90 ப்ரஜாபவாய நமஹ
(Prajaabhavaaya namaha)
பீமனும் சகதேவனும் உரையாடிக் கொண்டிருக்கையில், சகதேவன், ஒரு சமஸ்கிருதப் பழமொழியைச் சொன்னான்: “பிது: புத்ரப்ரியாத் பரம் நாஸ்தி”“இதற்கென்ன பொருள்?” என்று வினவினான் பீமன். “தந்தை மகனிடம் வைத்திருக்கும் அன்பைவிட உயர்ந்தது உலகில் வேறேதும் இல்லை!” என்று பொருள் என்றான் சகதேவன்.“தாய்ப்பாசம் அதைவிட உயர்ந்ததில்லையா?” என்று கேட்டான் பீமன். “தாயின் பாசம் மிகவும் உயர்ந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த தெய்வீகமான அன்பில் கூட என் மகன் எனக்கு மட்டுமே சொந்தம் என்ற மீயுடைமைக்கும் (possessiveness), அன்பின் மிகுதியால் மகனின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் இடமுண்டு. ஆனால் அவற்றுக்கு இடமளிக்காமல் மகன் வாழ்வில் முன்னேற்றம் அடைவதைக் காண வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடும் அக்கறையோடும் கூடியது தந்தையின் பாசம்!” என்றான் சகதேவன்.மேலும், “பீமா! ஒன்று தெரிந்துகொள்! எந்த மகனும் தன் தந்தையை வெறுக்கவே மாட்டான். ஒருவேளை ஒரு மகன் தன் தந்தையை வெறுக்கிறான் என்றால், அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இருக்க வேண்டும். அல்லது மனநோயாளியாக இருக்க வேண்டும்!” என்றான் சகதேவன்.
இதைக் கேட்ட பீமன், “அப்படியானால் கம்சன் தன் தந்தையான உக்ரசேனரை வெறுத்து ஒதுக்கிச் சிறையில்கூட வைத்தானே! அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டவனா? அல்லது மன நோயாளியா?” என்று கேட்டான்.சகதேவன், “இதற்கான விடையைக் கண்ணனிடமே கேட்டுப் பெறுவோம்!” என்றான். இருவரும் கண்ணனை அணுகி இக்கேள்வியை முன்வைத்தார்கள்.அதற்குக் கண்ணன், “உக்ரசேனர் கம்சனின் தந்தையே இல்லை. உக்ரசேனரின் மனைவியான பத்மாவதி, தனது அந்தப்புர மாடத்தில் உலாவிக் கொண்டிருந்த போது, திரமிடன் என்ற கந்தர்வன் அவ்வழியே வந்தான். பத்மாவதியின் அழகில் மயங்கினான். உக்ரசேனரைப் போல வடிவம் எடுத்து அவளை நெருங்கி அவளுடன் ஆனந்தமாக இருந்தான். பின் தன்னுடைய சுயரூபத்துக்கு மாறி, உனக்குப் பலசாலியான ஒரு குழந்தை பிறக்கும் என்றான். வந்தவன் தன் கணவனல்ல, கந்தர்வன் என்று உணர்ந்த பத்மாவதி அவனைத் தாக்க முற்பட்டாள். கோபம் கொண்ட அவன், “நான் உன்னோடு உறவாடும் போதே நான் உன் கணவன் அல்ல என்று நீ புரிந்து கொண்டதை நான் அறிவேன். ஆனால் அப்போது ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு இப்போது நாடகம் ஆடுகிறாயா? உனக்குப் பிறக்கப் போகிற குழந்தை உங்கள் குலத்தையே அழித்து விடும்!” என்று சபித்துவிட்டுச் சென்றான்.
