Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆசைகளை நிறைவேற்றித் தரும் ஆடிப்பூரம்

பூரம் நட்சத்திரம் (ஆடிப்பூரம்)

ஆண்டாள் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் ஆடிப்பூரம். ஆண்டாள் திருக்கல்யாண உற்சவங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாராயணம் போன்றவை நடைபெறும். அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருவாடிப் பூரத்தின் பெருமை

இந்த ஆண்டு திருவாடிப்பூரம் 14.08.2026, வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அன்றே ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் அமைந்துள்ளது. இதனால் இந்நாள் பல்வேறு மங்கள அம்சங்கள் ஒன்றிணைந்த அரிய நாளாக விளங்குகிறது. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனுக்குரிய கிழமையும் வெள்ளிக்கிழமை. மேலும் சுக்கிரனின் அதிதேவதை ஸ்ரீ மகாலட்சுமி. ஆகவே, பூரம் நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும், மகாலட்சுமியின் அருளும் ஒருங்கே சங்கமிக்கும் அரிய திருநாளாக இந்த ஆண்டின் திருவாடிப்பூரம் அமைந்துள்ளது.

ஆண்டாளும் ஆடிப்பூரமும்

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், வைணவ சமயத்தில் திருவாடிப் பூரம் எனப் போற்றப்படுகிறது. இது சாதாரண நட்சத்திர நாள் அல்ல; ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்த திருநட்சத்திரம் என்பதால், திவ்ய தேசங்கள் அனைத்திலும் மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படும் மங்கள நாள். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள், திருவில்லிபுத்தூரில் திருத்துளசிச் செடியின் அடியில் தெய்வக் குழந்தையாக அவதரித்தாள். பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) அந்தத் திருக்குழந்தையைக் கண்டெடுத்து, ``கோதை’’ என்று திருநாமம் சூட்டி, பகவத் பக்தியிலும் வேத - தமிழ் மரபிலும் வளர்த்தார். கோதை நாச்சியார் சிறுவயது முதலே ஸ்ரீ மந் நாராயணனையே தம் மணவாளனாக வரித்துக் கொண்டார். எம்பெருமானுக்காகப் பெரியாழ்வார் கட்டிய மலர்களால் ஆன மாலையை முதலில் தாம் அணிந்து பார்த்துவிட்டு, பின்னர் பெருமானுக்குச் சாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனை அறிந்த பெரியாழ்வார் வருந்தியபோது, ``கோதை சூடிக் கொடுத்த மாலையே எனக்கு உகந்தது’’ என்று எம்பெருமானே அருளிச்செய்தார். அதனால் ஆண்டாள் ``சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’’, ``ஆண்டாள்’’ என்ற திருநாமங்களைப் பெற்றார். ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை முப்பது பாசுரங்களும், நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்களும் வைணவ சமயத்தின் அரிய பொக்கிஷங்களாக விளங்குகின்றன. திருப்பாவை பக்திக்கும் சரணாகதிக்கும் வழிகாட்டும் வேதசாரமாகத் திகழ்கிறது; நாச்சியார் திருமொழி, பரமபக்தியின் உச்சநிலையை வெளிப்படுத்தும் அருள்நூலாகப் போற்றப்படுகிறது.

இந்த சிறப்பு வேறு நாளுக்கு இல்லை

ஆடிப்பூர நாளின் சிறப்பை மணவாள மாமுனிகள் இப்படிப் பாடுகிறார்;

``இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக வன்றோ

இங்காண்டாளவதரித்தாள் - குன்றாத

வாழ்வான வைகுந்தவான்போகந்த(ன்)னையிகழ்ந்து

ஆழ்வார் திருமகளாராய்’’

