Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்பிகையிடம் வைத்த முதல் கோரிக்கை

``Money is not everything. But everything needs money’’.

பணம் என்பது எல்லாம் அல்ல. ஆனால், இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. இது ஒரு முரண். அபிராமி அந்தாதியில் ஒரு பாசுரம்.

``தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே’’

அம்பிகையிடம் அபிராமி பட்டர் வேண்டுவதாக இந்தப் பாடல் வருகிறது. இதில் முதலில் செல்வத்தைத் தானே கேட்கிறார். பிறகு தானே கல்வியைக் கேட்கிறார் என்பது போல பாடல் அமைகிறது. இந்த உலகில் இன்றைய நிலவரத்தை அனுசரித்துப் பொருள் சொல்பவர்கள் இப்படிக் கூடப் பொருள் சொன்னார்கள்.“கல்வியைத்தான் கேட்கிறார். ஆனால் ஆன்ம கல்வியைக் கேட்கவில்லை. எந்தக் கல்வி ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புமோ, எந்தக் கல்வி ஒருவருக்கு பல லட்சம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுத் தருமோ அந்தக் கல்வியைக் கேட்கிறார்.” காரணம், நிலைமை அப்படித்தான் இருக்கிறது. அபிராமிபட்டருக்கு செல்வத்தின் சிறப்பு தெரிந்திருக்கிறது.அதனால்தான் அம்பிகையிடம் முதலில் பணத்தைக் கேட்டார். பிறகுதான் கல்வியைக் கேட்டார் என்று சொல்வார்கள். இதற்கு இன்னொருவர் வேறு ஒரு விளக்கமும் சொன்னார்.‘‘ஐயா, கல்வி உயர்வானது. இந்தக் காலத்தில் ஆரம்ப காலக் கல்விக்குக்கூட ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. எனவே படிக்க வேண்டும் என்று நினைத்தாலும்கூட பணம் அல்லவா தேவை. பணத்தின் மூலமாகத் தானே கல்வியைப் பெற வேண்டி இருக்கிறது. எனவே முதலில் பணத்தைத் தா, அதை வைத்துக் கொண்டு கல்வியைப் பெறலாம் என்று அபிராமிபட்டர் நினைக்கிறாரோ என்னவோ” என்றுகூட வினோதமான பொருளை வேடிக்கையாகச் சொல்வார்கள் உண்டு. ஆனால் இது சிந்தனைக்குரிய விஷயம்; வேடிக்கைக்குரிய விஷயம் அல்ல. அபிராமிபட்டர் 16 பேறுகளை வேண்டி ஒரு பாடலில் பிரார்த்தனை செய்கிறார். அதில் அவர் முதலில் கேட்பது கல்வியைத்தான்.

* கலையாத கல்வி.

* குறையாத வயது.

* கபடு வாராத நட்பு.

* கன்றாத வளமை.

* குன்றாத இளமை.

* கழுபிணியிலாத உடல்.

* சலியாத மனம்.

*அன்பு அகலாத மனைவி.

* தவறாத சந்தானம்.

* தாழாத கீர்த்தி.

* மாறாத வார்த்தை.

* தடைகள் வாராத கொடை.

* தொலையாத நிதி.

* கோணாத கோல்.

* துன்பமில்லாத வாழ்வு.

* நின் பாதத்தில் அன்பு.

முதலில் கல்வியைத்தான் கேட்கிறார். கல்வியைக் கேட்கின்ற பொழுது கலையாத கல்வி என்று கேட்கிறார்.

கல்வி கலையுமா?

படித்தவர்கள் எத்தனையோ பேர் பட்டங்களைப் பெற்றிருப்பதாகச் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், அதில் சிலரின் அறிவில் தெளிவிருக்காது. முடிவெடுக்கும் திறன் இருக்காது. கற்ற கல்வி அவர்களுக்குப் பயன்படாது. மொத்தத்தில் கல்வி அவர்களுக்கு அறிவைத் தந்திருக்காது. ஆனால், அபவாதத்தையும் முடிவையும் தந்திருக்கும். ராவணன் பெற்ற கல்வி, அவனுக்கு சூழ்நிலைத் தெளிவைத் தரவில்லை. குழப்பத்தில் மூழ்கி, தவறான முடிவெடுத்து, தானும் தோற்று, தன்னைச் சேர்ந்தவர்களையும் இழந்தான். இரணியனின் கல்வி அறிவைத்தந்து நன்மையைச் செய்யவில்லை. தவறான பாதையைக் காட்டி அழித்தது. ஆனால், மகன் பிரகலாதன் பெற்ற கல்வி, தெய்வத்தைக் காட்டியது. துரியோதனனின் கல்வி அவனுக்கு நன்மையைச் செய்யவில்லை. பொறாமையைத் தந்தது. வெற்றியைப் பெறுவதற்கு பல்வேறு விதமான சூழ்ச்சிகளைச் செய்ய வைத்தது. கடைசியில் அவனையும் அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தொழித்தது.

