Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமல / அமலா யோகம் என்ற சுபயோகம்

யோகங்கள் என்பது கிரகங்களின் கூட்டு இணைவுகளில் கிடைக்கும் பலன்கள்தான். சுபமான யோகங்கள் யாவும் மனதிற்கு இனிய நிகழ்வுகளும் நினைவுகளும் உள்ள நேர்மறை யோகம். மலம் என்பது அழுக்கு என்ற பொருளாகும். அமலம் என்பது தூய்மை என்று பொருள்படுகிறது. அப்படி நன்மை பயக்கக்கூடிய சுபத்தன்மை உள்ள யோகமாக இந்த `அமலயோகம்’ என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அதை விரிவாகக் காண்போம்...

அமல / அமலா யோகம் என்பது என்ன?

ஜாதகத்தின் அடிப்படையில் லக்னத்திற்கு பத்தாம் இடமாகிய (10ம்) தொழில் ஸ்தானம் (கர்ம ஸ்தானம்) என்ற பாவகத்தில் இயற்கை சுபர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லக் கூடிய சுபகிரகங்களான வியாழன் (குரு), புதன், சுக்ரன், சந்திரன் (வளர்பிறை சந்திரன்) ஆகியன இருந்தாலும், ஜென்ம ராசிக்கு பத்தாம் (10ம்) பாவகத்தில் இருந்தாலும், அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் யாவும் அமலயோகம் என்று சொல்லப்படுகிறது. இதில், பத்தாம் பாவகத்தில் ராகு - கேது எனும் சாய கிரகங்களும் அசுபகிரகங்களும் தொடர்பு கொள்ளுதல்கூடாது. ஜோதிடத்தில் ஜாதகர் செய்யும் செயலை கர்ம ஸ்தானம் முடிவு செய்கிறது. அப்படி கர்ம ஸ்தானத்தில் சுபகிரகங்கள் அமையப்பெறின் செயல்கள் யாவும் சுபமாகவே இருக்கும். தொழில் சிறப்புற பத்தில் ஒரு கிரகமாவது அமைய வேண்டும் என்பது ஜோதிடவிதி. அசுப கிரகங்கள் இருப்பின் தொழிலை எப்படியாவது செய்துவிடுவர். ஆனால், அசுப கிரகத்தின் தொடர்பால் அசுப செயல் தொழிலுக்காக செய்து கர்மவினைகளை கர்ம பாவகத்தின் மூலம் தாங்களே செய்து கர்ம வினைகளை சேர்த்து வயதானக் காலத்தில் மிகவும் வருத்தப்படுவர்.

அமல யோகத்தின் சிறப்பு விதி என்ன?

லக்னம் மற்றும் ராசிக்கு பத்தாம் பாவகத்தில் சுபகிரகங்கள் இருக்கலாம். ஆனால், வியாழன் (குரு) மட்டும் தனித்து இருக்கக் கூடாது. வியாழன் ஏதேனும் சுபகிரகங்களுடன் இணைந்துதான் இருக்க வேண்டும்

என்பது சிறப்பு விதியாக உள்ளது. அந்தணன் (வியாழன்) தனித்து நின்றால் அந்த இடம் பாழ் என்றும் அந்தணன் (வியாழன்) தனித்துநின்றால் அவனியில் மெத்த உண்டு என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதில், முக்கியமாக கேந்திரத்தில் தனித்து நின்றால் அந்த பாவகம் கெட்டுப்போகும்.

அமல எனும் அமலா யோகத்தின் சிறப்புகள் என்ன?

பத்தாம் பாவகத்தில் (10ம்) இருக்கும் கிரகம் தன்னுடைய சப்தம பார்வையால் (7ம் பார்வை) நான்காம் பாவகத்தை (4ம்) பார்க்கும். அவ்வாறு பார்க்கப்படுவதால் நல்லொழுக்கம் மிக்கவராகவும் தவறான செயல்கள் மற்றும் சிந்தனை உடையவர் களிடம் இருந்து விலகி இருப்பவராகவும் இருப்பார் என்பது உறுதி. தொழிலை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனத்துடன் இருப்பார். தொழில் பற்றிய சிறந்த அணுகுமுறை இவரிடம் சிறப்பாகவே இருக்கும். ஒரு தொழில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் எவ்வாறு மாற்றம் அடையும் என்பதிலும் ஓரளவு தெரிந்து தேர்ச்சிப் பெற்றவராகவே இருப்பார். தொழில் முன்னேற்றத்தை பற்றி அதிகம் சிந்திப்பார். பிறப்பில்

வறுமையில் இருந்தாலும் தொழிலை செய்ய ஆரம்பித்தவுடன் தொழிலை நோக்கியே பயணித்துக் கொண்டிருப்பார். இவர் வீட்டில் இருப்பதைவிட அதிக நேரம் தொழில் செய்யும் இடத்திலேயே இருப்பது இவருக்கு உள்ள அமைப்பாகும்.

