93. வ்யாலாய நமஹ (Vyaalaaya namaha)
சேதுக்கரையில் எழுந்தருளியிருந்த ராமனைச் சரண்புகுந்தான் விபீஷணன். அவனது வருகையை ராமனிடம் சென்று கூறிய சுக்ரீவன், “இது அரக்கர்களின் சதித்திட்டமாக இருக்கக்கூடும்! இவனை நம்பாதே!” என்றான்.அனைத்து வானரர்களையும் அழைத்து அவரவரின் கருத்துக்களைக் கேட்டான் ராமன்.“இவனை நன்கு பரிசோதிக்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது!” என்றான் வாலியின் மகனான அங்கதன்.“ஓர் ஒற்றனின் மூலம் இவனைக் கண்காணித்தபின் முடிவெடுப்போம்!” என்றான் சரபன் என்னும் வானர வீரன்.“இவன் வந்த நேரம் சரியில்லை.
இவனைத் திருப்பி அனுப்பி விடலாம்!” என்றார் ஜாம்பவான்.“முதலில் இவனையும் இவனுடன் வந்த நால்வரையும் முழுவதுமாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆடைகளுக்குள் ஆயுதங்களை இவர்கள் மறைத்து வைத்திருக்க வாய்ப்புண்டு!” என்றான் மைந்தன்.தன்னுடைய வரலாற்றையே மறந்த சுக்ரீவன், “உடன் பிறந்த அண்ணனுக்கே துரோகம் இழைத்துவிட்டு வந்தவனை ஏற்றுக் கொள்ளவே கூடாது!” என்றான்.இறுதியாக அனுமனின் முகத்தைப் பார்த்தான் ராமன். “நான் இலங்கைக்குச் சென்றிருந்த போது ராவணன் என்னைக் கொல்ல நினைத்தான்.
தூதுவனைக் கொல்லக் கூடாது என்று சொல்லி என் உயிரைக் காப்பாற்றியவன் இந்த விபீஷணன். இவன் நல்லவன். எனவே இவனை ஏற்றுக் கொள்ளலாம்!” என்றார் அனுமன்.“என் உள்ளத்தில் உள்ளதை உங்களில் ஒருவர் கூட உணரவில்லையே!” என வருந்தினான் ராமன். “அனுமனே! நீ அவன் நல்லவன் என்பதால் ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாய். வானரர்களே! அவன் தீயவன் என்பதால் ஏற்கலாகாது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் என் கருத்து யாதெனில் வந்திருப்பவன் நல்லவனாக இருந்தாலும் சரி,தீயவனாக இருந்தாலும் சரி, என்னைத் தேடி வந்தவனை ரட்சித்தே தீருவேன்!” என்று தன்னுடைய திருவுள்ளத்தை வெளியிட்டான் ராமன்.
“சுக்ரீவா! அவனை உடனே அழைத்து வா! ஒருவேளை ராவணனே விபீஷணனைப் போல மாறு வேடத்தில் வந்திருந்தாலும் அதற்காக அவனை அழைக்காமல் வெறுங்கையோடு திரும்பி வராதே! ராவணனே என்னைத் தேடி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்!” என்றும் கூறினான்.விபீஷணன் அழைத்து வரப்பட்டான். அப்போது அவனை நோக்கி ராமன் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. “இவ்வளவு நேரம் உன்னை வெளியே காக்க வைத்தமைக்கு என்னை மன்னித்துவிடு!” என ராமன் வேண்டுவது போன்ற தோரணை அந்தப் பார்வையில் வெளிப்பட்டது.சில காலம் கழித்து, லக்ஷ்மணனும் விபீஷணனும் பேசிக் கொண்டிருந்த போது, லட்சுமணன், “விபீஷணா! ராமன் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் திரும்ப இலங்கைக்கே அனுப்பியிருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டான்.
“ராமன் என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என நான் நம்பினேன்!” என்றான் விபீஷணன்.“எதை வைத்து அப்படி நம்பினாய்?” என்று கேட்டான் லக்ஷ்மணன்.“உனக்குத் தமிழ் தெரியுமா?” என்று கேட்டான் விபீஷணன்.“ஆம்! தெரியுமே! நாங்கள் வனவாசத்தில் அகஸ்தியரின் ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் அவரிடம் இருந்து தமிழ் கற்றோம்!” என்றான் லட்சுமணன்.“தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘யானை வாயில் நுழைந்த கரும்பு போல’ என்று. யானையின் வாயை ஒரு கரும்பு அடைந்து விட்டால் அது வெளியே வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அதைத் தின்று முடிக்காமல் யானை விடாது. இங்கே ராமன் தான் யானை. பக்தர்கள் கரும்புபோல.
கரும்பைக் கண்டால் யானை மகிழ்ச்சியடைந்து அதை இறுகப் பிடித்துக் கொள்வது போலத் தன் வாயிலைத் தேடிவந்த பக்தர்களை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டு காப்பாற்றியே தீருவான் ராமன்! இந்த ரகசியம் எனக்குத் தெரிந்ததால் தான் நம்பிக்கையோடு சரண்புகுந்தேன்,” என்றான் விபீஷணன்.இவ்வாறு தன்னைச் சரண்புகுந்த அடியவர்களை யானை கரும்பைப் பிடித்துக்கொள்வது போல இறுகப் பிடித்துக் கொண்டு கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘வ்யால:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 93-வது திருநாமம்.“வ்யாலாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் நல்ல பிரார்த்தனைகள் அனைத்தையும் திருமால் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.

