சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: பசுபதீஸ்வரர் கோயில், அல்லூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
காலம்: பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலக் கலைப்படைப்பு.
காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள அல்லூர் பசுபதீஸ்வரர் கோயில், முற்காலச் சோழர் காலத்துக் கலை மற்றும் வரலாற்றுக் கருவூல மாகும். கல்வெட்டுகளில் இக்கோயில் ``அல்லூர் நக்கன் கோயில்’’ என்று குறிப்பிடப்படுகிறது. காவிரி ஆற்றின் படுகை நிலப்பரப்பில், பசுமையான மரங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைதியான இயற்கைச் சூழலில் இக்கோயில் அமைந்துள்ளது. உயர்ந்த கோபுரம், மதிற்சுவர், திருச்சுற்று மாளிகை போன்ற எந்த அம்சங்களும் இல்லாமல் கம்பீரத்துடன் நம்மைக் கவர்ந்திழுக்கிறது.
வரலாறும் கல்வெட்டுகளும்
முதலாம் பராந்தக சோழன் காலத்து முக்கியக் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் மூலவர் சிவபெருமான் ``அல்லூர் நக்கர்’’ அல்லது ``அல்லூர் நக்கன் கோயில் பரமேஸ்வரன்’’ எனக் குறிக்கப்படுகிறார். பிற்காலத்தில் இது ``பசுபதீஸ்வரர் கோயில்’’ என அழைக்கப்படலாயிற்று. அரிஞ்சய சோழன், சுந்தர சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்களும் உள்ளன. அக்கால ஊர்ச்சபை (அல்லூர் சபை), கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடைகள், நந்தா விளக்கு எரிப்பதற்கான நிவந்தங்கள், நெல் அளவீடு மற்றும் வரி விலக்குகள் பற்றிய அரிய சமூக - பொருளாதாரத் தகவல்களை இங்குள்ள கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன.
கட்டடக் கலைச் சிறப்புகள்
முற்காலச் சோழர் பாணியில் எளிய மற்றும் நேர்த்தியான கற்றளியாக ஒரு தள விமானம், முக மண்டபம், இடை நாழிகை ஆகிய அம்சங்களுடன் திகழ்கிறது. விமானத்தில் நான்கு திசைகளிலும், நந்திகள் அமர்ந்திருக்கின்றன. ஆலயத்தின் உட்புறத்தினுள் பிட்சாடனர், சண்டேஸ்வரர், விநாயகர், முருகன், சூரியன் ஆகியோரின் எழில் சிற்பங்கள் உள்ளன. அவற்றின் உடலமைப்பு, அணிகலன்களின் நுணுக்கம், உயிரோட்டம் மிகுந்த முக வடிவமைப்பு ஆகியவை காண்போரைக் கவர்கின்றன.
முற்காலச் சோழர்களின் உள்கட்டுமான நுணுக்கங்களோடு, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட போதிகைகள், பாதபந்தத் தாங்குதளம், யாளி வரிசை, குறும்புகள் புரியும் பூதகணங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கோயில், தொல்லியல் ஆய்வாளர்களாலும் வரலாற்று ஆர்வலர்களாலும் பெரிதும் போற்றப்படும் ஒரு வரலாற்றுச் சின்னமாகும். சோழர்கால கிராம நிர்வாக முறை மற்றும் சிற்பக்கலை மரபைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த தளமாகத் திகழ்கிறது.