அறிவைத் தராத வெற்றுக் கல்வி. “கலையும் கல்வி” அதாவது கலங்கலான கல்வி. அதனால்தான் அபிராமிபட்டர் கலையாத கல்வி என்று குறிப்பாகக் கேட்கிறார்.அறிவைப் பெற்றுவிட்டால் மற்ற அனைத்தும் கிடைத்துவிடும். நாம் கையில் வைத்திருக்கும் பணத்தைத்தான் செல்வம் என்று நினைக்கிறோம். அது நாமாகவே கண்டுபிடித்து நாமாகவே வைத்துக் கொள்வது. ஆனால், அறிவு என்பது அப்படி அல்ல! கல்வி தொட்டனைத்து ஊறும் மனதின் ஊற்று; சிந்தனையின் தெளிவு; அறிவின் பூக்கள்; ஆற்றலின் வடிவம்; எப்பொழுதும் நன்மையைச் செய்வது. (நன்றின் பால் உய்ப்பது அறிவு) அதனால்தான் அறிவைத் தரும் கலையாத கல்வியை முதன்மையாக நம்முடைய ஆன்றோர்கள் சொன்னார்கள்.

கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்குக்கூட நல்லறிவு வேண்டும். நல்லறிவைப் பெற்ற பிறகு ஒருவன் எளிதாக மற்ற செல்வத்தைப் பெற்றுவிடலாம். அது மட்டுமல்ல; பெற்ற செல்வத்தை அறிவின் ஆற்றலோடு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தும் முறையையும் தெரிந்து கொள்ளலாம். இன்றைக்குச் செல்வம் படைத்தவர்கள் அனைவரும் அதை முறையாகத்தான் செலவு செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. செல்வத்தை முறையாகச் செலவு செய்யும் வித்தை தெரிந்தவர்களை அந்தச் செல்வம் காப்பாற்றும். அப்படி அறியாதவர்கள் வைத்திருக்கும் செல்வத்தை அவர்கள் காப்பாற்ற வேண்டி இருக்கும். அமைதியற்ற வாழ்க்கைக்கு அபரிமிதமான செல்வம்கூட தடையாக இருப்பதை, சில செல்வந்தர்களுடைய வாழ்க்கையை நுட்பமாகக் கவனிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால், முறையாகப் பயன்படுத்துபவர்களுக்கு செல்வமும் இருக்கும். அமைதியும் இருக்கும். இந்தத் தெளிவைக் கொடுப்பது கலையாத கல்வி. அதனால்தான் அபிராமிபட்டர், கலையாத கல்வி வேண்டும் என்று முதல் கோரிக்கையாக வைத்தார். அப்படியானால், அபிராமி அந்தாதியில் ‘‘தனம் தரும் கல்வி தரும்” பாடலில் முதலில் செல்வத்தையும், பிறகு கல்வியை இரண்டாவதாகவும் பிரார்த்தனை செய்கிறாரே என்றால் பொருள் அதுவல்ல. “தனம் தரும் கல்வி தரும்” என்றால் கல்வியாகிய செல்வத்தைத் தரும் என்றுதான் அர்த்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம், கல்விச் செல்வம் என்பது அழியாத செல்வம். பிறரால் அழிக்க முடியாத செல்வம். ஒருவன் ஒரு கோடி பணம் வைத்திருக்கிறான் என்று சொன்னால் அவனிடமிருந்து ஏதாவது ஒரு வகையில் அந்தப் பணத்தை பிறர் எடுத்துக் கொள்ள முடியும்.ஆனால் ஒரு மனிதனிடம் உள்ள துளி அறிவைக்கூட மற்றவர்களால் கவர முடியாது. ராமானுஜ நூற்றந்தாதியில் ஒரு அற்புதமான பாசுரம். ஒருவருக்கு என்னென்ன கிடைக்கும் என்பதை அந்த பாசுரத்தின் முதல் இரண்டு வரிகள் தெரிவிக்கின்றன.

``பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த

அருந் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே’’

இதில் பொருத்திய என்கிற வார்த்தை முக்கியமான வார்த்தை. பொருத்தமான என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் தேஜஸ், பொறை, திறமை, திருந்திய ஞானம் என்று வரிசையாகச் சொல்லி, பொருந்திய செல்வமும் சேரும் என்று முடிக்கிறார். செல்வம்கூட பொருத்தமானதாக இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்களிடம் உள்ள செல்வம் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும். அப்படி இல்லாதவர்களிடம் இருக்கும் செல்வம் மற்றவர்களுக்கும் பயன்படாது. அவர்களுக்கும் பயன்படாது. இதற்கு ஆதாரத்தை, நாம் வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. கொஞ்சம் கண்களை அகலத்திறந்து சுற்று முற்றும் பாருங்கள். ஆதாரம் உங்களுக்கு அருகாமையிலேயே இருக்கும். இத்தனையும் அறிந்துதான், அபிராமி பட்டர் அம்பிகையிடம் கலையாத கல்வியும் என்று கல்வியை, முதல் கோரிக்கையாக வைத்தார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.