இன்று திருவாடிப்பூரத் திருநாள்! நம் அனைவருக்கும் அருள் புரிவதற்காகவே ஆண்டாள் இவ்வுலகில் அவதரித்தாள். எக்காலத்தும் குறையாத பேரின்பம் நிறைந்த ஸ்ரீ வைகுண்ட வாழ்வையே பெரிதாக எண்ணாமல், பெரியாழ்வார் திருமகளாக இவ்வுலகில் தோன்றி, நமக்கு பக்தி நெறியையும், சரணாகதி மார்க்கத்தையும் அருளிச் செய்தாள் என்பது இப்பாடலின் பொருள். இந்தத் தனியனில் உள்ள ``எமக்காக’’ என்ற ஒரு சொல்லே ஆண்டாளின் அவதார ரகசியத்தை விளக்குகிறது. ஆண்டாள் தன் சொந்த ஆன்மிக உயர்வுக்காக அவதரிக்கவில்லை; நம்மைப் போன்ற சாதாரண ஜீவராசிகளும் இறைவனை அடையும் வழியை அறிய வேண்டும் என்பதற்காகவே அவதரித்தாள்.

எனவே, திருவாடிப்பூரம் என்பது ஆண்டாளின் பிறந்தநாள் மட்டுமல்ல; நமக்காகவே இறைவன் அருளிய தெய்வீகக் கொடை என்பதை இந்தத் தனியன் சுருக்கமாகவும் செறிவாகவும் எடுத்துரைக்கிறது.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆடிப்பூரம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் உடனுறை ரெங்கமன்னார் திருக்கோயிலில், ஆடிப்பூரப் பெருவிழா சுமார் 12 நாட்கள் மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 6.8.2026 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகன ஊர்வலங்களும், ஆன்மிக நிகழ்வுகளும் நடைபெறும். கொடியேற்ற நாளில் இரவில் ஆண்டாளும் ரெங்கமன்னாரும் 16 சக்கரங்கள் கொண்ட மாபெரும் சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

ஐந்தாம் நாள் அதாவது 10.8.2026 திங்கட்கிழமை ``ஐந்து கருட சேவை’’ மிகவும் முக்கியமான வைபவமாகும் காலையில் பெரியாழ்வாருக்குச் சிறப்பு மரியாதைகள் நடைபெறும் இரவில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோருடன் ஸ்ரீ வில்லிபுத்தூர் சுற்றியுள்ள திவ்யதேசப் பெருமாள்கள் ஒரே நேரத்தில் ஐந்து கருட வாகனங்களில் எழுந்தருளி உலா வரும் அரிய, கண் கொள்ளாக் காட்சி நடைபெறும்.

அபூர்வமான சயன சேவை

ஏழாம் நாள் (12.8.2026 புதன்கிழமை) சயன சேவை (கண்ணாடி மாளிகை) அபூர்வக் காட்சியாகும். இந்தக் காட்சி கிருஷ்ணன் கோயிலில் நடைபெறும். பொதுவாகப் பெருமாளின் திருவடிகளில்தான் தாயார் வீற்றிருப்பார். ஆனால், ஸ்ரீ வில்லிபுத்தூரில் மட்டும் ஆண்டாளின் மடியில் ரெங்கமன்னார் தலைவைத்துத் துயிலும் `சயன திருக்கோலம்’ (சயன சேவை) நடைபெறும். இந்தத் தெய்வீகக் காட்சியைக் காண்பது தம்பதியரிடையே அன்பையும் ஒற்றுமையையும் பெருக்கும் என்பது நம்பிக்கை. எட்டாம் நாள் (13.8.2026) ஆண்டாளும் ரெங்கமன்னாரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேட்டைக்குச் செல்லும் வேட்டைக்கள உற்சவம் நடைபெறும். மாலையில் பக்தர்கள் வளர்த்த முளைப்பாரிகளை ஆண்டாளுக்குச் சமர்ப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெறும்.

