முத்துப்பேட்டை, நவ. 6: தெலங்கானாவிலிருந்து ஆன்மிக பயணமாக பக்தர்கள் வந்த வேன் முத்துப்பேட்டை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 12 பேர் உயிர் தப்பினர்.
தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டம், சிந்திரியலயா பகுதியை சேர்ந்த கொண்டல் (50) என்பவர் தலைமையில் ஒரு டெம்போ வேனில் 10 பெண்கள் உட்பட 12 பேர் ஆன்மிக பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டனர். அதே பகுதியை சேர்ந்த சீதாராமன் ரெட்டி மகன் கோபி ரெட்டி (36) இந்த வேனை ஓட்டி வந்தார். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வந்தனர்.
பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, ரயில்வே மேம்பாலம் பகுதியில் வந்தபோது, வேனில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறியதால், டிரைவர் கோபி ரெட்டி வேனை நிறுத்தினார். அனைவரும் வேனில் இருந்து இறங்கிய நிலையில், வேனுக்கான ‘ஹேண்ட் பிரேக்’ போடாததால், வேன் பின்னோக்கி பாலத்திலிருந்து இறக்கத்தில் வேகமாக வந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக வேனில் யாரும் இல்லாததாலும், அந்த வழியே வேறு எந்த வாகனமும் வராததாலும், அனைவரும் உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பசீர் தலைமையிலான போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.