Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அகோர மூர்த்தி

திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமானின் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும். இவர்களை பஞ்சப்பிரம்ம மூர்த்தங்கள் என்பர். இவர்களை உருவமாக அமைக்காமல் ஐந்து லிங்கங்களாகவே வைத்து வழிபடுவர். தஞ்சைப் பெரிய கோயில் சாந்தாகாரப் பிராகாரத்தில் சத்யோஜாதரும் உள்ளனர். வாம தேவருக்குப் பதில் அம்பிகை உருவம் உள்ளன.

சிவபெருமானின் அகோர மூர்த்தம் எனப்படும் பஞ்சப் பிரம்ம மூர்த்தங்களில் ஒன்றான அகோர மூர்த்தியைக் காணத் திருவெண்காடு செல்ல வேண்டும்.சிவபெருமான் சக்கரத்தால் ஜலந்திரனை அழித்ததுடன் அனேக அசுரர்களை எரித்து அழித்தார். ஏறக்குறைய அரக்கர் அம்சமே அற்றுப்போனது. அசுரகுருவான சுக்ராச்சாரியார் அரக்கர்களை குலத்தைமேல் படுத்த உன்னத வீரனைத் தோற்றுவிக்க எண்ணம் கொண்டார்.

அதன்படியே ஜலந்தரனின் சாம்பலால் இருந்து ஒருவனைத் தோற்றுவித்தார். அவன் யமனைப் போல இருந்ததால் மருத்துவாசுரன் என்று பெயரிட்டு வளர்த்து அசுர குலத்தின் மன்னனாக முடி சூட்டினார். அவன் பிரம்மனை உபா சித்து அனேக வரங்களைப் பெற்றான். சிவனை ஆராதித்து அவரை மகிழ்விக்க அனேக வரங்களைப் பெற்றான். அவரிடமிருந்து பெரிய கனந்த சூலத்தையும் பெற்றான்.

முதலில் நல்லவனாக இருந்த அவனிடம் படிப்படியாக அசுர குணம் மேலோங்கியது. அதனால் தேவர்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்தான். அவனுக்கு அஞ்சிய தேவர்கள் திருவெண்காட்டுக்கு வந்து மறைந்து வாழ்ந்தனர். அங்கும் விடாது அவர்களைத் தேடி வந்தான்.அசுர்களுக்கு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர் நந்திதேவரை அனுப்பி நல்லறிவு புகட்டி வருமாறு அனுப்பினர். ஆனால் அவன் நந்தியை தாங்கி கொம்புகளை உடைத்து காதுகளை அறுத்ததுடன் சூலத்தால் ஒன்பது இடங்களில் குத்தித் தாக்கினார்.

நந்திதேவர் கொம்புகளையும் காதுகளையும் இழந்து குத்துப்பட்டு குருதி பொங்க வந்து நின்றதைக் கண்டு கோபத்த சிவபெருமான் தனது தெற்கு முகத்தில் இருந்து உக்ர சண்டப் பிரசண்ட ருத்திரராக வெளிப்பட்டார். அக்கோலமே அகோர மூர்த்தி எனப்படுகிறது. அவர் மருத்துவனைத் தேடிச் சென்று தாக்கி அழித்தார். அந்த நிகழ்வே மருத்துவ சூர சங்காரம் எனப்படுகிறது. இவர் மருத்துவன் என்னும் அசுரனைக் கொன்றதால் மிருத்துஞ்ஜயர் எனப்படுகிறார். இவரை காலருத்திரர் என்பர். சுவேத கேது என்பவனுக்காக யமசங்காரம் செய்ததால் கால சம்ஹாரர் எனப்படுகிறார். கால சம்ஹார மகா ருத்திர மிருத்துஞ்சய மூர்த்தியாக இவர் விளங்குகிறார்.

இவர் காலசம்ஹாரர் என்பதால் விரைந்து நடந்து செல்லும் கோலத்தில் உள்ளார். கால்களில் பாதரட்சைகளை அணிந்துள்ளார். எமகரங்களுடன் திகழும் இவரது தலைமீது ஜ்வாலமுடி உள்ளது. கண்களை அகல விழித்து ஆர்ப்பரிப்பவராக இருக்கிறார்.எட்டுகரங்களில் முன்னிரு கரங்கள் சூலத்தைச் சுழற்றிச் செல்கிறது. பின் ஆறு கரங்களில் வாள், கேடயம், பாசம், டமருகம் ஆகிய படைக்கலங்கள் உள்ளன.இவருக்கு வலதுபுறம் இடப தேவர் தலையைத் தூக்கியவாறு நிற்கிறார்.

இவருக்கு பட்டு சார்த்தி பன்னீர் அபிஷேகம் செய்வது சிறந்த பிரார்த்தனையாக உள்ளது. மாசி மாதம் மகத்தில் இவர் உலா வருகிறார். அப்போது அன்பர்கள் இவருக்கு பட்டு சார்த்தி பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர். அப்போது பிரகாரம் எங்கும் பன்னீர் நிறைந்து ஓடுவதைக் காணலாம்.இத்தலத்தில் மாசி மகத்தில் மருத்து வாசூரசங்காரம் என்னும் விழா நடைபெறுகிறது. மருத்து வாசுரனை துரத்திச் சென்று அழிக்கும் ஐதீக விழாவாக உள்ளது. இதில் மருத்துவாசுரன் அகோர மூர்த்தியுடன் ரிஷப தேவர் மஞ்சத்தில் எழுந்தருளி வலம் வருகிறார். இதுபோல் ரிஷபர் தனியே வலம் வருதல் வேறுதலத்தில் இல்லை.

ஜெயசெல்வி