Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம்மாழ்வாரும் மதுரகவியாழ்வாரும்...

பகுதி 3

சென்ற இதழில், தனது நம்மாழ்வாரின் முப்பத்தியாறாம் வயதில், ஒரு அதிகாலையில், தனது வலது கரத்தில் சின்முத்திரை பதித்த வண்ணம், இடது கரத்தில் தன் உருவச் சிலையை நெஞ்சோடு அணைத்த வண்ணமுமாக இருந்தார். வதனத்தில் புன்னகை தவழ்ந்தபடி, மதுரகவியாழ்வாரை கண்களால் ஆசிர்வதித்தார். நம்மாழ்வார் புளிய மரத்தினடியில் அமர்ந்திருந்த கோலம், ஆதிசேஷன் மேல் பெருமாள் இருந்த கோலத்தை மதுரகவிக்கு அளித்தது. சில நொடிகளில் நம்மாழ்வார் பெருமாளின் திருவடியடைந்தார். என்பது வரை பார்த்தோம்.

இனி...

பின்னர், மதுரகவியாழ்வாரின் திரு உருவச் சிலையை புளிய மரத்தினடியில் எழுந்தருளச் செய்தார். தினமும் பாசுரங்கள் பாடி, திருவாராதனை செய்து வந்தார். ஒவ்வொரு நாளும் தன் தலையில், நம்மாழ்வார் விக்கிரகத்தைச் சுமந்தபடி, காரிமாறன் வந்தார், சடகோபர் வந்தார், வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார், திருவாய்மொழிப் பெருமாள் வந்தார் என விருதுகள் முழங்கி ஊர் ஊராகச் செல்வார். நம்மாழ்வாரின் பாசுரங்களைப் போற்றிப்பாடுவார். அதுவே அவரின் முழு நேரப்பணியாக அமைந்தது. அப்படிச் செல்லும்பொழுது, மதுரைவாழ் தமிழ்ச் சங்கப் புலவர்கள் எதிர்கொண்டார்கள்.

`‘நீங்கள் கூறும் அடைமொழிகளைக் கேட்கும் எங்களுக்கு, நம்மாழ்வார் அதற்குத் தகுதியானவர் என்பதை நிரூபிக்க வேண்டும்’’ என்றனர்.

`‘அவருடைய அத்தனைப் படைப்புகளும் தேவையில்லை. இதோ, அவரின் இந்த ஒரு பாசுரம் எழுதப்பட்ட ஓலையைக் கொண்டு செல்லுங்கள். அது வெல்லும்!’’ என்று சொல்லி,

`‘கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்

எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே’’

- என்றப் பாசுரத்தை அளித்தார்.

பாசுரத்தைப் படித்த, முன்னூறு தமிழ்ப் புலவர்கள் கொண்ட தமிழ்ச் சங்கம், நம்மாழ்வாரின் புலமையை வியந்து பாராட்டியது. அத்தனை விருதுகளுக்கும் அவர் உரித்தானவர் என ஒப்புக்கொண்டனர். நம்மாழ்வாரின் கீர்த்தி பாரெங்கும் பரவியது. மதுரகவியாழ்வார், தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் நம்மாழ்வாரைத் தொழுதபடி வாழ்ந்தார்.கண்ணி நுண் சிறுத்தாம்பு எனும் தலைப்பில், பதினோரு பாசுரங்கள் படைத்தார். முதல் பாசுரம்,

``கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்

நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்

அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே’’

மாயக்கண்ணன் எம்பெருமான், யசோதைப் பிராட்டி, துண்டு துண்டான, மெல்லிய, சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்டான். அப்படிப்பட்ட எம்பெருமானை துதிப்பதைவிட, அந்தக் கண்ணனையே தன் பக்தியால் கட்டிப்போட்ட திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொல்வது என்னுடைய நாக்குக்கு இனியதாகவும் அமிர்தமாகவும் உள்ளது. பெருமாளைவிடவும் அவரின் அடியாரைத் துதிப்பதே உயரியது என்றவர் மதுரகவியாழ்வார். அவரின் பதினோறு பாசுரங்களையும், பன்னிரெண்டாயிரம் முறை, நம்பிக்கையுடன் தொழ, நம்மாழ்வார் நேரில் தரிசனம் தருவார் என்பது திண்ணம். அவரின் இறுதிப் பாசுரம்,

``அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்

அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு

அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்

நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே’’

எம்பெருமான் எல்லோரிடத்திலும், குறிப்பாக அடியவர்கள் இடத்தே அன்புடையவன். நம்மாழ்வார், அதுபோலவே, எம்பெருமானின் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். மதுரகவி ஆழ்வாராகிய நான், இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்தில் அன்பு பூண்டவன். நான் பாடிய இந்த பிரபந்தத்தை பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும் தொழுபவர்கள், திருநாடான ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து அங்கே வாழ்வார்கள், என்பது சத்தியம். மதுரகவியாழ்வாரின் வழிபற்றி அடியவர்களைத் தொழுவோம். பாசுரங்களைப் பாடுவோம். பரமனருள் பெறுவோம்.

கோதண்டராமன்