Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பூஜை பெட்டி!

உடல் நலக்குறைவு

உத்தராதி மடத்தின் வழிவந்த ஒன்பதாவது பீடாதிபதியான மகான் ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர், துவைத வேதாந்தத்தினை போதிப்பதில் மிக சிறந்தவராக திகழ்ந்தவர். இவர், கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீ ரங்கப்பட்டினத்திலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும், மத்வ சித்தாந்தத்தை பரப்புவதில், நீண்ட காலம் அங்கயே தங்கியிருந்தார். அப்போது, ராமச்சந்திரதீர்த்தருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால், தான் எங்கு பிருந்தாவனஸ்தராக (மறைவு) ஆகிவிடுவோமோ... என்கின்ற அச்சத்தில், தனது சீடரான ``கம்பலூரி நரசிம்மாச்சார்’’ என்பவருக்கு சந்நியாச தீட்சை அளிக்க முடிவு செய்தார். கம்பலூரி நரசிம்மாச்சாருக்கு, ``ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர்’’ என்னும் திருநாமம் சூட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பட்டாபிஷேக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனால், ராமச்சந்திரமூர்த்தியின் அருளால் ராமச்சந்திரதீர்த்தர் நோய்வாய்ப்பட்டதில் இருந்து விடுபட்டார்.இதனால், ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தருக்கு, தான் தினசரி பூஜித்து வந்த சில சாளக்கிராமங்களையும், விக்ரகங்களையும் வழங்கினார். ஆனால், உத்தராதி மடத்தின் பூஜை பெட்டியிலிருந்த எந்த ஒரு விக்ரகங்களையும் அவருக்கு வழங்கவில்லை.

வித்யாநிதிக்கு சந்நியாசம்

``இனி.. நான் என்ன செய்ய போகிறேன் என்றே தெரியவில்லையே’’ என வருந்தினார், விபுதேந்திர தீர்த்தர்.``கவலை வேண்டாம். தகுந்த நேரம் வரும்போது உன்னை நான் திரும்ப அழைப்பேன். அது வரையில், மத்வ சித்தாந்தத்தை அனைவரிடத்திலும் கொண்டு செல்’’ என்று ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர் ஆணையிட்டார். ஆகையால், விபுதேந்திர தீர்த்தர் தேச சஞ்சாரத்தை மேற்கொண்டார். நாட்கள் கடந்தன...மீண்டும் சில நாட்களிலேயே ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது அவர், கர்நாடக மாநிலம் யெர்கோல்வில் (Yergol) இருந்தார். ராமச்சந்திர தீர்த்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை, விபுதேந்திர தீர்த்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழலானதால், விபுதேந்திர தீர்த்தரால் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர முடியவில்லை.

மடத்தின் பொறுப்புகளை முறைப்படி ஒருவரிடத்தில் ஒப்படைத்தே ஆக வேண்டும் என்கின்ற சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, தனது இன்னொரு சீடரான ``ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தருக்கு’’ சந்நியாசம் வழங்கி, அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. (இதே போல், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கும் நடந்துள்ளது. இவரும் கவீந்திரதீர்த்தர், ராஜேந்திரதீர்த்தர் என இருவருக்கும் சந்நியாசம் வழங்கினார். அப்போது, கவீந்திரதீர்த்தர் மூலமாக ராகவேந்திரமடமும், ராஜேந்திரதீர்த்தர் மூலமாக வியாசராஜமடமும் தொடங்கப்பட்டது) இருந்தபோதிலும், ஸ்ரீ விபுதேந்திரதீர்த்தரை உத்தராதி மடத்தின் பீடாதிபதி பொறுப்பில் இருந்து விலக்கிவைக்க, ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தருக்கு விருப்பம் இல்லை. இது சற்று ராமச்சந்திரதீர்த்தருக்கு குழப்பமான நிலைதான்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், அப்போது பட்டம் கொடுக்கப்பட்ட விபுதேந்திரரையும் விடமனமில்லை, வித்யாநிதி தீர்த்தரையும் விடமனமில்லை. ஆகையால், ஒரு முடிவேடுக்கிறார். தான் பிருந்தாவனபிரவேசித்த பின்னர், ஒரு ஆழமான குழித்தோண்டி, அதில் தனது சில பூஜை பெட்டிகளை வைத்துப் புதைத்துவிடுமாறு, தனது ஆஸ்தான சீடரான யெர்கோலாவைச் சேர்ந்த `தர்மண்ணா’ மற்றும் யெர்கோல் கிராமவாசிகளிடம் ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தர் கேட்டுக் கொண்டார்.

தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது

மேலும், தான் பிருந்தாவனமாகி ஆறு மாதங்களுக்குள், ஸ்ரீ விபுதேந்திரதீர்த்தர் இங்கு வந்து, அவரே புதைத்து வைக்கப்பட்ட பூஜை பெட்டிகளை எடுத்து, மீண்டும் உத்தராதி மடத்தின் பொறுப்புகளை கவனிக்க வேண்டும் என்கின்ற தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் விபுதேந்திரர் வராவிட்டால், அந்தப் பூஜை பெட்டிகளை ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தரிடம் ஒப்படைக்க வேண்டும். அவரே, உத்தராதி மடத்தின் அடுத்த பீடாதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்று கூறினார். ஆறு மாதங்கள் கடந்தும், ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர் வந்து சேரவில்லை. ஆகையால் பூஜைகளை மேற்கொள்ள, புதைக்கப்பட்ட பூஜை பெட்டியை எடுத்து வித்யாநிதி தீர்த்தரிடத்தில் ஒப்படைக்க தர்மண்ணா எண்ணினார்.

ஆனால், அதனை ஏற்க மனமில்லாமல், மேலும் சில நாட்கள் விபுதேந்திர தீர்த்தருக்காக காத்திருந்தார், வித்யாநிதி தீர்த்தர். 11 நாட்கள் கடந்தும் விபுதேந்திரர் வந்து சேரவில்லை. இனியும் தாமதிக்க கூடாது என்று எண்ணிய தர்மண்ணா, புதைத்த பூஜை பெட்டியினை வெளியே எடுப்பதற்காக தயாராகும் சமயத்தில், திடீரென விபுதேந்திர தீர்த்தர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீ ராமச்சந்திரர் கூறிய செய்தியினை விபுதேந்திரரிடம் தெரிவிக்க, தன்னிடம் பூஜை பெட்டியினை ஒப்படைக்க, தர்மண்ணாவிடம் கோரினார். ஆனால், குறித்த நேரத்திற்கு விபுதேந்திரர் வராததால், பூஜை பெட்டியை ஒப்படைக்க தர்மண்ணா மறுத்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து தனக்கு பூஜை பெட்டியினை வழங்குமாறு வலியுறுத்தினார்.

இங்கு நாமாக இருந்தால், யாரோ ஒருவர் பூஜை செய்யட்டும் என்று சென்றியிருப்போம். வெறும் விக்ரகங்களை வைத்து நாம் என்ன செய்யப்போகிறோம்? ஏதாவது சொத்துக்கள் இருந்தால் பரவாயில்லை என்று யோசித்திருப்போம். ஆனால், தன் குரு பூஜை செய்த விக்ரகங்களை தான்தான் பூஜை செய்வேன் என்கின்ற ஒருவித குரு பக்தி!