திருவாடிப்பூர தேர் உற்சவம் (14.8.2026)

ஆடிப்பூர நாளன்று (ஒன்பதாம் நாள்) அதிகாலையிலேயே ஆண்டாளும் ரெங்கமன்னாரும் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மாபெரும் திருத்தேரில் எழுந்தருளுவர். இந்நாளில் மதுரை அழகர்கோயிலில் இருந்து கொண்டு வரப்படும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் சீர் வரிசைகள் ஆண்டாளுக்குச் சாற்றப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ``கோவிந்தா! கோபாலா!’’ என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்களில் ஒன்று ஸ்ரீ வில்லிபுத்தூர் தேர். அன்றைய தினம் மூலவருக்கு சிறப்பு புஷ்பாங்கி சேவை உண்டு. 10ம் நாள் சப்தாவரணம் நடைபெறும். 11ம் நாள் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். திருவிழா நிறைவாக, 12-ஆம் நாள் (17.8.2026 திங்கட்கிழமை) ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னாருக்குப் பல வகையான நறுமண மலர்களால் புஷ்பயாகம் (புஷ்பாஞ்சலி) நடைபெற்று பெருவிழா இனிதே நிறைவுறும்.

ஸ்ரீ ரங்கத்திலும் பிற தலங்களிலும் ஆடிப்பூரம்

ஆண்டாளின் அவதாரத் திருநாளான ஆடிப்பூரம், வைணவத் திருத்தலங்கள் அனைத்திலும் மிகுந்த கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஸ்ரீ ரங்கத்தில் உள் ஆண்டாள், வெளி ஆண்டாள் என இரு சந்நதிகள் உள்ளன. ஆடிப்பூரத் திருநாளில் வடதிருக்காவிரியிலிருந்து (கொள்ளிடம்) புனிதநீர் யானை மீது கொண்டு வரப்பட்டு ஆண்டாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். அன்று ஆண்டாள் ‘திருக்கல்யாண திருக்கோலத்திலும்’, வீணையேந்திய ‘பரகாலநாயகி’ அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். திருவல்லிக்கேணி (சென்னை) - ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் ஆண்டாள் சந்நதியில் 10 நாட்கள் ஆடிப்பூரப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். விழா நாட்களில் தினசரி மாலை ஆண்டாள் பல்வேறு வாகனங்களில் உலா வருவார். ஆடிப்பூரத்தன்று மாலையில் பார்த்தசாரதிப் பெருமாளும் ஆண்டாளும் இணைந்து மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

திருமலையில் ஆடிப்பூரம்

மன்னார்குடி - ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயில் ஆடிப்பூர விழா 10 நாட்கள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள ஆண்டாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும், பூச்சொரிதலும் நடைபெறும். ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கு வளைகாப்பு வைபவம் வெகுசிறப்பாக நடக்கும். கும்பகோணம் - ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோயிலில் 3 நாட்கள் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீ சாரங்கபாணி மற்றும் ஆண்டாளுக்குப் பட்டு வஸ்திரங்கள் சாற்றப்பட்டு, ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

திருமலையில் ஆடிப் பூரத்தன்று ஸ்ரீ வாரி (ஏழுமலையான்) கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆண்டாள் சந்நதியிலும் ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் - பெருமாள் மாலை மாற்றும் வைபவமும், வளையல் பிரசாத விநியோகமும் நடைபெறும்.

கண்ணாடி வளையல்கள் மற்றும் அக்காரவடிசல்

ஸ்ரீ பெரும்புதூர் - ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் ஆடிப் பூரத்தன்று ஆண்டாளுக்கும் உடையவருக்கும் (ராமானுஜர்) சிறப்பு மரியாதைகளும், பெருமாளோடு ஆண்டாள் மாலை மாற்றும் உற்சவமும் மிக விமரிசையாக நடைபெறும். காஞ்சிபுரத்தில் பேரருளாளன் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள ஆண்டாள் சந்நதியில் ஆடிப்பூரம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும். அன்று மாலை ஆண்டாளுக்குச் சிறப்பு திருமஞ்சனம், வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, பெருமாளுடன் சேர்ந்து ஊஞ்சல் சேவையில் காட்சியளிப்பார். அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்குச் சாற்றப்பட்ட கண்ணாடி வளையல்கள் மற்றும் கல்கண்டு சாதம் / அக்காரவடிசல் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேல்கோட்டை செல்லப்பிள்ளை (செல்வ நாராயண) திருக்கோயிலில் - ஸ்ரீ ராமானுஜ சம்பிரதாயப்படி ஆண்டாள் திருவாடிப்பூரம் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. திருநாராயணபுரம் திருக்கோயில் - ஆண்டாள் சாற்றுமுறை, திவ்யப் பிரபந்த சேவை நடைபெறும்.

ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் - ஆண்டாளுக்கு மலர்மாலை, திருமஞ்சனம், புறப்பாடு நடைபெறும். நாச்சியார் கோயிலில் - நாச்சியாருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இத்தலத்தில் ஆடிப்பூரம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அம்பாள் சந்நதிகளில் ஆடிப்பூரம்

திருவாடிப்பூரம் என்பது வைணவர்களுக்கு மட்டுமல்ல; சைவர்களுக்கும் மிகுந்த மங்களம் நிறைந்த திருநாளாக விளங்குகிறது. இதன் காரணமாக, சிவாலயங்களில் உள்ள அம்மன் சந்நதிகளிலும், தனித்த அம்மன் ஆலயங்களிலும் ஆடிப்பூர உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், குங்கும அர்ச்சனை, வளைகாப்பு, ஊஞ்சல் உற்சவம், வீதியுலா போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன.

ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டு, நீடித்த சுமங்கல்யம், குடும்ப நலம், மகப்பேறு, செல்வ வளம் ஆகியவற்றை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றனர். திருவாடிப்பூரம் சமய வேறுபாடுகளைக் கடந்து, தெய்வீகத் தாயின் அருளை நினைவுகூறும் மங்களத் திருநாளாகத் தமிழகம் முழுவதும் பக்தி உணர்வோடு அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காமாட்சி அம்மனும் ஆடிப்பூரமும்

ஆடிப்பூரம் என்றாலே காமாட்சி அம்மனின் சிறப்பு நினைவுக்கு வரும். ``காமாட்சி’’ என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கும் அம்மன் ஆலயங்கள் எங்கிருந்தாலும், அங்கு திருவாடிப்பூரம் மிகுந்த விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாங்கள் நேர்த்திக் கடனாகக் கொண்டு வந்த வளையல்களை அம்மனுக்குச் சமர்ப்பிக்கின்றனர். அந்த வளையல்களால் அம்மனுக்கு மாலைகள் அணிவிக்கப்படுவது, கண்களைக் கவரும் அரிய தரிசனமாக அமைகிறது. திருமணத் தடை நீங்கவும், மாங்கல்யபலம் பெருகவும், மகப்பேறு கிட்டவும் பெண்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இவ்வழிபாட்டில் பங்கேற்கின்றனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில், ஸ்ரீ காமாட்சி அன்னை, ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரியின் பூரண சொரூபமாகவும், பரபிரம்ம ஸ்வரூபிணியாகவும் அருள்பாலிக்கிறாள். எனவே, இத்தலத்தில் நடைபெறும் திருவாடிப்பூர உற்சவம் சக்தி வழிபாட்டில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், குங்கும அர்ச்சனை, ஊஞ்சல் உற்சவம், வீதியுலா போன்ற வைபவங்கள் பக்தி விமரிசையாக நடைபெறுகின்றன.

மேளதாள முழக்கத்துடன் சீர்தட்டுகள்

தமிழகத்தின் பல பகுதிகளில், ஆடிப் பூரத்தை முன்னிட்டு பக்தர்கள் மேளதாள முழக்கத்துடன் சீர்தட்டுகளை ஏந்தி அம்மன் கோயில்களுக்குச் சென்று சமர்ப்பிப்பது வழக்கம். மஞ்சள், குங்குமம், வளையல்கள், பட்டுப் புடவைகள், தேங்காய், பழங்கள், பூக்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட சீர்தட்டுகளை ஏந்திச் செல்லும் பக்தர்களின் பேரணியும், அம்மனை தரிசிக்கத்திரளும் மக்கள் கூட்டமும், திருவாடிப்பூர விழாவிற்கு தனி அழகையும் ஆன்மிக எழுச்சியையும் அளிக்கின்றன. இக்காட்சிகள் பக்தி, பாரம்பரியம், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை ஒருங்கே வெளிப்படுத்தும் கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றன.

