Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அட்சயபாத்திரமாய் அருளும் அக்ஷோப்ய தீர்த்தர்

பேஜாவர் மடத்தின் பீடாதிபதி?

நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கும் மகான் ``அக்ஷோப்ய தீர்த்தர்’’. பெரும்பாலான துவைத சமய மக்களுக்கு நன்கு அறிந்த மகான். ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், 1159 சகப்ஜ சகாப்தத்தில் அதாவது, கி.பி. 1238ல் பிறந்தார். ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின் பூர்வாஸ்ரம பெயர் கோவிந்த சாஸ்திரி. வேதாந்த பீடத்தில் அமர்ந்த மத்வரின் நேரடி சீடர்களில் கடைசி சீடர் இவரே. மத்வரை சந்திப்பதற்கு முன்பு வரை, அத்வைத மார்க்கத்தை பின்பற்றி வந்திருக்கின்றார்.

மேலும், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரை பேஜாவர் மடத்தின் பீடாதிபதியாக்கி, அதன்பிறகு, சில தெய்வ விக்ரகங்களை மத்வாச்சாரியார் வழங்கினார் என்றும் ஒரு தரப்பினரால் கூறப்படுகிறது. மேலும், ``ஸ்ரீமன் நியாய சுதா’’ என்னும் மகத்தான நூலை எழுதிய மகான் ஸ்ரீ ஜெயதீர்த்தர் என்னும் ரத்தினத்தை கொடுத்தவர், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்த. அதாவது ஜெயதீர்த்தரின் குரு, அக்ஷோப்ய தீர்த்தர்.

சமகாலத்தவர்கள்

ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், ``மத்வ தத்வ சாரசம் கிரஹா’’ என்ற நூலை எழுதியதாக சிலர் கூறுகின்றனர். அதில் என்ன எழுதியிருக்கிறார் என்பது சரியாக யாருக்கும் புரியவில்லை. இருப்பிலும், ``துவைத கோட்பாட்டின் கையேடாக’’ மத்வ தத்வ சாரசம் கிரஹா இருப்பதாக அந்த நூலை பற்றி ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், அத்வைதத்தின் முக்கிய மகானாக கருதப்படும் சிருங்கேரி ஸ்ரீ வித்யாரண்யரின் சமகாலத்தவர் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர். அதே போல், புகழ்பெற்ற விசிஷ்டாதுவைதத்தின் முக்கிய மகான் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சமகாலத்தவரும்கூட.

நடுவராக வேதாந்த தேசிகர்

ஒரு முறை ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரும் - ஸ்ரீ வித்யாரண்யரும் ``தத்வமஸி’’ என்னும் ``ஸ்ருதி’’ உரையின் விளக்கம் குறித்து இருவரும் தர்க்கத்தில் (விவாதத்தில்) ஈடுபட நேரிட்டது. அந்த சமயத்தில், விவாதிப்பதற்கு முன்பாக, ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர் அங்காரத்தை எடுத்து (அங்காரம் என்பது கரிதுண்டுகள் Black Charcoal Pieces) ஸ்ரீ நரசிம்ம பெருமானை தத்ரூபமாக ஒரு பாறையில் வரைந்து, அதன் எதிரில் அமர்ந்து கடும் தவம் மேற்கொள்கிறார். அக்ஷோப்ய தீர்த்தரின் மந்திர சித்தியினால், அவரின் கடும் தவவலிமையால், ஸ்ரீ நரசிம்மர் அங்கு தோன்றி, அக்ஷோப்ய தீர்த்தருக்கு காட்சிக்கொடுத்து, அவருக்கு ஆசிகளை வழங்கியிருக்கிறார். ஆகையால், இன்றும்கூட இந்த முளுபாகல் சேத்திரத்திற்கு நரசிம்ம தீர்த்தம் என்றும் ஒரு பெயர் உண்டு.

