அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே...
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்.
பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே
நூற் பயன் இப்பாடலானது உமையம்மையைக் குறித்த வழிபாட்டை ஆலயத்திலும், வீட்டிலும் செய்ய ஆகமங்கள் பரிந்துரைக்கும் அந்தர் பூசை, பகிர் பூசை, உபயபூசை, என்று மூன்று வகை வழிபாட்டைப் பற்றிய குறிப்பை நமக்கு தருகிறது. குறிப்பாக உள்ளத்தில் வழிபாடு செய்யும் பூதசுத்தி என்று கலைச் சொல்லால் குறிப்பிடப்படுகிற நம் உடலில் இருக்கும் பஞ்சபூத வடிவமாக திகழும் சிவ சக்திகளை குறிப்பிடுகிறது.
ஆலயத்தில் சமேத என்ற சிவபெருமான் பெயருக்கு முன்னால் சேர்க்கப்படுகிறது. உமையம்மையை குறித்தது. சிற்ப சாஸ்திரங்களால் மனோன்மணி என்ற சதாசிவத்தில் இருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கு சக்தியாக விளங்குபவளையும் குறித்தது.
உதாரணமாய் திருக்கடவூரை பொறுத்தவரை அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அபிராமி அம்மையையே குறிப்பிடுகிறது. பிற சந்நதிகளில் எழுந்தருளியிருக்கும் பாலாம்பிகை, இலக்குமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற சக்திகளை குறிப்பிடவில்லை என்பது இப்பாடலின் வழி நன்கு புலனாகிறது. அபிராமிபட்டர் தீட்சசை எடுத்துக் கொண்டு தன் வீட்டில் வைத்து வழிபாடு செய்த ஸ்ரீ சக்கரத்தையே அதற்குரிய தேவதைகளையே இப்பாடலின் முன் நிறுத்துகிறார். இதை இனி விரிவாக் காண்போம்.
அந்தாதி சொல் பொருள் விளங்கம்
*ஆத்தாளை
*எங்கள் அபிராம வல்லியை
*அண்டமெல்லாம் பூத்தாளை
*மாதுளம் பூ நிறத்தாளை
*புவி அடங்கக் காத்தாளை
*அங்குச, பாசம், குசுமம், அங்கை, சேர்த்தாளை
*கரும்பும் அங்கை சேர்த்தாளை
*முக்கண்ணியை தொழுவார்க்கு
*ஒரு தீங்கில்லையே
ஆத்தாளை என்பதனால் அபிராம வல்லியை குறிப்பிடுகிறார். இவள் பிரம்மா - சரஸ்வதி, விஷ்ணு - லக்ஷ்மி, ருத்ரன்- கௌரி, ஈச- மகேஸ்வரி இந்த அனைவரையும் விட ஆற்றல் மிகுந்தவள். ஆகமங்கள் படைத்தல் (ஸ்ருஷ்டி), காத்தல் (ஸ்திதி), அழித்தல் (சம்ஹாரம்), மறைத்தல் (திரோ பாவம்), அருளல் (அனுகிரஹம்) என்ற ஐந்து செயல்களால் உலகிலுள்ள அனைத்து ஆன்மாவிற்கும், உடல், உள்ளம், அறிவு, எண்ணம் இவற்றை நல்கி ஆன்மாக்களை தன்னுணர்வு பெற செய்து அறிவை படிப்படியாக வளர்த்து ஆன்ம உணர்வை பெற செய்து பிறகு சிவ உணர்வைத் தந்து சலிப்பற்ற ஆனந்தத்தில் நிலை நிறுத்தும் பொருட்டு வினையை தோற்றுவித்து அதன் வாயிலாய் பாவ புண்ணியத்தையும் அதன்வழி அனுபவத்தையும் உணர்த்துவிப்பது இந்த அனுகிரஹ சக்தியே.
இது இல்லை என்றால் சாக்த சித்தாந்தத்தை பொருத்தவரை அனைத்து ஆன்மாவும் தன்னுணர்வு அற்றதாய் ஜடம் போல் அசைவற்றதாய் இருக்கும். பிறரையும் அறியாது என்று கூறுவதால் அனைத்து உடல் தாங்கிய உயிருக்கும் அருளாகிய சக்தியை கொண்டு அருள் புரிவதை அபிராமிபட்டர் வெளிப்படுத்தி காட்டுகிறார்.
