மதுராந்தகம்: சுற்றுலா தலமான மாமல்லபுரத்தையும், ஆன்மிக தலமான மேல் மருவத்தூரையும் இணைக்கு வகையில், சோத்துப்பாக்கம், சித்தாமூர், பெரியவெண்மணி, அரியனூர், பவுஞ்சூர், கூவத்தூர், கல்பாக்கம் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் ஆன்மிக பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் பல உள்ளன.
அதில், மிக முக்கிய ஆன்மிக தலமான மேல்மருவத்தூர், சுற்றுலா தலமான மாமல்லபுரம் உலகளாவிய புகழ் பெற்றுள்ளன. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்கள், மாவட்ட மக்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவியும் இடங்களில் இவை மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பல்வேறு இடங்களில் இருந்து மேல் மருவத்தூருக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்து கொண்டு, மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட ஐந்து ரதங்களை சுற்றி பார்க்க செல்கின்றனர்.
அதற்காக, மாமல்லபுரம் செல்ல மதுராந்தகம் சென்று அங்கிருந்து கூவத்தூர் வழியாக செல்ல வேண்டும் அல்லது இடைக்கழிநாடு எல்லையம்மன் கோயில் சென்று மாமல்லபுரம் செல்ல வேண்டும். மேல்மருவத்தூரில் இருந்து இந்த இரண்டு வழியாக பேருந்து பிடித்து மாமல்லபுரம் செல்ல வேண்டும். இதனால், காலவிரயமும், பண விரயமும் ஏற்படுகிறது என பயணிகள், பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மேல் மருவத்தூரில் இருந்து சோத்துப்பாக்கம், சித்தாமூர், ஓணம்பாக்கம், பெரியவெண்மணி, அரியனூர், திருவாத்தூர், பவுஞ்சூர், கூவத்தூர் அல்லது காத்தான்கடை, கல்பாக்கம் வழியாக மாமல்லபுரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும்.
அதேபோல், மாமல்லபுரத்தில் இருந்தும் இதே வழித்தடத்தில் மேல் மருவத்தூருக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர். எனவே, மதுராந்தகம் பணிமனையில் இருந்தும், கல்பாக்கம் பேருந்து பணிமனையில் இருந்தும் அரசு பேருந்தகள் இயக்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட பணிமனைகளில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
* நடந்து செல்லும் மாணவர்கள்
அரியனூர், நெசப்பாக்கம் கிராமங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பவுஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி, தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால், சைக்கிள் மற்றும் நடந்தும் செல்கின்றனர். எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் பேருந்து இயக்கினால், அரியனூர், நெசப்பாக்கம் மற்றும் இந்த கிராமங்களை சுற்றியுள்ள பள்ளி மாணவர்களும் பயன்பெறுவர்கள்.
* சென்னை செல்வோருக்கு வரபிரசாதம்
ஓணம்பாக்கம், பெரியவெண்மணி, அரியனூர், நேசப்பாக்கம், திருவாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராம மக்கள் சென்னைக்கு செல்ல மதுராந்தகம் சென்று சென்னைக்கு செல்கின்றனர். இதனால், பேக்குரவத்து நெரிசலில் சிக்கி சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுமார் 4 நேரத்திற்கு மேலாகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசல் என்றால் நேரம் கூடுதாலகவும் ஆகிறது. ஆனால், மேற்கண்ட வழித்தடத்தில் சென்று மாமல்லபுரம் அல்லது கடற்கரை சாலை வழியாக சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் சென்று விடலாம். இந்த வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கினால், கிராமமக்கள் வேலைக்கு செல்வோருக்கு வரபிரசாதமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
* லாரிகளில் செல்லும் பொதுமக்கள்
மேல் மருவத்தூர்- மாமல்லபுரம் வழித்தடத்தில் பேருந்து இயக்கினால் மாமல்லபுரம், கல்பாக்கம், சென்னை உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைக்கு சென்று வர வசதியாக இருக்கும். இந்த வழித்தடத்தில் பேருந்து இல்லாததால் ஆட்டோ, இருசக்கர வாகனம், அந்த வழியாக செல்லும் கல்குவாரி லாரிகளில் பவுஞ்சூர் சென்று, அங்கிருந்து கூவத்தூருக்கு பேருந்து, ஷேர் ஆட்டோவில் சென்று அவர்கள் செல்லக்கூடிய பகுதிகளுக்கு சென்று மாலை மற்றும் இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர். எனவே, மேற்கண்ட வழித்தடத்தில் பேருந்து இயக்கினால் அப்பகுதி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
* பயணிகள், பக்தர்களுக்கு வசதி
ஆன்மிக தலமான மேல்மருவத்தூரில் இருந்து சேத்துப்பாக்கம், சித்தாமூர், ஓணம்பாக்கம்,பெரியவெண்மணி, அரியனூர், நேசப்பாக்கம், திருவாத்தூர், பவுஞ்சூர், கூவத்தூர், வழியாக சுற்றுலா தலமான மாமல்லபுரம் வரை பேருந்து சேவை தொடங்கினால், சுற்றுலா பயணிகள், ஆன்மிக பக்தர்கள் பயன்பெறுவார்கள். பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து மேல்மருவத்தூர் வரும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் செல்ல சுலபமாக இருக்கும். அதேபோல், மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் மேல்மருவத்தூர் செல்ல வசதியாகவம், மிக எளிதாகவும் பயணமாக அமையும்.
* நல்ல வசூல் கிடைக்க வாய்ப்பு
மேல்மருவத்தூர் இருந்து சித்தாமூர், அரியனூர், பவுஞ்சூர், கூவத்தூர், கல்பாக்கம் வழியாக மாமல்லபுரம் வரை இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கினால், பொதுமக்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என நான்கு தரப்பினரும் பயனடைவார்கள். மேலும், இந்த வழித்தடத்தில் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் அரசு பேருந்து இயக்கினால் நல்ல வசூல் கிடைக்க என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
* சோதனை ஓட்டம் தொடங்கலாம்
மேல்மருவத்தூர் – மாமல்லபுரம் வரையிலான மேற்கண்ட வழியாக பேருந்து இயக்க அரசு முன் வேண்டும். இது ஒரு சுற்றுலா தலம், ஆன்மீக தலத்தை இணைக்கும் தலம் என்பதால் சோதனை ஓட்டம் தொடங்கி பார்க்கலாம். இதற்கு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிளுக்கு தெரிவித்து பேருந்து வசதி ஏற்படுத்தி ஒரு பரீட்சார்ந்த முறையில் சோதனை ஓட்டம் விட்டு பார்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.