Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பிகையின் ஐந்து அறங்களை உணர்த்தும் நாமம்

பக்த ஸௌபாக்ய தாயிநீ

நாம் இதற்கு பவாநீ, பாவநா கம்யா, பவாரண்ய குடாரிகா, பத்ர ப்ரியா, பத்ர மூர்த்தி என்று தொடர்ச்சியாக ஐந்து நாமங்களை பார்த்தோம். இதில் முதல் மூன்று நாமங்களில் பவ என்கிற சப்தமும், அடுத்த இரண்டு நாமங்களில் பத்ர என்கிற சப்தமும் இருந்தது என்று பார்த்தோம். பக்த ஸௌபாக்ய தாயிநீ என்கிற இந்த நாமத்தை கேட்ட மாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் அர்த்தத்தை சொல்லி விடலாம். பக்தர்களுக்கு சௌபாக்கியத்தை தருபவள். எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும், அதற்குள் நிறைய விஷயங்களும் இருக்கிறது. இந்த நாமத்தில் வருகின்ற ஸௌபாக்யம் என்கிற வார்த்தை முக்கியமானதாகும். ஏனெனில், அம்பாளை குறித்து சொல்லப்படுவதும், அதுவும் வசின்யாதி வாக்தேவதைகளால் சொல்லப்படுவதும் முக்கியமானதாகும்.

பாக்யம் என்றால் மங்களமானது. ஐஸ்வர்யமானது என்றும் அர்த்தம் சொல்லலாம். இந்த பாக்யம் என்கிற வார்த்தையானது பக என்கிற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வருகின்றது. அதனால், இறைவனைச் சொல்லும்போது பகவான் என்று சொல்கின்றோம். யார் பரம மங்களமானவரோ, யார் பரம ஐஸ்வர்யமானவரோ அவர்தான் பகவான். அதேபோலவே அம்பாளை பகவதி என்று சொல்கிறோம். யார் பரம மங்களமானவளோ யார் பரம ஐஸ்வர்யமானவளோ அவளையே பகவதி என்கிறோம். இதற்கு முந்தைய நாமத்தில் பத்ர என்கிற சப்தமானது வேதத்தில் வருகின்றது என்று பார்த்தோம். அதேபோல, இந்த பக என்கிற சப்தமானதும் வேதத்தில் வரக்கூடியதாகும். வேதத்தில் இந்த பக என்கிற சப்தத்தை வைத்து ஒரு சூக்தமே இருக்கிறது. அந்த சூக்தத்திற்கு பாக்ய சூக்தம் என்றே பெயர். அந்த சூத்ரம் ஐஸ்வர்யங்களை, பாக்கியங்களை, ஐஸ்வர்யங்களை தரக்கூடியதாகும்.

அதென்ன சௌபாக்யம் என்றால் அந்த மங்களத்திலும் உயர்ந்ததானது என்று பொருள். அந்த ஐஸ்வர்யத்திலும் மிகச் சிறந்தது. அப்படிப்பட்ட உயர்ந்த சௌபாக்யத்தை யார் கொடுக்கிறாளோ, அவளுக்குத்தான் பக்த ஸௌபாக்ய தாயிநீ என்று பெயர். இப்போது இந்த நாமத்திற்கான வெளிப்படையான பொருளை பார்த்தோம். இந்த நாமத்தை இரண்டு வகையாக பார்க்கலாம். ஒன்று லௌகீகமாக, materialstic ஆக நாம் அம்பாளிடம் என்னென்ன கேட்கிறோமோ அது ஒரு பக்கம். நாம் என்ன கேட்போம். செல்வத்தை கேட்போம். ஆரோக்கியம் கேட்போம். இதெல்லாமும் கூட மங்களகரமானது தான். ஐஸ்வர்யமானதுதான். அதனால், பக்த ஸௌபாக்ய தாயிநீ. சரி, இதோடு நிற்கிறாளா என்றால் அதுதான் இல்லை. இதற்கும் மேலாக, அத்யாத்மமாக ஆன்மிகமாக என்னென்ன ரீதியாக என்னென்ன கேட்கிறோமோ, அதையும் எந்தவித தடையுமில்லாமல் கொடுக்கக் கூடியவள். அத்யாத்மமாக நாம் என்ன கேட்போம், ஞானத்தை கேட்போம். வைராக்கியத்தை கேட்போம். பக்தியை கேட்போம். மோட்சத்தை கேட்போம். குருவினுடைய சத்சங்கத்தை கேட்போம். இவையாவுமே, பரமமங்களமானது. ஐஸ்வர்யமானதாகும். அதனாலும், பக்த ஸௌபாக்ய தாயிநீ. அதனால், எப்படிப் பார்த்தாலும் ஸௌபாக்ய தாயிநீயாகத்தான் இருக்கிறாள்.

