``கான்ய குப்ஜம்’’ எனும் நாட்டில், ரத்னாகர் எனும் வேதியர் இருந்தார். வேதங்களில் வல்லவரான அவருக்கு சிந்தாமணி, மதிராம், பதிராம் என மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே `கவிராயர்’ குடும்பம் எனும் அளவிற்குக் கவிபாடுவதில், மிகுந்த திறமை பெற்றிருந்தது. மூன்று பிள்ளைகளில், சிந்தாமணி என்பவர், டெல்லி அரச தர்பாரில் இடம் பெற்றிருந்தார். அவர் `சிருங்கார ரசமாகக் கவி’ பாடுவதில் வல்லவர். அடுத்தவரான மதிராம், சாமந்தக மன்னரிடம் இருந்தார். பதிராம் மட்டும் வீட்டோடு இருந்தார். பதிராமுக்கு என்னவோ, அரசவைகளில் ஆஸ்தானக் கவியாவதில் விருப்பமில்லை. வேலை ஏதும் இல்லாமல் இருந்தார்.
ஒருநாள்... பதிராம் சாப்பிட உட்கார்ந்தார். சாப்பாட்டில் உப்பு குறைவாக இருந்தது. அதனால் பதிராம்,``அண்ணி! கொஞ்சம் உப்பு போடுங்களேன். போதவில்லை’’ என்று கேட்டார். அப்போது வீட்டு நிர்வாகம், மூத்த பிள்ளையான சிந்தாமணியிடம் இருந்தது. அதனால் சிந்தாமணியின் மனைவிக்கு, நம் கணவரின் சம்பாத்தியத்தில்தான் இந்தக் குடும்பமே நடக்கிறது என்ற ஆணவம் உண்டு.
அதனால் அவர், ``பதிராம்! நீ சம்பாதிக்கிற அழகுக்கு, உப்பு இல்லாமல் சாப்பிடக்கூடாதா?’’ என்று இகழ்ச்சியாகக் கேட்டார். அதைக்கேட்ட அதே விநாடியில் பதிராம் கைகளை உதறிவிட்டு எழுந்து, வீட்டைவிட்டு வெளியேறினார். அதன் பிறகு பதிராம், வீட்டுப்பக்கமே திரும்பவில்லை. வெளியேறிய பதிராம், நேரே சித்திரகூட மன்னரிடம் (ஹ்ருதய ராமசுத ருத்ர சோலங்கி) போய்ச் சேர்ந்தார். அங்கே மன்னர் அரசவையில் தன் கல்வித்திறமையை வெளிப்படுத்தி, `பூஷண்’ எனும் சிறப்புப் பெயர் பெற்றார். இனி இவரை பூஷண் என்றே பார்க்கலாம். அதன்பின், அண்ணன் சிந்தாமணி மூலமாக, பூஷண் டெல்லி அரசதர்பாருக்குப் போனார். அப்போது டெல்லியை அரசாண்டு வந்தது ஔரங்கசீப். எந்த நேரமும் ஏதேனும் பிரச்னைகளை உண்டாக்கி, அவற்றின் மத்தியிலேயே வாழ்ந்து வரும் அந்த மொகலாய மன்னருக்கு ஓரளவாவது நிம்மதி கிடைக்கிறது என்றால், அது தர்பாரில்தான்.
தர்பாரில் ஏராளமான கலைஞர்களும் கவிஞர்களும் கூடியிருந்து, சிருங்கார ரசக் கவிதைகள் பாட, அதைக்கேட்டு மகிழ்வார் மன்னர். அன்று அவையில் ஏராளமானோர் கூடியிருந்தார்கள். அரசவைக் கவிஞரான சிந்தாமணி, தன் தம்பியான பூஷணுடன் அரசவைக்குச் சென்றார். சிந்தாமணியின் பக்கத்தில் நிற்கும் பூஷணைப் பார்த்தவுடன் ஔரங்கசீப்,
``சிந்தாமணி! யாரிந்த வாலிபன்?’’ எனக் கேட்டார். பூஷணின் ஔி வீசும் கண்களும், பிரகாசமான முகமும், கம்பீரமான நிமிர்ந்த பார்வையும் ஔரங்கசீப்பை வெகுவாகக் கவர்ந்திருந்தன. அவர் கேள்விக்கு சிந்தாமணி பதில் சொன்னார்; ``மன்னா! இவன் என் தம்பி! பெரும் கவிஞன்! தங்கள் பார்வை இவன் மீது பட வேண்டும் என்பதற்காகவே, இங்கே அழைத்து வந்தேன்’’ என்றார்.
