சிற்பமும் சிறப்பும்
அமைவிடம்: அருள்மிகு அமலேஸ்வரர் திருக்கோயில் (அமனீஸ்வரர்), கோபுரப்பட்டி (மண்ணச்சநல்லூர் அருகில்), திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
காலம்: முற்காலச் சோழர் காலம் (பொ.ஆ. 10-ஆம் நூற்றாண்டு).
பச்சைப்பசேல் என விரிந்து கிடக்கும் பரந்த விவசாய நிலங்களின் நடுவே, எவ்வித நவீன கான்கிரீட் கட்டடங்களின் இடையூறுமின்றி, அமைதியான கிராமப்புறச் சூழலில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது கோபுரப்பட்டி அமலேஸ்வரர் திருக்கோயில். அளவில் எளிமையானதாகத் தோன்றினாலும், வரலாற்று ரீதியாகவும் கட்டடக்கலை நுணுக்கங்களிலும் இது ஒரு தனித்துவமான முற்காலச் சோழர் கலைப் பொக்கிஷமாகும். வரலாற்றுப் பின்னணியும் கல்வெட்டுகளும் தோற்றம்: கோயில் கல்வெட்டுச் சான்றுகளின்படி, இத்திருக்கோயில் பொ. ஆ.975-ஆம் ஆண்டில், சோழமன்னர் உத்தம சோழரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது.
செம்பியன் மாதேவியின் கொடை: கண்டராதித்த சோழரின் தேவியும், உத்தம சோழரின் தாயாருமான சிவபக்தை செம்பியன் மாதேவி, இக்கோயிலுக்கு அணையா பித்தளை நிலைவிளக்குகளைக் கொடையாக வழங்கியுள்ளார்.
கல்வெட்டுச் சிறப்புகள்: உத்தம சோழர், முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோரின் ஆட்சிக் காலங்களைச் சேர்ந்த முக்கிய கல்வெட்டுகள், இங்கு காணப்படுகின்றன. இவை அரச குடும்பத்தின் தானங்கள் மற்றும் அக்கால உள்ளூர் நிர்வாக முறைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன.
இறைவன்: அருள்மிகு அமலேஸ்வரர் / அமனீஸ்வரர் (சிவபெருமான்)
இறைவி: அருள்மிகு ஆவுடை நாயகி (பார்வதி தேவி)
தேவகோஷ்டச் சிற்பங்கள்
தட்சிணாமூர்த்தி: புன்னகை தவழும் முகத்தோடு சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கிறார் தட்சிணாமூர்த்தி. இச்சிற்பத்தின் பின்னணியில் உள்ள மரப்பொந்தில் இருந்து எட்டிப்பார்க்கும் ஆந்தை, பல்லிகள், பாம்பு மற்றும் மரத்தில் தொங்கும் சிறிய கைப்பை போன்ற மிக நேர்த்தியான நுணுக்கங்கள் இயற்கை சூழலையும் முனிவர்களின் தவ வாழ்க்கையையும் அழகாகப்
பிரதிபலிக்கின்றன.
ஹரிஹரன்: சிவனும் விஷ்ணுவும் இணைந்த அற்புதமான ஹரிஹரர் திருமேனி. இச்சிற்பத்தின் இடப்பக்கத்தில் உள்ள விஷ்ணுவின் ஆடை கணுக்கால் வரையிலும், வலப்பக்கத்தில் உள்ள சிவனின் ஆடை தொடை வரையிலும் செதுக்கப்பட்டு, ஆடை வடிவமைப்பிலேயே இரு கடவுளரின் நுட்பமான வேறுபாட்டைக் காட்டியிருப்பது சிற்பக் கலையின் உச்சம்.
பிரம்மா - துர்க்கை: நான்கு முகங்களுடன் கூடிய பிரம்மனின் கம்பீரமான சிற்பம். இதற்கு அருகிலுள்ள அர்த்தமண்டபச் சுவரில் எழில்மிகு துர்க்கை / மஹிஷாசுரமர்த்தினியின் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கலை நயங்கள்
மகர தோரணம்: தேவகோஷ்டத்திற்கு மேலே உள்ள மகர தோரணத்தில், யானை வடிவிலான அசுரனை வதம் செய்யும் கஜசம்ஹார மூர்த்தியின் காட்சி மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.
அதிஷ்டானம்: கோயிலின் அடித்தளப் பகுதியில் ராமாயணக் காட்சிகள், கண்ணனின் லீலைகள், சிவபுராணக் கதைகள் மற்றும் சிவனின் பல்வேறு வடிவங்கள் மிகச் சிறிய புடைப்புச் சிற்பங்களாக வரிசையாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மது ஜெகதீஷ்