இந்த மனோன்மணி என்ற சக்தி இல்லை என்றால் சிவனின் அருளை (பயனை) அடையவே இயலாது. இந்த சக்தியும் சிவபெருமானும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். ஒருவர் இல்லாது ஒருவர் இருக்க இயலாது. எங்கு பார்த்தாலும் யாவரும் அறியாவண்ணம் மறைந்திருக்கும் சிவபெருமானை எல்லை இலாதானை மானுடன் அறியும் வண்ணம் ஓர் இடத்தில் தோன்றி எல்லைக்கு உட்படுத்தி மனிதன் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு புலன்களுக்கு புலப்படுத்தி அதன் வழியாய் உள்ளத்திற்கும் அறிவுக்கும் ஆன்மாவிற்கும் புரியும் வண்ணம் விளங்கச் செய்கின்ற பண்பையே மனோன்மணி என்கிறது ஆகம சாஸ்திரம். இதையே அபிராமி பட்டர் ‘மருங்குல் மனோன்மணி’ (5) என்ற வார்த்தையால் சூட்டுகிறார். உமையம்மையானவள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஷ்வர, சதாசிவத்தைக் கொண்டு தன் செயலை செய்கிறாள் என்பதை ‘முதற் தேவர் மூவரும் யாவரும் போற்றும்’(92) என்ற வார்த்தையால் நன்கு
அறியலாம்.
இந்த சித்தாந்தத்திற்கு அதாவது உமையம்மையாகிய அபிராமி சமயத்திற்கு ‘ஆதார சக்தி வாதம்’ என்று சித்தாந்தங்கள் பெயரிடுகின்றன. இன்று வரை காமிகாதி ஆகமங்களின் ‘சக்தியாதி சக்தி பர்யந்தம் சிவம் சம் பூஜ்ய’ என்ற ஆகம வசனத்தால் அறியலாம். இதற்கு சக்தி முதல் துவங்கி சக்தி முடியும் வரை உள்ள மந்திரங்களால் சிவத்தை வழிபடுக என்ற பொருளாலும் நன்கு உணரலாம். ‘ஓம் ஆதார சக்தையே நம:’ என்று துவங்கும் பூசனை மந்திரமானது ‘யதா சக்தி ஜப்த்வா’ என்று முடிவடையும் இது இன்றளவிலும் வழக்கத்தில் உள்ளது. இந்த பூஜை முறையை உள்ளடக்கிய ஆதாரசக்தி வழியை தான் தூயதமிழில் ‘‘ஆத்தாளை’’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
‘‘எங்கள் அபிராம வல்லியை”
- என்பதனால் அந்தாதி பாடுவதற்கு காரணமாக இருக்கக் கூடிய மற்றும் அபிராமி பட்டருக்கு அருள் புரிந்து நிலவை வரவழைத்த ஆதிகடவூரின் வாழ்வாக திகழ்கின்ற அமிர்தகடேஸ்வராகிய சதாசிவனின் குடும்பினியாகிற அபிராம வல்லியை குறிப்பிடுகிறார்.
பிற தலங்களில் உள்ள உமையம்மையை வேறுபடுத்திக் காட்டவும், திருக்கடவூர் கோயிலில் உள்ள திருமேனியில் இருந்து தனித்து காட்டவுமே ‘‘அபிராம வல்லி” என்ற பெயரை தனியாக சூட்டுகிறார். அபிராமவல்லி என்ற சொல்லிற்கு மனதுக்குள் மகிழ்ச்சி, உடலால் ஆடப்படும் விளையாட்டு, அறிவால் புரிந்து கொள்ளப்படும் ஆத்மஞானம், ஆன்மாவால் பெறப்படும் சுதந்திரம், சிவபெருமானால் செய்யப்படும் அருள் என்று பொருள்படும்.
வகையில் வடமொழியில் வரிசையாக ‘ரேபம்’ ‘ர’ அதற்கு அடுத்தாற்போல் மகர ஒன்றாகிய ‘ம்’ என்ற இரண்டு எழுத்துக்களும் இணைந்து ‘ரம்’ ரஞ்சனே மகிழ்ச்சி என்னும் பொருளிலும், ‘ரம்’ கிரீடாயாம் விளையாடுதல் என்னும் பொருளிலும், ‘ரம்’ சிந்தனே- புரிந்துகொள்ளுதல் என்ற பொருளிலும், ‘ரம்’-ஸ்வாதந்தரியே ‘ரம்’ ஆஸ்வாதனே- ஓய்வு பெறுதல் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது ‘அபி’ என்ற முன் ஒட்டு சேர்த்து ‘ரம்’ என்ற வினை சேர்த்து கலத்தல், மகிழ்தல் என்ற பொருளில் ‘அபிரம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
மகிழ்தலில் இருந்து தோன்றிய என்னும் பண்பை குறிக்க ‘ஆ’ என்று ‘ராம்’ என்றாகி ‘ஙீப்’ என்ற ‘ஈ’ விகுதி சேர்த்து அபிராமி என்றானது. இந்த வார்த்தையானது முடிவாக உடலுக்கு ஆரோக்கியத்தையும்- ‘மருந்தே’(24) உள்ளத்திற்கு மகிழ்ச்சியும் ‘களிக்கும்படி’(70) அறிவிற்கு தெளிவையும் ‘மதி மயங்கேன்’(92) ஆன்மாவிற்கு முக்தியையும் ‘அழியா முத்தி விடு மன்றோ’ 0(15) அளிக்கவல்ல ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளேயும் ‘அபி’ ‘அந்தர் முகே’ உள்ளத்தில் உள்ள அனைத்தினிற்கும் புறம்பே’(23) என்ற ஆனந்தமயமான மாறிக்கொண்ட இருக்கக்கூடிய சலிப்பற்ற மகிழ்வாகிய வணங்குபவருடன் இரண்டற ஒருசேர கலக்கும் பேராற்றலையே ‘‘அபிராமி” என்கிறார்.
