சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் நான்காம் கட்டப் பயணம் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலிலிருந்து 07.08.2024 அன்று தொடங்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் இராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக கடந்த இரண்டாண்டுகளில் 500 மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், கட்டணமில்லாமல் ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முதற்கட்டப் பயணம் சென்னை, கந்தக்கோட்டத்திலிருந்தும், இரண்டாம் கட்டப் பயணம் பழநியிலிருந்தும், மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரிலிருந்தும் புறப்பட்டன. இந்த ஆன்மிகப் பயணத்தில் இதுவரை 607 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சுவாமிமலையிலிருந்து புறப்படப்பட உள்ளது. இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர். இந்த நான்காம் கட்டப் பயணம் சுவாமிமலையில் தொடங்கி திருத்தணி, பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, ஆகியவற்றிற்கு சென்று திருச்செந்தூரில் நிறைவடைகிறது என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.