Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

இறைவனை உணர எளிய வழி?

?நாம் வண்டியில் போகும்போது பன்றி மீது மோதினால் அந்த வண்டியை விற்றுவிட சொல்கிறார்களே, ஏன்?

- வண்ணைகணேசன், சென்னை.

இந்த கருத்து நம்மிடையே உள்ள நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக வாகனத்தை இயக்கவேண்டும் என்றால் அதற்கு ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றிருக்க வேண்டும். இந்த செவ்வாய் என்கிற கிரஹம்தான் பாதுகாப்பிற்கும் அதிபதி. இந்த பூமி, நிலம், சாலை வழி போக்குவரத்து ஆகியவற்றிற்கு அதிபதி செவ்வாய். வராஹம் என்று அழைக்கப்படும் பன்றி செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது. வராஹ ஸ்வாமியின் உருவத்தை நினைவிற்கு கொண்டுவந்து பாருங்கள். ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனிடமிருந்து பூமியைக் காத்து கடலுக்கு அடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தவராக புராணங்கள் கூறுகின்றன. இப்படி செவ்வாயின் வலிமை பெற்ற வராஹம் என்று அழைக்கப்படும் பன்றியானது, வாகனத்தை இயக்கும்போது குறுக்கே வந்து அதன் மீது மோதிவிட்டால், அந்த வாகனத்தினால் நமக்கு வேறு ஏதோ பெரிய ஆபத்து நேரப்போகிறது என்பதைக் குறிப்பதாகவும், நம்மை எச்சரித்து பாதுகாப்பதற்காகத்தான் அவ்வாறு பன்றி ஆனது குறுக்கே வந்துநின்று தடுத்து நம்மைக் காப்பதாகவும், ஒரு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பன்றியின் மீது மோதிவிட்டால் அந்த வாகனம் நமக்கு உகந்தது அல்ல என்று கருதி அதனை உடனே விற்றுவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

?பொதுவாக கோபுர கலசத்திற்குள் என்னென்ன பொருட்கள் வைக்கப் படுகிறது?

- என். இளங்கோவன், மயிலாடுதுறை.

பொதுவாக கோபுர கலத்திற்குள், வரகு தானியத்தை நிரப்பி வைத்திருப்பார்கள். ஒரு சிலர், விதை நெல்மணிகளை நிரப்பி வைக்கிறார்கள். இதுபோன்ற தானியங்களைத் தவிர வேறு எந்தப் பொருளையும் கோபுர கலசத்திற்குள் வைப்பதில்லை.

?60 வயதிற்கு மேல் உள்ளவர்களை சனி திசை பாதிக்காதா?

- சு.ஆறுமுகம், கழுகுமலை.

முதலில் சனி திசை என்றாலே பாதிப்பினைத் தரும் என்ற கருத்தே தவறானது. சனி திசை, காலத்தில் அளப்பறிய நற்பலன்களை அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எந்த வயதினராக இருந்தாலும், ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்திகளின் அடிப்படையில்தான் பலன் என்பது நடக்கிறது. இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

?இறைவனை உணர எளிய வழி?

- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

அன்பே சிவம், தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என நம்மவர்கள் பல எளிய வழிகளை சொல்லித் தந்திருக்கிறார்களே, இவற்றைப் பின்பற்றினாலே இறைவனை எளிதாக உணர இயலுமே. இந்த வழிகளை சரிவரப் பின்பற்றி வந்தாலே உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதையும் உணர்ந்து

விடுவோம்.

?குலதெய்வம் தெரியாதவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

- த.நேரு, வெண்கரும்பூர்.

முகம் பார்க்கும் கண்ணாடியை வீட்டின் பூஜை அறையில் வைத்து, தினந்தோறும் வழிபட்டு வர வேண்டும். நம் எல்லோருடைய உடம்பிலும் அவரவர் குலதெய்வத்தின் அம்சம் என்பதும் இடம் பெற்றிருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள், தினந்தோறும் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து முகம் பார்க்கும் கண்ணாடியை குலதெய்வமாக நினைத்து அதிலே தம் முகம் கண்டு வணங்கி வர, ஒரு வருட காலத்திற்குள் குலதெய்வம் எது என்பதை அறிந்துகொள்வார்கள்.