ஔரங்கசீப், பூஷணைப் பார்த்து, ``எங்கே? ஒரு கவிபாடு பார்க்கலாம்!’’ என்றார். அந்தத் தர்பாரில் யார் பாடினாலும் சரி! அது இன்பச் சுவை நிறைந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பது நியதி. ஔரங்கசீப்பிற்கும் அதுதான் பிடிக்கும். அதை ஏற்கனவே அறிந்திருந்த பூஷண் தயங்கினார். ஔரங்கசீப் மறுபடியும் ஓங்கிய குரலில் ஆணையிட்டார். பூஷண் தயக்கத்தை உதறி,
``மன்னா! எனக்கொரு கோரிக்கை. தாங்கள் அபயம் அளித்தால், அதை வெளியிடு கிறேன்’’ என்றார்.
``அபயம் தந்தோம்!’’ என்றார் ஔரங்கசீப். பூஷண் சொல்லத் தொடங்கினார்; ``மன்னா! இந்தத் தர்பாரின் வழக்கப்படி இன்பச் சுவை நிறைந்த பாடல்களைக் கேட்டுக்கேட்டு, தங்கள் உடலும் உள்ளமும் தூய்மை இழந்திருக்கும். நான் சிருங்காரக் கவி பாடுபவன் அல்ல. வீரந்தான் என் உயிர் மூச்சு. என் வாக்கில் வீரச்சுவைக்குத் தான் இடம் உண்டு. வீரர்களைத்தான் நான் போற்றுவேன். ஆகையால் தங்கள் வீரத்தைப் பாடுகிறேன் நான்’’ என்றார் பூஷண். ``சரி! பாடு!’’ என்றார் ஔரங்கசீப். பூஷண் நிதானமாகப் பேசத் தொடங்கினார்;
``மன்னா! ஒரு நிபந்தனை. என் பாடல்களைக் கேட்பதற்கு முன், தாங்கள் கை - கால்களை நன்றாக அலம்பித் தூய்மை செய்து கொண்டு, வந்து அமர வேண்டும். என் கவிகளைக் கேட்கும்போது, தங்கள் கை தானாகவே மீசை மீது படியும்; முறுக்கேற்றத் தொடங்கும். தங்கள் உள்ளத்திலே வீர உணர்ச்சி பொங்கும். ஆகவே, காம உணர்ச்சிகளால் மாசு பட்ட உள்ளத்தையும், உடலையும் தூய்மை செய்து கொண்டு வாருங்கள்!’’ என்றார் பூஷண். சபையில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். பூஷணின் அண்ணன் உட்பட.
சதிக்கும் சாமர்த்தியத்திற்கும் பெயர்போன ஔரங்கசீப், விநோதமாகப் பார்த்தார் பூஷணை; ``என் கை மீசை மீது படாமல் போனால், உன் தலை தரையில் உருளும். சம்மதமா?’’ என்று கேட்டார், பூஷணிடம். எனக்கே சவால் விடும் இந்த அகம்பாவம் பிடித்தவனை, ஒழித்துவிட வேண்டும். இவன் என்னதான் கவி பாடினாலும், நாம் மீசையை முறுக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டார் ஔரங்கசீப். பூஷணோ, ``தாராளமாக மன்னா! தாங்கள் மீசையை முறுக்காவிட்டால், என்னைக் கொன்று விடலாம்’’ என்றார். ஔரங்கசீப் சென்று, தன் கை - கால்களை அலம்பித் தூய்மை செய்துகொண்டு வந்து உட்கார்ந்தார்.
பூஷண், மொகலாயர்களின் பாரம்பரியச் சிறப்பைப் பாடினார். அவர்கள் வெற்றி கண்ட நிகழ்வுகளைப் பாராட்டி, ஔரங்கசீப்பின் வீரத்தையும் வெற்றியையும் ஆவேசமாக வர்ணித்துப்பாடினார். தர்பாரில் இருந்த அனைவரும் உடல் முறுக்கேற நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். ஔரங்கசீப் தன்னை மறந்து, வலது கையால் மீசையை முறுக்கத் தொடங்கினார். அதைப்பார்த்த பூஷண், பாட்டை நிறுத்தி சிரித்தபடி, ``மன்னா! சலாம்!’’ என்றார். ஔரங்கசீப் அப்போதுதான் தன்னிலைக்கு மீண்டார். தர்பாரில் இருந்த அனைவரும், பூஷணைப் புகழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். அது ஔரங்கசீப்பின் கோபத்தை மேலும் தூண்டியது. தன் தோல்வியை எண்ணிக் கண்களில் குரோதம் பொங்க,``இவனைக் கைது செய்யுங்கள்!’’ என உத்தரவிட்டார் ஔரங்கசீப்.
