பட்டம் பெற்றவர்கள், ஐடி பணியில் இருப்பவர்கள் என பல தரப்பினரும் விவசாயம் பக்கம் திரும்பும் காலம் இது. மன அழுத்தம் இல்லாமல், நானே ராஜா நானே மந்திரி என வாழலாம். நாம் உற்பத்தி செய்த பொருளை நாமே பயன்படுத்தலாம். விற்பனை செய்து வருமானம் பார்க்கலாம் என நினைத்து விவசாயத்திற்கு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்ற இளைஞர் பிசிஏ படித்தபோதும் தங்களின் முன்னோர் வழியில் விவசாயத்தையே முழு நேர தொழிலாக தேர்ந்தெடுத்து இருக்கிறார். தனது நிலத்தில் கீரை, காய்கறி என தொடர்ச்சியாக பயிரிட்டு வரும் நந்தகுமார் அதை முறையாக மார்க்கெட்டிங்கும் செய்து விடுகிறார். ஒரு காலைப்பொழுதில் அவரை சந்தித்தோம்.
“எனக்கு விவரம் தெரிந்து மூன்று தலைமுறைகளாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். தாத்தா, அப்பா காலத்தில் நெல் உள்ளிட்ட பல வகையான தானியங்களை சாகுபடி செய்தார்கள். நான் இப்போது கீரை, காய்கறிகளை பயிரிடுகிறேன். பிசிஏ படித்திருக்கிறேன். இருந்தபோதும் எனக்கு வெளியே வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை. சிறுவயதில் இருந்தே அப்பாவுக்கு துணையாக வயலில் வேலை செய்ததாலோ என்னவோ எனக்கு விவசாயம்தான் பிடித்திருக்கிறது. அதனால் வேலைக்குச் செல்லாமல் அப்பாவுக்கு துணையாக விவசாயத்தையே செய்து வந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளாக நானே தனியாக விவசாயம் செய்து வருகிறேன்.
எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கீரை மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்கிறேன். கீரையைப் பொறுத்தவரை சுழற்சி முறைதான். அதாவது கீரையை இன்று விதைத்தால் 25 முதல் 30 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும் என்பதால் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்த பத்து செண்டுகளில் கீரை விதைப்பேன். அதில் கரிசலாங்கண்ணி, பச்சை பொன்னாங்கண்ணி, வெள்ளை மற்றும் சிவப்பு காசினிக்கீரை பயிரிடுகிறேன். அடுத்த 10 சென்ட் நிலத்தில் பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை என பல வகையான கீரைகளை சாகுபடி செய்கிறேன். கீரை சாகுபடியைப் பொறுத்தவரை இரண்டு விசயம் முக்கியம். ஒன்று நிலத்தை நன்கு உழுது அடி உரம் கொடுத்து காயப்போட்டு கீரை விதைகளை தூவுவது. மற்றொன்று விதைகளை விதைக்கும்போது நிலத்தில் நீர் பாய்ச்சாமல் தவிர்ப்பது. அப்படி பாய்ச்சினால், நீரில் விதைகள் மிதந்து மேலே வந்துவிடும். விதைத்த மூன்றாம் நாளில் கீரைகள் வளரத் தொடங்கி விடும்.
ரசாயன முறையாக இருந்தாலும், இயற்கை விவசாயமாக இருந்தாலும் கீரை விதைத்து ஒரு வாரத்தில் முதல் உரமும், கீரை அறுவடைக்கு ஒரு வாரம் முன்பு மற்றொரு உரமும் கொடுக்க வேண்டும். எனது நிலத்தில் தற்போது 6 வகையான கீரைகள் இருக்கிறது. ஒவ்வொரு கீரையிலும் தினமும் 40 கட்டுகள் வீதம் தினமும் அறுவடை செய்கிறேன். கீரையைத் தொடர்ந்து அவ்வப்போது காய்கறிகளையும் சாகுபடி செய்கிறேன். சுரைக்காய், வெண்டை, கத்தரி என காய்கறிகளை தினமும் அறுவடை செய்கிறேன். ஒரு நாளைக்கு கீரை எவ்வளவு அறுவடை செய்கிறோமோ அதேபோல காய்கறிகளையும் அறுவடை செய்து விற்பனை செய்து விடுவோம். வியாபாரிகள் எங்கள் நிலத்திற்கே வந்து கீரை, காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள். அப்படி வரத் தவறினாலும் கூட நானே திருவள்ளூரில் உள்ள மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து விடுவேன்.
எங்கள் பகுதியில் குறைந்த அளவிலான நிலத்தில் எந்த விதமான பயிர்களை விளைவிக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்கிறேன். விவசாயத்தில் ரூ.2 ஆயிரம் செலவு செய்தால் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் பார்க் கலாம். அப்படித்தான் இதுவரை நான் வருமானம் பார்த்து வருகிறேன். கீரை, காய்கறியைத் தொடர்ந்து நெல்லும் சாகுபடி செய்தேன். ஆனால் எங்கள் பகுதியில் நெல் விளைச்சல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதால் தற்போது இந்தப் பயிர்களையே தொடர்கிறேன். மீடியமான வருமானம் என்றாலும் இது எனக்கு நிலையான வருமானம். மழைக்காலத்தைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் என்னால் கீரை அறுவடை செய்ய முடியும். ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றால் என்ன வருமானம் கிடைக்குமோ, அதனை எனது நிலத்தில் இருந்தே பெறுகிறேன். வருங்காலத்தில் சாகுபடி பரப்பையும் வருமானத்தையும் அதிகரிக்க திட்டமிட்டு வருகிறேன்’’ என நம்பிக்கை பொங்க பேசுகிறார்.
தொடர்புக்கு:
நந்தகுமார்:
95008 45327.
பலவகையான கீரைகளை சாகுபடி செய்து வரும் நந்தகுமார் தற்போது முருங்கை சாகுபடியையும் தொடங்கி இருக்கிறார். மற்ற கீரைகளை சாகுபடி செய்து ஒருமுறை விதைப்பு ஒருமுறை அறுப்பு என்ற மெத்தடை ஃபாலோ செய்து வரும் நிலையில் முருங்கையை ஒருமுறை விதைத்தால் 15 ஆண்டுகள் வரை பயனடையலாம் என்கிறார்.