அந்தக் குழந்தை தான் கம்சன். தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை வெளியே சொல்லிக்கொள்ள முடியாமல், தன் வேதனைகளை எல்லாம் மனத்தினுள்ளே அடக்கிக்கொண்டு வாழ்ந்து வந்தாள் பத்மாவதி. உக்ரசேனர் உட்பட ஊரார் யாருக்கும் கம்சன் கந்தர்வனின் மகன் என்பது தெரியாது. அதனால்தான் கம்சன் தன் மகன் என்று அவர் நம்பிக் கொண்டிருந்தபோதும், உக்ரசேனருக்கு அவன்மேல் இயற்கையான அன்போ அக்கறையோ உண்டாகவில்லை. கம்சனும் அவரை வெறுத்தான்!” என விடையளித்தான்.சகதேவனும் பீமனும் தங்கள் அரண்மனைக்குத் திரும்புகையில் பீமன், “எனக்கு மற்றோர் ஐயம் இப்போது எழுந்துவிட்டது. கண்ணன் உலகுக்கே தந்தையாக விளங்குகிறான். அந்தக் கண்ணனையே கம்சன் வெறுத்தானே. அது எப்படி சாத்தியம்?” என்றான்.புன்னகைத்தான் சகதேவன். “பீமா! உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். கம்சன் கண்ணனை வெறுக்கவே இல்லை. கண்ணனால் தன் உயிருக்கு ஆபத்து என அசரீரி மூலம்அறிந்தவாறே ஒருபுறம் கண்ணனை அழிக்கப் பார்த்தான் கம்சன். ஆனால் மறுபுறம், கம்சன் தன் படுக்கை அறையில் ஒரு பெட்டி வைத்திருந்தான். அந்தப் பெட்டிக்குள் அழகான கிருஷ்ண விக்கிரகம் ஒன்றை வைத்திருந்தான். எப்போதும் அதை ஆசையுடன் பார்த்துக்கொண்டேயிருப்பான்.
இப்படி உள்ளூற அவனுக்குப் பக்தி இருந்தாலும், வெளி உலகில் கண்ணனுக்கு எதிரானவன் என்ற பிம்பத்தைத் தானே கட்டமைத்துக்கொண்டுவிட்டதால், தன் பக்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்ணனை வெறுப்பது போல நடித்தானே தவிர, உலகனைத்துக்கும் தந்தையான கண்ணனை யாராலும் எந்நிலையிலும் மனதார வெறுப்பது என்பது முடியவே முடியாது. கண்ணனை வெளிப்படையாக விரும்புபவர்கள், கண்ணனை உள்ளூற விரும்புபவர்கள் என இருவகையினர் தான் உண்டே தவிர கண்ணனை வெறுப்பவர் என உலகில் யாருமே இல்லை!” என்றான் சகதேவன்.“கண்ணா! கருமை நிறக்கண்ணா! உன்னைக் காணாத கண் இல்லையே!உன்னை மறுப்பார் இல்லை! கண்டு வெறுப்பார் இல்லை!”என்ற பாடல் வரிகள் இப்போது உங்கள் காதுகளில் ஒலிக்கும் என நம்புகிறேன்.உலகிலுள்ள அனைத்துயிர்களுக்கும் தானே இருப்பிடமாக இருந்து, தன்னுள் அனைவரையும் தாங்கிக் கொண்டு, ஒரு தந்தை தன் மகனின் முன்னேற்றத்தில் அக்கறைகொள்வது போல, நம்மையும் முன்னேற்றிப் பக்குவப் படுத்துகிறார் திருமால். நமக்கு ஆதாரமாக இருந்து நம்மைத் தாங்கும் அவரை மனதார வெறுப்பது என்பது முடியாத ஒன்று.தன் பிரஜைகளுக்கு ஏற்ற இருப்பிடமாகத் திருமால் இருப்பதால் ‘ப்ரஜாபவ:’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 90-வது திருநாமத்தில் வியாசர் திருமாலை அழைக்கிறார். “ப்ரஜாபவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல இருப்பிடம் கிடைக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

