீ என்று சொல்லும்போது, மகேஸ்வரன் இருந்தார்.

மகா கல்பத்தை உருவாக்க கூடிய தாண்டவம் என்கிற பிரபஞ்ச நிர்வாகம் இருந்தது. அதற்கு சாட்சியாக இருக்கக் கூடிய அம்பாள் இருந்தாள்.

முதல் நாமாவின் அடிப்படையை பார்க்கும்போது, சத் சொரூபமான காமேஸ்வரன் இருந்தார். சித் சொரூபமான காமேஸ்வரி இருந்தாள். அவர்களால் உண்டாக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் இருந்தது. அதற்கடுத்து இரண்டாவது நாமாவிற்கு வருவோம்.

233 மஹா காமேஸ மஹிஷி

மஹா காமேஸ்வரரும் அவருக்கு மஹிஷியாக இருக்கக் கூடிய மஹா காமேஸ்வரியும் என்று இரண்டுதான் இந்த நாமாவில் வருகின்றது.

மூன்றாவது நாமாவிற்கு வந்தால் மஹா திரிபுர சுந்தரி என்கிற ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.

முதலில் மூன்று விஷயங்கள். அதற்கு அடுத்து இரண்டு விஷயங்கள். அதற்கு அடுத்து ஒன்றே ஒன்று.

அத்யாத்ம சாதனையில் ஒருவன் தனக்குள்ளாக உணரும் உயர்ந்த நிலையையே இந்த மூன்று நாமங்களும் சொல்கிறது. அதையே வசின்யாதி வாக்

தேவதைகளை வர்ணிக்கின்றன.

இதற்கான தலமாக நாம் திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருவாலங்காடு ரத்ன சபையிலுள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியை சொல்லலாம். மேலேயுள்ள முதல் நாமாவிலிருக்கும் அந்த ஊழித் தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். உற்பத்தி, ஒடுக்கம், ஊழி என்று எல்லாவற்றையும் இங்கு ஒரு தாண்டவத்தில் காண்பிக்கிறார். வண்டார் குழலி என்பது அம்பிகையின் நாமமாகும்.

எப்படி ரசிகர்கள் ரசிக்க ஒரு கலைஞன் தன்னுடைய வித்தையை வெளிப்படுத்துவானோ அதுபோல, சிவபெருமான் இங்கு ஊர்த்துவ தாண்டவத்தை ஆட ஆட அதை வியப்பாக அம்பாள் பார்க்கும் கோலத்தில் அருள்கிறாள். இந்த நாமத்திலுள்ள சாக்ஷிணீ என்கிற விஷயத்தை அம்பாள் இங்கு பிரத்யட்சமாக காட்டிக் கொடுக்கிறாள். இதை தரிசனம் செய்யும்போது எப்பேற்பட்ட நடனம் இது என்றும், எப்படி அம்பாள் இதை ஆனந்தமாக பார்த்தபடிஇருக்கிறாள் என்றும் தோன்றும்.

(சுழலும்...)