ஆனால், இதற்கெல்லாம் முன்னால் வாக்தேவதைகள் ஒரு வார்த்தையை சேர்க்கிறார்கள். அதாவது, பக்த ஸௌபாக்ய தாயிநீ. இந்த சௌபாக்யங்களையெல்லாம் தருவதற்கு முன்னால், அவளுடைய அவ்யாஜ கருணையினால், காரணமற்ற கருணையினால் அவள் மீது நமக்கு ஒரு பக்தி ஏற்பட வைக்கிறாள். அவள்மீது நமக்கு ஒரு பந்தம் ஏற்பட வைக்கிறாள். அப்படி ஒரு பந்தம், விருப்பத்தை பக்தியின் மூலமாக கொடுக்கிறாள். அந்தபக்தி மூலமாக நம்மை பக்தனாக்குகிறாள். அப்படி கொடுக்கிற அந்த பக்தியே பெரிய சௌபாக்கியம். நம்மீது அவளுடைய கடாட்சம் அல்லது அருள் பட்டுவிட்டது என்பதற்கு எது சாட்சியாக இருக்கிறது தெரியுமா? நாம் அவள்மீது வைக்கக்கூடிய பக்தி. அவள்மீது நமக்கு உண்டாகக் கூடிய பக்திதான்.

அவள் நம்மீது வைத்திருக்கக் கூடிய மாத்ரு வாத்சல்யத்திற்கு (அன்பிற்கு) சாட்சியாக இருக்கிறது. அவள் எப்போதுமே மாத்ரு வாத்சல்யத்தோடு, ஒரு தாயன்போடுதான் இருக்கிறாள். ஆனால், அது எப்போது தெரிகிறதெனில், நாம் அவள்மீது வைக்கக் கூடிய பக்தி மூலமாக தெரிகிறது. அந்த பக்திதான் பெரிய சௌபாக்யம். இதன் மூலமாகவே மற்ற சௌபாக்யங்களை அவள் பிரசாதிக்கிறாள். இப்போது சொல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். உலக வாழ்க்கையோ, ஆன்மிக வாழ்க்கையோ அம்பாளிடம் கேட்கிறோம். அவளும் கொடுக்கிறாள். ஆனால், இவை எல்லாவற்றையும் விட நாம் கேட்காமலேயே சில விஷயங்களை அவள் செய்கிறாள். அதற்குத்தான் அவ்வியாஜ கருணை. காரணமற்ற கருணை. அதென்ன நாம் கேட்காமலேயே சில விஷயங்களை செய்கிறாள்? நம்மை கேட்காமலேயே இந்த ஜீவனை நம்முடைய சொரூபத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறாள். நாம் கேட்கிறோமோ… இல்லையோ… நகர்த்துகிறாள். ஒவ்வொரு ஜீவனையும் அது எவ்வளவு கர்மா இருந்தாலும் சரி, அந்த ஜீவனை தன்னுடைய சொரூபத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறாள்.

(சுழலும்...)