அந்த சக்தியோடு பிணைக்கப்படுவதையே ‘‘வல்லி” என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் ‘‘அபிராமவல்லி” என்ற பெயரை அபிராமி சமயத்தில் கடவுளாக அறிமுகப்படுத்துகிறார் அபிராமி பட்டர். ஒருமுறை அபிராமி என்ற வார்த்தையை சொன்னால் ஆயிரம் முறை விஷ்ணுவின் பெயரை சொன்னதாகும்.
இதை ‘சகஸ்ர நாம சத்துல்யம்’ என்பதனால் அறியலாம். ஒருமுறை அபிராமி என்ற வார்த்தையை சொன்னால் ஸ்ரீ சூக்தத்தை ஒருமுறை சொன்ன பலனும், அபிராமி என்று ஒரு முறை சொன்னால் பஞ்சாட்சரத்தை ஆயிரம் முறை சொன்ன பலனும் தோன்றும் என்கிறது ஆகம வசனம். அதனாலேயே பிறபெயர்கள் இருந்தும் அதை சூட்டாமல் ‘‘அபிராமவல்லி” என்று பெயர் சூட்டியதன் காரணம் ஒருமுறையாவது உச்சரிக்க வேண்டும். மாத்திரை பொழுதாவது மனதில் வைக்க வேண்டும். ஒரு துன்பம் கூட இல்லாமல் இருக்க வேண்டுமென இவை யாவற்றையும் நமக்கு விளக்கியமையால் ‘‘எங்கள் அபிராமவல்லியை” என்கிறார்.
‘‘அண்டமெல்லாம் பூத்தாளை”
என்பதனால் அனைத்து உலகங்களையும், உலகத்திலுள்ள உயிர்களுக்கு உடலையும் படைத்தவள் உமையம்மையே. அதை படைக்கும் கடவுளாகிற பிரம்மனின் நாக்கிலிருந்து ப்ராம்மி என்ற சக்தியாய் ஒலி தோன்றி, அதிலிருந்து வாயுவும் அதிலிருந்து நெருப்பும் நெருப்பிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் நிலத்திலிருந்து உயிருக்கான உடல் தோன்றியது. சந்திரனிலிருந்து உள்ளம் தோன்றி, சூரியனிலிருந்து அறிவு தோன்றி, தோன்றாமல் அனாதியாய் இருக்கும் ஆன்மாவிற்கு அருள் தோன்றி, அதன் வழியாய் யாக்கை தோன்றியது.
யாக்கையால் புலனும் புற உலக பதிவும் தோன்றியது. பதிவினால் நினைவு தோன்றி, நினைவினால் புத்தியும் புத்தியினால் சித்தமும், சித்தத்தினால் அஹங்காரமும் அஹங்காரத்தினால் ஆன்மாவிற்கு தன் உணர்வும் தோன்றியது. தன்உணர்வால் பாவபுண்ணியம் தோன்றி பாவ புண்ணியத்தினால் ஞானமும், ஞானத்தினால் முத்தியும் தோன்றும். இப்படி அனைத்து தோற்றத்திற்குக் காரணமான சக்தியே ‘பிரம்ம சக்தி’ எனப்படுகிறது. இந்த பிரம்ம சக்தியையே ‘பூத்தவளே’ என்கிறார். ‘ஆகாஷாத் வாயோர்… அக்னி’ என்ற வேத வாக்கிய வரியினாலும் ‘பாரும் புனலும் கனலும் வெங் காலும் படர் விசும்பும் ஊரும் முருகு சுவை ஒளி ஊரொலி ஒன்றுபடச் சேரும் தலைவி’ (68)யையே ‘‘அண்டமெல்லாம் பூத்தாளை” என்று சூட்டுகிறார்.
முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்