``இவனைச் சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்ய வேண்டும்’’ என்று நினைத்தார் அவர். அவருடைய முக்கிய மந்திரிகளும் மற்ற கவிஞர்களும், ``மன்னா! தாங்கள்தான் அந்தக் கவிஞனுக்கு அபயம் அளித்திருக்கிறீர்கள். ஆகவே தண்டனை கொடுக்கக்கூடாது!’’ என்று வாதாடி, பூஷணுக்கு விடுதலை வாங்கித் தந்தார்கள். விடுதலை பெற்ற பூஷண்,``சீ! இந்த ராஜ தர்பாரின் பிழைப்பு போதும்!’’ என்ற சலிப்போடு, தென்திசை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில்தான், சத்ரபதி வீர சிவாஜியின் புகழ் பாரதம் எங்கும் பரவிக் கிடந்தது. இந்து சாம்ராஜ்யம் நிறுவ வேண்டும் என்பதை, வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு, அதற்காகவே இரவும் பகலுமாகப் பாடுபட்டு வந்தார் வீரசிவாஜி. வெற்றிமேல் வெற்றியாகப் பெற்று வந்தார் வீரசிவாஜி. அப்படிப்பட்ட வீரசிவாஜியைப் பற்றி அறிந்த பூஷண், ``வீரத்தின் விளை நிலமாக விளங்கும் இந்த வீரசிவாஜியே நம் காவிய நாயகன்’’ என்று தீர்மானித்துக் கொண்டார்.
அவருடைய பயணம், வீரசிவாஜியின் தலைநகரான `ராய்கட்’ கோட்டையை நோக்கித் திரும்பியது. பூஷண், ராய்கட் கோட்டையை அடைந்தபோது, இரவு சூழத் தொடங்கிய நேரம். நகரின் பிரதானக்கோயில், வெளி மண்டபத்தில் உட்கார்ந்தபடி, பூஷண் மெள்...ளப் பாடத்தொடங்கினார். வீரசிவாஜியை, தான் சந்திக்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் திளைத்திருந்தார் பூஷண். இரவு நேரம்! தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்த பூஷணின் முன்னால், ஊர்க்காவலர் ஒருவர் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் பூஷணின் பாட்டு நின்றுவிட்டது. அவரை உற்றுப்பார்த்த ஊர்க்காவலர், ``ஐயா! நீங்கள் எந்த ஊர்?’’ எனக் கேட்டார்.
``நான் கான்யகுப்ஜத்தைச் சேர்ந்த கவிஞன். இங்கே ராய்கட் ஆஸ்தானத்தில் இடம்பெறலாம் என வந்திருக்கிறேன்’’ என்று பதில் சொன்னார் பூஷண். ``ஓகோ! மொகல் தர்பாரில் விருதுபெற்ற கவிஞரோ?’’ எனக் கேட்டார் காவலர்.``அதெல்லாம் இல்லை. சத்ரபதி வீரசிவாஜி அவர்களையே, உதாரண புருஷராக - வீரர் திலகமாகப் போற்றி வரும் பக்தன் நான்’’ என்றார் பூஷண். காவலர் தொடர்ந்தார்; ``சிவாஜியின் பேரில் நிறையப் பாடப் போகிறீர்களே! எனக்கு இப்போது, அவருடைய பெருமையை விளக்கி, ஒரு பாடல் பாடுங்களேன்!’’ என வேண்டினார். பூஷணுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இயற்கை தானே? திறமைசாலிகளிடம், அவர்களது திறமையை வெளிப்படுத்திக் காட்டச் சொன்னால், அவர்களுக்கு உடனே மகிழ்ச்சி பொங்குவது இயல்புதானே? பூஷண் மட்டும் விதிவிலக்கா என்ன?