லக்னத்தின் அடிப்படையில் அமல யோகம்

மேஷ / கும்ப லக்னத்திற்கு பத்தாம் (10ம்) இடத்தில் சந்திரன் இருப்பதே சிறப்பு.

ரிஷப லக்னத்திற்கு பத்தாம் (10ம்) இடத்தில் புதன், சுக்கிரன் மற்றும்சந்திரன் இருப்பது சிறப்பான அமைப்பு என்று சொல்லலாம்.

மிதுன / மீனம் லக்னத்திற்கு பத்தாம் (10ம்) இடத்தில் வியாழன், புதன் சிறப்பான அமைப்பாகும். நீசபங்கராஜயோகம்.

கடக / கன்னி / தனுசு லக்னத்திற்கு பத்தாம் (10ம்) இடத்தில் சுக்கிரன், புதன் இருப்பது சிறப்பான அமைப்பு.

சிம்மம் / மகரம் / விருச்சிகம் லக்னத்திற்கு பத்தாம் (10ம்) இடத்தில் புதன், சுக்கிரன், சந்திரன் இருப்பது சிறப்பான யோகமாகும்.

துலாம் லக்னத்திற்கு பத்தாம் (10ம்) இடத்தில் வியாழன், புதன், சந்திரன் இருப்பது சிறந்த பலன் தரும்அமைப்பாகும்.

அமல யோகத்தின் பலன்கள்

* தாயின் மீது அதிக அன்பும் மரியாதையும் ைவத்துள்ளவராகஇருப்பார்.

* நல்லொழுக்கம் உடைய நபராக ஜாதகர் இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

* வாழ்வில் முன்னேற்றம் அடைவதை ஒரு போதும் குறுக்குவழியில் அனுமதிக்க மாட்டார்.

* இந்த யோக அமைப்புடைய ஜாதகரின் வீடும் தொழில் செய்யும் இடமும் அழகாக இருக்க வேண்டும் என்றசிந்தனை இவரிடம் உண்டு. சுத்தம் செய்வது, தேவையில்லாதவற்றை எடுத்துவிடுவது போன்றவைஇருக்கும்.

* கல்வியில் அதிக நாட்டம் உடையவராகவும், கற்றதை வாழ்வியலோடு தொடர்புபடுத்தி வாழக்கூடியவராகவும், படித்ததை நேர்த்தியாக ஆராயும் குணமுள்ளவராகவும் இருப்பார்.

* செய்யும் தொழிலே தெய்வம் என்ற பொன்மொழிக்கு தகுதியானவராகவும் உதாரணமாகவும் இவர்இருப்பார்.

* சுயமாகத் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் நல்ல முன்னேற்றத்தை அடைவார். அதற்கான காலமும்திசா புத்திகளும் அவருக்கு மேன்மை செய்யும்.

* தொழில் மற்றும் உத்தியோகம் செல்லும் இடத்தில் அனைவருடனும் சமமாகப் பழகி அனைவரையும் ஒரே மாதிரி அரவணைத்துச் செய்யும் மனோபாவம் இந்த யோகத்திற்கு உண்டு.

* மிகுந்த புத்திசாலித்தனமும் வருவதை சில நேரம் முன்கூட்டியே உணரும் திறனும் இவருக்கு உண்டு.

* தீர்க்க ஆயுள் உள்ளவராகவும் சைவ உணவை விரும்புபவராகவும்இருப்பார்.

* சமுதாயத்தில் இவருக்கு நன்மதிப்பும் மரியாதையும் எப்போதும் உண்டு.

* வாகன யோகமும் நற்சம்பத்துகள் பெறும் அமைப்பும் அமல யோகம் கண்டிப்பாக செய்யும்.