தனக்கு இனி சம்சார பந்தம் இல்லை. ஆகையால், தன் குரு விட்டுச் சென்ற பணிகளை, தான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது, விபுதேந்திரரின் ஆசை. தனக்கு முன்பே பீடத்தை அலங்கரித்த விபுதேந்திரரே தொடர்ந்து பூஜைகளை மேற்கொள்ளட்டும். அதன் பின்னர், நாம் மேற்கொள்ளலாம் என்பது வித்யாநிதி தீர்த்தரின் விருப்பம். குரு ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தரின் ஆனைப்படி சரியான நேரத்தில் விபுதேந்திரர் வந்து சேரவில்லையே... ஆகையால், வித்யாநிதிக்குதான் பூஜை பெட்டியினை கொடுக்க வேண்டும் என்பது தர்மண்ணாவின் விருப்பம். இப்படியிருக்க, தர்மண்ணா ஒரு முடிவெடுத்தார்.

குலுங்கியது பூமி

``ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தரின் பூஜை பெட்டியை நடுவில் வைக்கிறோம். ஸ்வாமிகள் இருவரும் தங்களின் பூஜைகளை மேற்கொள்ளுங்கள். யார் பூஜை செய்யும் போது, ராமச்சந்திர தீர்த்தரின் பூஜை பெட்டி வைத்த இடம் பிளக்கிறதோ, அவருக்கே பூஜை பெட்டி வழங்கப்படும். மேலும், அவர்களே அடுத்த மடாதிபதியாகவும் அறிவிக்கப்படுவார்கள்’’ என்று தர்மண்ணா நிபந்தனை விதிக்கிறார். இதனை, இரு சந்நியாசிகளும் ஏற்கிறார்கள். ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தரின் திருக்கரங்கலால் முதலில் சந்நியாசம் பெற்ற ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர், மூன்று நாட்களாக பூஜைகளை மேற்கொண்டார். ஆனால், ஸ்ரீ ராமச்சந்திர தீர்த்தரின் பூஜை பெட்டிகள் அசையவில்லை. அடுத்த நாளில் ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர், பூஜையை மேற்கொண்டார்.

அப்போது, பாகவதத்தில் ஐந்தாவது (பஞ்சம ஸ்கந்தம்) ஸ்கந்தப் பகுதியை எடுத்து படிக்க தொடங்கினார். சில மணிநேரத்திற்கு பிறகு, திடீரென்று பூஜை பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மண் பிளந்து, தரை மட்டத்திலிருந்து சில அங்குலத்திற்கு மேலே உயர்ந்தது. இதனை பார்த்துக் கொண்டிருந்த தர்மண்ணாவும், யெர்கோல் கிராம மக்களும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியடைந்தனர்.

பின்னர் தர்மண்ணாவும், யெர்கோல் கிராம மக்களும், உத்தராதி மடத்தின் பூஜை பெட்டிகளை வழங்கி, சமஸ்தானத்தின் பொறுப்பை ஏற்குமாறு ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தரிடம் கேட்டுக் கொண்டனர். அதன்படி ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர், மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மேலும், ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தர் கும்பகோணம் சென்று அங்கு `கும்பகோணம் மடம்’ என்னும் புதிய மடம் ஒன்றை தோற்றுவித்தார். இவரின் வழிவந்தவர்கள்தான் ஸ்ரீ விஜயேந்திரதீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரதீர்த்தர் ஆவர்.

ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் வருகைக்குப் பிறகு, கும்பகோணம் மடம், `ஸ்ரீ ராகவேந்திர மடம்’ என்று அழைக்க ஆரம்பமானது. அதுவே நிலைத்தும்விட்டது. (சிலர், கவீந்திரதீர்த்தர் மூலமாகவே ராகவேந்திர மடம் உருவானதாகவும், மற்றும் சிலர் விபுதேந்திரதீர்த்தருக்கு பின்னர்தான் ராகவேந்திர மடம் உருவானதாகவும் இருவேறு கருத்துக்கள் நிலவிவருகிறது) ஸ்ரீ ராமச்சந்திரதீர்த்தரின் மூலபிருந்தாவனம் யெர்கோல் என்னும் இடத்தில் உள்ளது.

ரா.ரெங்கராஜன்