திருவண்ணாமலையில்ஆடிப்பூரம்

பொதுவாக சிவாலயங்களில் தீமிதி உற்சவம் நடைபெறுவது அரிது. ஆனால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் உண்ணாமுலை அம்மன் ஆடிப்பூரப் பிரம்மோற்சவம் இதற்கு விதி விலக்காக விளங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்வுற்சவத்தின் நிறைவு நாளில், பராசக்தி உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பான வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் அம்மன் சந்நதி முன்பாக பக்தர்கள் விரதமிருந்து அக்னிக் குண்டத்தில் இறங்கி தீமிதி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

இந்தத் தீமிதி வைபவம், திருவண்ணாமலை ஆடிப்பூர உற்சவத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுகிறது. சிவாலயங்களில் அரிதாகக் காணப்படும் இவ்வகை தீமிதி வழிபாடு, உண்ணாமுலை அம்மன் மீது பக்தர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையையும், அம்மனின் அருளால் அனைத்துத் துன்பங்களும் அகலும் என்ற உறுதியான பக்தி மரபையும் வெளிப்படுத்துகிறது.

திருச்சி மலைக்கோட்டை - மட்டுவார்குழலம்மன் ஆடிப்பூர வைபவம்

திருச்சி மலைக்கோட்டையில் அருள்பாலிக்கும் அருள்மிகு தாயுமான சுவாமி - மட்டுவார் குழலம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் உற்சவ நாட்களில் மட்டுவார் குழலம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், வளைகாப்பு, ஊஞ்சல் உற்சவம், வீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. குறிப்பாக, திருவாடிப்பூரத் திருநாளில் அம்மனுக்குச் சிறப்பு வளைகாப்பு நடத்தப்படுவது ஆயிரக்கணக்கான பெண்களை ஈர்க்கும் மங்கள நிகழ்வாகும். இவ்விழாவின் தனிச் சிறப்பாக, இரவு வேளையில் மட்டுவார்குழலம்மன் தனியாகத் தேரில் எழுந்தருளி, மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் பவனி வருவது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமான் இல்லாமல் அம்பிகை மட்டும் தனித்தேரில் எழுந்தருளும் இந்த உற்சவம், தமிழக சிவாலயங்களில் அரிதாகக் காணப்படும். ஊஞ்சல் உற்சவமும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் முக்கிய வைபவமாக விளங்குகிறது. தாயுமானசுவாமி, கருவுற்ற பெண்ணுக்குத் தாயாக வந்து அருள்புரிந்த தலத்தில், தாய்மையின் திருவுருவமாக விளங்கும் மட்டுவார் குழலம்மனுக்கு நடைபெறும் ஆடிப்பூர வைபவம், அன்னையின் கருணையை நினைவூட்டும் அரிய திருவிழாவாகத் திகழ்கிறது.

திருவாரூர் கமலாம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூர வைபவம்

சக்தி பீடங்களில் ஒன்றாகப் போற்றப் படும் திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோயிலில், யோக கமலாம்பாளுக்கும், உற்சவர் அல்லியங்கோதை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருநாளில் விசேஷ அபிஷேகங்கள், வளைகாப்பு, வளையல் அலங்காரம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. உற்சவ நாட்களில் அம்மன் வீதியுலாவும், தேரோட்டமும் பக்தி விமரிசையாக நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நாளில் அம்மனுக்கு அரிசி - வெல்லப் புட்டு, பலவகை சித்ரான்னங்கள் மற்றும் இனிய நிவேதனங்கள் சமர்ப்பிக்கப்படுவது. இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். பின்னர் அவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இன்னும் பல கோயில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.