``வீர சிவாஜியின் பெருமையை விளக்கி, ஒரு பாடல் பாடுங்களேன்!’’ என்று காவலர் கேட்டவுடன், பாடினார் பூஷண். பாடல் அற்புதமாக இருந்தது. அதைக் கேட்ட காவலர்,
``நன்று! நன்று! இன்னும் ஒரு முறை பாடுங்கள்!’’ என வேண்டினார். பூஷண் பாடினார். ``மறுபடியும் பாடுங்கள்!’’ எனக் காவலர் குரல் கொடுக்க, மறுபடியும் பாடினார் பூஷண். இப்படியே பதினெட்டு தடவைகள் பூஷண் பாடினார். காவலர் மறுபடியும் வேண்டுகோள் விடுக்க, பூஷண் பொறுமை இழந்தார்;``யாரையா நீர்? மறுபடியும் மறுபடியும் பாடச் சொல்கிறீர்களே! நீங்கள் என்ன பெரிய, வீரசிவாஜி மன்னரா? பரிசுகள் வாரி வழங்கப் போகிறீர்களா என்ன? காவலர் ஒருவருக்கு எவ்வளவு தடவைகள்தான், பாடிக் காண்பிப்பது? போய் வாருங்கள்!’’ என்ற பூஷண், படுத்துவிட்டார். காவலரும் பேசாமல் போய் விட்டார்.
மறுநாள்... வீரசிவாஜியின் அரசவைக்குப் பூஷண் சென்றார். அங்கே தர்பாரில், சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த வீரசிவாஜியைக் கண்டதும், அவருக்கு மனம் திடுக்கிட்டது. காரணம்? நேற்று இரவு வந்து, பாடல் பாடச் சொல்லிக் கேட்ட காவலர், அங்கே சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அதுதான் காரணம்! அதனால்தான், ``ஆகா! நேற்றிரவு காவலராக - எளிமையாக வந்து பாடல் கேட்டது, வீரசிவாஜி மன்னரா?’’ என அயர்ந்து நின்றார் பூஷண்; பேச்சே வரவில்லை. அந்த அயர்ச்சியை நீக்கினார் வீரசிவாஜி; ``கவிஞரே! உங்கள் ஆத்மார்த்தமான வாக்கை, நான் நேற்றே பதினெட்டு முறைகள் கேட்டும், திருப்தி அடையவில்லை. அந்தப் பெரு மகிழ்ச்சிக்குச் சான்றாக, உங்களுக்குப் பதினெட்டாயிரம் தங்கக்காசுகள், பதினெட்டு கிராமங்கள், பதினெட்டு யானைகள் ஆகியவற்றை அளிக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள்!’’ என்றார் சத்ரபதிசிவாஜி.
ஏற்கனவே வீரசிவாஜியின் எளிமையைக் கண்டு வியந்திருந்த பூஷண், அவரது வள்ளல் தன்மையையும் கண்டு நெகிழ்ந்தார்; ``மன்னா! நான் உங்கள் புகழ்பாட வந்திருக்கிறேன். உங்கள் பெரும் வீரத்தின் புகழைப் பாரதம் முழுதும் பரப்ப வேண்டும். வழி தெரியாமல் தவிக்கும் மக்கள், விழிப்பும் வீறும் பெற வேண்டும். இதுவே என் வாழ்நாள் லட்சியம். பரிசுக்காகப் பாடும் கவிஞன் அல்ல நான்’’ என்றார். அவர் பேசி முடித்ததும் வீரசிவாஜி தொடர்ந்தார்; ``கவிஞரே! நீங்கள் அந்தக் கவிதையை நூறு தடவை பாடியிருந்தால், என் காணிக்கைகளின் எண்ணிக்கையும் நூறாக ஆகியிருக்கும். என் மகிழ்ச்சிக்காகவாவது, இந்தப் பரிசுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!’’ என மறுபடியும் வேண்டினார்.
மன்னரின் வேண்டுகோளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார், பூஷண். அன்று முதல், சத்ரபதி சிவாஜியின் ஆஸ்தானக்கவி ஆனார் பூஷண்; `வீரம் வளர்த்த வரகவி’ என்ற புகழையும் பெற்றார். சத்ரபதி சிவாஜி அளித்த பரிசுகளைப் பெற்றதும், பூஷண் செய்த முதல் காரியம்; ஒரு யானை சுமக்கும் அளவிற்கு அதன் மீது உப்பு மூட்டைகளையும்; மற்றொரு யானை மீது ஏராளமான ஆடைகள், ஆபரணங்கள், பண்டங்கள் எனப் பலவற்றையும் ஏற்றி இரண்டு யானைகளையும் அனுப்பி வைத்தார், பூஷண். இதன் பின் பல ஆண்டுகள் ராய்கட்டில் இருந்த பூஷண், `சிவராஜ பூஷண்’ என்ற நூலை இயற்றி, அதை வீரசிவாஜி முடிசூட்டு விழாவின் போது, வீரசிவாஜிக்கு (9-6-1674) காணிக்கை அளித்தார்.
பி.என்.பரசுராமன்