?புதுவீட்டை எந்தப் பிரச்னைகளுமின்றி கட்டி குடிபுகுவதற்கு எந்த கடவுளை வணங்குவது சிறந்தது?

- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற சுப்ரமணிய ஸ்வாமியை வணங்குவது நல்லது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று சொல்வார்கள். மலைப்பகுதி என்பது செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது. இந்த செவ்வாய் என்கின்ற கிரஹம்தான் சொந்த வீட்டிற்கான பாக்யத்தைத் தருகிறது. வைணவர்கள் ஆக இருந்தால், மலை மீது குடிகொண்டிருக்கும் பெருமாளை வணங்குவது நல்லது.

?அஷ்டம சனி என்றால் என்ன?

- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

அஷ்டமம் என்றால் எட்டாவது என்று பொருள். நமது ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் காலத்தை அஷ்டம சனி என்று சொல்வார்கள். பொதுவாக, எட்டாம் பாவகம் என்பது கஷ்டங்கள், தடைகள், இடைஞ்சல்கள், அதிகப்படியான பொருட் செலவு, நஷ்டம் போன்றவற்றைக் குறிக்கும். அந்த பாவகத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில், மேற்சொன்ன பலன்கள் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அஷ்டமத்துச்சனி நடக்கும் காலத்தே புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று ஜோதிடர்கள் எச்சரிக்கை செய்வார்கள்.

?நிச்சயதார்த்தம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்தலாமா?

- ஜெ.மணிகண்டன், வேலூர்.

சாஸ்திர ரீதியான நிச்சயதார்த்தம் என்பது திருமணத்திற்கு முதல்நாள் நடத்துவதே ஆகும். தற்காலத்தில் செய்வது போல் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்போ அல்லது ஒரு வருடத்திற்கு முன்போ செய்துகொள்ளும் நிச்சயதார்த்தம் என்பது இருவீட்டாரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் ஒப்பந்தமே. இந்த ஒப்பந்தத்தில் ஏதேனும் சிக்கல் உண்டாகும்போது, இரு வீட்டாரும் மணமக்களின் விருப்பத்தினை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளலாம். அதே நேரத்தில், திருமணத்திற்கு முதல்நாள் பந்தலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, மறுநாள் அந்த திருமணத்தை நிறுத்தினால், குடும்பத்தில் தோஷம் என்பது வந்து சேரும்.

?விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வரலாமா?

- பொன்விழி, அன்னூர்.

அவசியம் இல்லை. முதலில் எருக்கம்பூ மாலையை பிரசாதமாக எந்த அர்ச்சகரும் தரமாட்டார். இறைவனின் பிரசாதமாக பெண்களும் அதனை சூடிக் கொள்ள இயலாது என்பதால், அதனை வீட்டிற்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.

?கிழக்கு பார்த்த நூறு சிவாலயங்களை தரிசித்த பலன் மேற்கு பார்த்த ஒரு சிவாலயத்தில் கிடைத்துவிடும் என்கிறார்களே, அது ஏன்?

- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இந்த கூற்றினில் உண்மை இல்லை. அது உண்மையென்றால் கிழக்கு நோக்கி ஆலயத்தை கட்டியிருக்க வேண்டிய அவசியமே இல்லையே. எல்லா ஆலயங்களையும் மேற்கு நோக்கியே கட்டியிருக்க இயலுமே. மேற்கு நோக்கிய ஆலயங்களுக்கு தனி மகத்துவம் என்பது உண்டு. இதுபோன்று மேற்கு நோக்கிய சிவாலயங்கள் சிறந்த பரிகார ஸ்தலங்களாக அமைகின்றன. சனி தோஷம், கலி தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற கடுமையான தோஷங்களை நீக்கும் பரிகார ஸ்தலங்களாக மேற்கு நோக்கிய சிவாலயங்கள் பார்க்கப்படுகின்றன என்பது உண்மை. அதே நேரத்தில், ஒரு மேற்கு நோக்கிய சிவாலயத்தை தரிசித்தால் கிழக்கு பார்த்த நூறு சிவாலயங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுதான் என்பதில் சந்தேகம் இல்லை.