நரசிம்மரிடத்துலேயே ஆசீர்வாதம் பெற்று, ஸ்ரீ வித்யாரண்யரிடத்தில் தத்வமஸி குறித்து விவாதிக்கிறார். இந்த விவாதத்தின் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், விசிஷ்டாதுவைத மகான்

ஸ்ரீ வேதாந்த தேசிகர். விவாதம் ஆரம்பமானது. சில சமயங்களில் இருவரும் கடுமையான விவாதங்களை பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவாதத்தில், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர் ஜெயம் (வெற்றி) பெற்றதாக அறிவித்தார், தேசிகர். இதன் நினைவாக, முளுபாகலில் ஜெயஸ்தம்பம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் நடைபெற்ற விவாதத்தை, ஒரு சீடர் எழுதியதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஆதாரம், கர்நாடக மாநிலம் முளுபாகல் என்னும் ஊரருகே உள்ள ஒரு மலையில், இன்றும் கல்வெட்டாக காணலாம்.

தனது சீடரைக் கண்டார்

``தனக்கு பின் இந்த பீடத்தை யார் அலங்கரிக்கப்போகிறவர்கள்? இந்த மத்வ சித்தாந்தத்தை காப்பவர் யார்? யார் இந்த தத்வ பிரச்சாரத்தை செய்யப்போகிறார்?’’ என்று கவலை அக்ஷோப்ய தீர்த்தருக்கு வந்தது. இதற்கு விடைதேடி, தேசாந்திரமாக பல புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்படி, ``ஸ்ரீ பாண்டுரங்கன்’’ கோயில் கொண்டுள்ள பண்டரிபுரத்திற்கு வருகிறார். பாண்டுரங்கனை மனமுருகி வேண்டுகிறார்.

அன்று இரவில், ``கவலை வேண்டாம்... எவன் ஒருவன் மாட்டை போல் தண்ணீரை வாய் வைத்து உருஞ்சி குடிக்கிறானோ... அவனே உனது சீடன்’’ என்று அக்ஷோப்ய தீர்த்தரின் கனவில் ஸ்ரீ மத்வாச்சாரியார் கூறுகிறார். மறுநாள் காலையில் அக்ஷோப்ய தீர்த்தரின் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கிறது. உற்சாகம் ததும்புகிறது. பாருங்கள்.... மத்வர் சொன்னதே வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார் என்று சொன்னால், குருவின் மீது எத்தகைய நம்பிக்கை, பக்தி, அன்பு!

அங்கு இருந்து, மல்கெடாவிற்கு செல்கிறார். பீமாநதி கரையோரத்தில் குதிரையில் அமர்ந்தபடியே ஒருவன் வாயினால் வைத்தவாறு தண்ணீரை உறிந்து குடிக்கிறான். இதனைக்கண்ட அக்ஷோப்ய தீர்த்தருக்கு எல்லையில்லா ஆனந்தம். தனது சீடனை கண்ட அதே மகிழ்ச்சியில் நேரத்தில் அவரை தனது சீடனாக்கிக்கொள்கிறார். அதன் பின், பல ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரத்தை செலவு செய்து, ஸ்ரீ ஜெய தீர்த்தருக்கு துவைத தத்துவத்தை பயிற்றுவிக்கிறார், ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர்.

மேலும், மற்றவர்கள் தவறவிட்ட மத்வரின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் முக்கியத்துவத்தை எப்படித் தேடுவது என்றும், ``டீகா” (மத்வரின் நூலுக்கு விளக்கவுரை) என்ற புத்தகங்களை எப்படி எழுதுவது போன்ற நுனுக்கங்களை ஜெய தீர்த்தருக்கு, அக்ஷோப்ய தீர்த்தர் கற்றுக் கொடுத்தார்.அது மட்டுமா! அக்ஷோப்ய தீர்த்தரால், நன்கு பயிற்சி பெற்று ``வாசஸ்பதி’’, ``விவரங்கரா’’, ``அமலானந்தா’’, ``சிட்சுகா’’ மற்றும் ``விஜ்ஞானஷனா’’ போன்ற பல வியாக்கியங்களை (நூல்கள்) எழுதி, அத்வைத தத்துவத்தின் புரிதலில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக் காட்டி, வைணவ உண்மைகளுக்கு மேலும் வலுவூட்டி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

