தினமும் என் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது வழக்கம். பூஜை முடிந்தவுடன் தீபத்தை கையால் அணைத்து விடலாமா அல்லது தானாக அணைய விடலாமா? ஆளாளுக்கு ஒரு வழி சொல்கிறார்களே, எது சரி?
– விஜயலட்சுமி கண்ணன், திருக்கருகாவூர்.
விளக்கேற்றி பூஜை செய்தபிறகு, கடவுளுக்கு நிவேதனம் செய்வீர்கள் இல்லையா, அதில் ஒரு துளியை தெய்வ அம்சமாக விளங்கும் அந்த விளக்குக்கும் படைக்கும் சம்பிரதாயத்தையும் மேற்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். தினசரி நிவேதனப் பொருள் எதுவாகவும் இருக்கலாம். சிறுதுளி பால், கற்கண்டு, திராட்சை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வாறு நிவேதனம் செய்து முடித்தபிறகு, விளக்குக்கும் சிறிது காண்பித்துவிட்டால், விளக்கும் சாந்தியடைந்துவிடும்.
ஒரு துளி கிள்ளி விளக்குக்குள் போடவும் செய்யலாம். பிறகு, அது தானாக அணையும்படி விட்டுவிடலாம். ஒருவேளை எலித் தொந்தரவு அல்லது அந்தத் தீயால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று அச்சம் எழுமானால், விளக்குக்கு நிவேதனம் செய்து, அதை நமஸ்கரித்த பிறகு, ஒரு பூவால் தீபத்தை ஒற்றி அணைத்துவிடலாம். ஆனால், எப்போதும் பூஜையறையில் ஏற்றப்படும் தீபத்தை வாயால் ஊதி அணைக்காதீர்கள்.
வீட்டிற்குள் பஜனை செய்யலாமா? வீட்டிற்குள் ஜால்ரா தட்டக்கூடாது என்கிறார்களே?
– தி. சுந்தரராஜன், சின்ன காஞ்சிபுரம்.
வீட்டுக்குள் சண்டைதான் போட்டுக் கொள்ளக்கூடாது. அந்தச் சண்டை சத்தம் வெளியே கேட்கக் கூடாது. இதில் வேடிக்கை என்னவென்றால், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், பெரும்பாலும் பக்கத்து வீட்டு சண்டையைக் கேட்டு ரசிப்பார்கள்; ஆனால், அதே வீட்டிலிருந்து ஏதாவது பஜனை சத்தம் கேட்டால் சண்டைக்கு வருவார்கள்! இது இருக்கட்டும்.
வீட்டினுள் தாராளமாக பஜனை செய்யலாம். ஜால்ரா சத்தம் மட்டுமல்ல… மேளம், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளையும் பயன்படுத்தலாம். ஒரே ஒரு கண்டிஷன், அது அக்கம் பக்கத்தவர்களுக்கு எரிச்சல் தராமல் இருக்க வேண்டும். பொதுவாகவே, வீட்டிற்குள் இனிமையான ஒலி கேட்பது, வீட்டினுள் இருக்கக்கூடிய நல்தேவதைகளை சந்தோஷப்படுத்தும். ஜால்ரா, மணி, மேள ஒலிகள் துர்தேவதைகளை வீட்டை விட்டு விரட்டும். திருஷ்டிகளைத் துரத்தும். பஜனையை மாலை நேரங்களில் குறிப்பாக 5 முதல் 7 மணிக்குள்ளாக வைத்துக் கொள்வது வசதியானதாக இருக்கும்.
இதில் இன்னொரு நற்செயலையும் மேற்கொள்ளலாம். அதாவது பக்கத்து வீட்டுக்காரர்களையும் உங்கள் வீட்டு பஜனையில் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பிரசாதம் வழங்கலாம். அன்பையும் ஆன்மிகத்தையும் பகிர்ந்துகொள்ளலாம். ‘நாளைக்கு எங்க வீட்ல பஜனை வைத்திருக்கிறோம், நீங்கள் அவசியம் வந்து கலந்துக்கணும்’ என்று அவர்களே சொல்லும் அளவுக்கு நெருங்க வேண்டும்.
கடவுள் ஒருவரே என்கிறார்கள். ஆனால், பல முகங்களில் கடவுள் வழிபாடு எதற்கு? இந்து மதத்தை பொறுத்தவரைதான் எத்தனை கடவுள்கள்?
– சி.கே.விஸ்வநாதன், கோபிசெட்டிப்பாளையம்.
விளையாடுவது என்பது குழந்தையின் இயல்பு. அந்த விளையாட்டை ஊக்கப்படுத்தி குழந்தையின் ஆரோக்கியத்தை, மனவலிமையை வளர்ப்பதற்காக பலவகையான பொம்மைகளை வாங்கித் தருகிறோம். அவ்வாறு நாம் கொடுக்கும் பொம்மைகளையெல்லாம் வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை விளையாடுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட பொம்மையுடன் விளையாடும்போது, பிற பொம்மைகளை நாம் கொடுத்தால், அந்த பொம்மைகளை அது விலக்கி, ஒதுக்கி விடுகிறது. அப்படியானால் அந்தக் குழந்தைக்கு அந்த பொம்மைகள் மீது விருப்பம் இல்லை என்றா அர்த்தம்? இல்லை, தான் ஒரு குறிப்பிட்ட பொம்மையுடன் விளையாடும்போது அதன் மீதுதான் குழந்தைக்கு அதிக நாட்டம் இருக்கிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகோ அல்லது அடுத்த நாளோ, வேறு பொம்மைகளுடன் விளையாட அந்தக் குழந்தை முற்படும். அப்படியானால் முதலில் விளையாடிய பொம்மையை வெறுக்கிறது என்றா அர்த்தம்? இல்லை. குழந்தையின் நோக்கம், நம் விருப்பம் எல்லாமே அது விளையாட வேண்டும் என்பதுதான். அதற்கு பலவகைப்பட்ட வழிகள் இருக்கின்றன. அதுபோலதான் பக்தியும், பக்தி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு பலவகை கடவுள் உருவங்கள் வழிகளாக அமைகின்றன. நோக்கத்தை அடைய ஒரு வழியில்தான் போக வேண்டும் என்பதில்லை. இது இந்து மதம் நமக்கு அளிக்கும் சுதந்திரம்.
தொகுப்பு: அருள்ஜோதி