திருச்செந்தூருக்குத் தெற்கே 14 கி.மீ தொலைவில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் அறம்வளர்த்த நாயகியை தரிசிக்கலாம். ஆலயத்தில் அன்னைக்குப் படைக்கப்பட்ட மாம்பழப் பிரசாதத்தை, உண்டு வந்தால், மழலை வரம் அருள்கிறது என்பது ஐதீகம்.
திருநெல்வேலி காந்திமதி அன்னை, தினமும் உச்சிக்காலத்தில் நெல்லையப்பருக்கும் பரிவார தேவதைகளுக்கும் தீவட்டி பரிவாரங்கள் மற்றும் அர்ச்சகருடன் சென்று நிவேதனம் செய்த பின்னரே தன் பூஜையையும், நிவேதனத்தையும் ஏற்றருள்கிறாள்.
குற்றாலத்தில் யோகபீடம் எனும் பெயரில் பராசக்தி மேரு வடிவில் திருவருள் புரிகிறாள். பௌர்ணமி தினங்களிலும், நவராத்திரியின் போதும் இந்த பராசக்தி பீடம் விசேஷமாக வழிபடப்படுகிறது.
விருதுநகர் - தென்காசி பாதையில் உள்ள சங்கரன்கோயிலில், கோமதியம்மன் தனிப்பெருங்கருணையோடு அருள்கிறாள். இத்தேவியின் சந்நதி முன், வேலப்ப தேசிக மூர்த்திகள் எனும் அடியார் பிரதிஷ்டை செய்த சக்கரத்தின் அருகே, ஆடாத பேயும் ஆடுகிறது. தீராத நோயும் தீர்கிறது.
64 திருவிளையாடல்களைப்புரிந்த மதுரை சோமசுந்தரக் கடவுளின் பட்டத்து ராணியான மீனாட்சி தேவியை தொடர்ந்து மூன்று நாட்கள் திருப்பள்ளியெழுச்சியின் போதும் இரவு பள்ளியறை பூஜையின்போதும் வணங்கினால், நம் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறுகின்றன.
ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளின் குலதெய்வமாக விளங்குபவள் ராமேஸ்வரம் பர்வதவர்த்தனி அம்பிகை. அழகு தமிழில், மலைவளர் காதலி, இத்தேவியின் திருவடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தங்க ஸ்ரீ சக்ரம் சக்தி வாய்ந்தது.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, ஆதி சங்கரரால் அணிவிக்கப்பட்ட ஸ்ரீ சக்ரம், சிவசக்ரம் எனும் இரண்டு தாடகங்களை அணிந்து தன் மேலிரு கரங்களில் மகாலட்சுமியைப் போன்றே தாமரை மலர்களை ஏந்தி அருள்பாலிக்கிறாள்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்தில், கொலுவிருக்கும் மந்திரபீடேஸ்வரி மங்களநாயகி, பக்தர்களின் பல்வேறு நோய்களைப் போக்குவதால் ‘பல நோயறுக்கும் பரை’ என்ற பெயரும் இத்தேவிக்கு உண்டு.
திருவாரூர் தியாகராஜர் ஆலய இரண்டாம் பிராகாரத்தில், தன் ஒரு கையில் நீலோத்பல மலரை ஏந்தி மறு கரத்துச் சுண்டுவிரலால். தோழியின் தோள் அமர்ந்திருக்கும் முருகனின் சுண்டு விரலைப் பிடித்திருக்கும் எழிலுருவில் நீலோத்பலாம்பாளை தரிசிக்கலாம்.
திருக்கடவூரில் அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய தேவி, அபிராமி! தை அமாவாசை அன்று அபிராமி பட்டர் உற்சவம் இங்கு நடக்கும். அப்போது அபிராமி அந்தாதி சம்பவம் நடத்திக் காட்டப் படும்.
பார்வதி மயிலுருக்கொண்டு ஈசனை பூஜித்த தலங்களுள் ஒன்று மயிலாடுதுறை. இங்கு தேவிக்கு அபயாம்பிகை என்று பெயர். இத்தல ஜுரதேவருக்கு நூறுகுடம் தண்ணீரால் அபிஷேகம் செய்தால் கடுமையான ஜுரமும் நீங்கிவிடுகிறது.
சென்னை, திருவொற்றியூர். வடிவுடையம்மன் பக்தர்களைக் கண்ணை இமை போல் காத்தருள்பவள். வெள்ளிக்கிழமைகளில் இத்தேவியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த அம்மனையும், கொடியிடை (மேலூர்), திருவுடை (திருமுல்லைவாயில்) மூன்று தேவியரையும் பௌர்ணமி தினத்தில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
காசியில் விசாலாட்சி, அன்னபூரணி என இரு அம்சங்களாக தேவி அருள்கிறாள். இருவர் முன்பும் தனித் தனியே ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விஜயதசமியன்று தங்க விசாலாட்சியையும், தீபாவளியின்போது தங்க அன்னபூரணியையும் தரிசிக்கலாம்.
குளித்தலையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருஈங்கோய்மலையில் லலிதாதேவியை தரிசிக்கலாம். இத்தலம் சாயாபீடம் எனப் போற்றப் படுகிறது. பெண் யோகினிகள் பூஜைகள், யாகங்கள் செய்யும் தலமிது.
நாகலட்சுமி