குருவின் காருண்யம்

ஸ்ரீ ஜெயதீர்த்தருக்கு பட்டம் கொடுத்து சந்நியாசியாக அக்ஷோப்ய தீர்த்தர் மாற்றியதால், அவரின் மீது ஜெயதீர்த்தரின் பெற்றோருக்கு கடும் கோபம் வந்தது. இதனால், ``என் மகனை என்னிடமே அனுப்பிவிடுங்கள்’’ என கண்ணீர் மல்க வேண்டினார். ஸ்ரீ ஹரி என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும் என்பதனை நங்கு அறிந்த அக்ஷோப்ய தீர்த்தர், ஜெயதீர்த்தரை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கிறார். ஜெயதீர்த்தருக்கு திருமணம் செய்துவைக்கிறார்கள். அதன் பிறகு, யாருமே அனுகமுடியாத அளவிற்கு ஜெயதீர்த்தரை சுற்றியும் நாகங்கள் படையெடுத்து காவல் காக்க, தங்களின் தவறை உணர்ந்த பெற்றோர், மீண்டும் அக்ஷோப்ய தீர்த்தரிடத்தில் ஜெயதீர்த்தரை ஒப்படைக்கிறார். ஜெயதீர்த்தரின் பெற்றோர் மனதை புரிந்துக்கொண்ட அக்ஷோப்ய தீர்த்தர், ``உங்களுக்கு மீண்டும் ஒரு அழகிய மகன் பிறப்பான்’’ என காருண்யத்தோடு வரம் அளிக்கிறார்.

வர்ணனைகள்

திரிவிக்ரம பண்டிதாசார்யா, பத்மநாப தீர்த்தர் மற்றும் நரஹரி தீர்த்தர் போன்ற அவரது முன்னோடிகளின் நூல்களை தழுவி, சுமார் இருபது நூல்களை அக்ஷோப்ய தீர்த்தர் எழுதினார். தத்துவ ரீதியாக, அக்ஷோப்ய தீர்த்தரை யாராலும், எவராலும் தொடகூட முடியவில்லை. மேலும், மகான் ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் படைப்புகளுக்கு வர்ணனைகள் செய்திருந்தார் என்ற பெருமை, அக்ஷோப்ய தீர்த்தருக்கே சேரும்.

தனி மடம்

தனக்கு பின் ஸ்ரீ ஜெயதீர்த்தருக்கு சந்நியாச பட்டத்தை கொடுத்தாலும், தனியாக ``ஸ்ரீ குட்லி ஆர்ய அக்ஷோப்ய தீர்த்த மடம்’’ என்னும் ஒரு புதிய மடத்தை உருவாக்குகிறார், அக்ஷோப்ய தீர்த்தர். இந்த குட்லி ஆர்ய அக்ஷோப்ய தீர்த்த மடத்தின் முதல் பீடாதிபதி, ஸ்ரீ த்ரைலோக்யபூஷண தீர்த்தர் ஆவார். இன்றைக்கும், இந்த மடத்தில் மூலமாக வழிவழியாக பல மகான்கள்

உருவாகி வருகிறார்கள்.

இரண்டு முறை பிருந்தாவனம்

ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின் மூலபிருந்தா வனம், கர்நாடகா மாநிலம், மல்கெடா என்னும் இடத்தில் உள்ளது. ஆனால், இதற்கு முன்பாகவே மல்கெடா அருகில் உள்ள கொத்தலு மண்டபம் என்னும் இடத்தில் பிருந்தாவனம் ஆனதாகவும், அதன் பிறகே மல்கெடாவில் பிருந்தாவனம் ஆனதாக கேள்வி! ஏன் பிருந்தாவனம் மாறியது என்பதற்கான காரணம் தெரியவில்லை. மேலும், இதற்கான ஆதாரபூர்வமான ஆதாரங்களும் இல்லை.

மல்கெடாவிற்கு எப்படி செல்வது?

மல்கெடா, குல்பர்கா மாவட்டத்தின் கீழ் வருகிறது. குல்பர்காவிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. குல்பர்காவிலிருந்து மல்கேட் செல்ல போதுமான பேருந்து வசதிகள் உள்ளது. இத்தகைய மாபெரும் மகான்களைப் பற்றி எழுதுவதற்கு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடுத்த தொகுப்பில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஸ்ரீ ஜெயதீர்த்தரை பற்றி காணலாம்.

(மத்வ மகானின் பயணம் தொடரும்...)

ரா.ரெங்கராஜன்