Saturday, December 9, 2023
Home » முடத்தை அகற்றும் முடக்கற்றான் கீரை!

முடத்தை அகற்றும் முடக்கற்றான் கீரை!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

இந்தியா, சீனா, இலங்கை மற்றும் எகிப்து போன்ற நாடுகள் கீரைகளை மூலிகை தாவரமாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறைப்படுத்தியுள்ளன. காரணம் இக்கீரைகள் தான்கொண்டுள்ள மூலக்கூறுகளின் காரணமாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த கீரைகளில் ஒன்றுதான் முடக்கற்றான் கீரை.
முடக்கற்றான் கீரைக்கு முடக்கற்றான், முடர்குற்றான், முடக்கத்தான், முடக்கு தீர்த்தான் மற்றும் உழிஞை எனப் பல பெயர்கள் உண்டு. குறிப்பாக, கிராமப் பகுதிகளில் முடக்கற்றான் கீரையில் காணப்படும் காயின் வடிவத்தை பொறுத்தும், பண்பின் காரணமாகவும் பட்டாசு செடி எனவும் பலூன் செடி எனவும் அழைக்கப்படுகின்றது.

புகைப்பழக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என அனைவரும் நன்கு அறிந்ததே. அதற்கு இணையான தீங்கு விளைவிக்கக் கூடிய மற்றொரு பழக்கம் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதும். இதனை புது புகைப்பழக்கம் என அடைமொழியில் கூறுவதும் உண்டு. ஏனெனில் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் தன் பணியில் கொண்டிருக்கும் ஆர்வத்தின் காரணமாக இத்தகைய சிக்கலுக்கு உள்ளாகிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இருப்பினும் தனது உடல் நலனில் சற்று கவனம் செலுத்தி குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனெனில் இன்று இளம் வயதினர் பலர் மூட்டுவலி, முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகி அவதிப்படுகிறார்கள். குறிப்பாக ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து உடல் நலத்தை காக்க முடக்கற்றான் கீரையை வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

முடங்கிய நரம்புகளின் செயல்களை மேம்படுத்துவதன் காரணமாக இக்கீரைக்கு முடக்கற்றான் கீரை எனப் பெயர் வந்ததாக தரவுகள் கூறுகின்றன. முடக்கற்றான் கீரை ஒரு வகையான ஏறு கொடி வகையைச் சார்ந்த தாவரமாகும். இது கிராமப்புறங்களில் வேலி ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் எளிதாக கிடைக்கப்பெறும் தாவர வகையாகும். இதன் இலைகள் முக்கோண வடிவம் கொண்டதாகவும், பிளவுபட்ட அமைப்பிலும் காணப்படும். வெண்ணிற பூக்களை கொண்டிருக்கும். நீளமான தண்டினை உடையது. இதன் இலை, தண்டு, வேர் மற்றும் காய், பூ என முழுத்தாவரமே மருத்துவ குணம் கொண்டவை.

முடக்கற்றான் கீரையின் தாவரவியல் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹாலிகாபம்உலகளவில் பெரும்பாலான இடங்களில் இக்கீரை காணப்பட்டாலும் குறிப்பாக, ஆப்ரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக கிடைக்கக் கூடியது. இக்கீரை கசப்பு தன்மையுடயது. இலைகள் மனம் கொண்டவை. மழைக்காலங்களில் அதிகளவு கிடைக்கப் பெறும். நல்ல வளமான மண் கொண்ட பகுதிகளில் செழிப்புடன் வளரக்கூடியது. இது 10 செ.மீ. உயரத்திற்கு மேலாக வளரக்கூடிய கீரையாகும்.

முடக்கற்றான் கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்

பீட்டா சைட்டோஸ்டிரால், அபிஜெனின், அல்கலாய்டுகள், பிளேவோனாய்டுகள், குயிர்சிடின், சாப்போனின், கேலிகோசின், குமாரிக் அமிலம், பீனாலிக் அமிலம் உள்ளிட்ட பல மூலக்கூறுகள் இக்கீரையில் காணப்படுகின்றன.

முடக்கற்றான் கீரையின் மருத்துவ குணங்கள்

முடக்கற்றான் கீரை முக்கியமாக முடக்குவாதம் மற்றும் மூட்டுவலியை தடுக்க பயன்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயது முதிர்வின் காரணமாக பெரும்பாலானோர் நரம்பு செல்களின் பாதிப்பின் காரணமாக முடக்குவாதம் மற்றும் மூட்டுவலி பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இன்றைய தலைமுறையினரும் எளிதாக இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டு துன்புறுகிறார்கள். ஆகையால் முடக்கற்றான் கீரையை உணவில் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் கவுட் நோய் ஏற்படுகிறது. இதனால் விரைவில் சிறுநீரகம் செயழிலக்க நேரிடும். மேலும் மூட்டுகளில் வீக்கம், வலி போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்கவும் முடக்கற்றான் கீரை பயன்படுகிறது. பெரும்பாலும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், கீரைகள் மற்றும் பச்சைகாய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்வதினால் வயிற்றுப்புண் வருவதை தவிர்க்க முடியும். அந்த வகையில் முடக்கற்றான் கீரையும் வயிற்றுப்புண் பிரச்னையை சீராக்க உதவுகிறது.

மேலும் முடிஉதிர்தல் பிரச்னை, தோல் சம்பந்தமான நோய்கள் போன்றவற்றிற்கும் தீர்வாக விளங்குகிறது. முடக்கற்றான் கீரையை அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வர சரும பிரச்னை தவிர கொசுக்கடியிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் என தரவுகள் கூறுகின்றன. இது மட்டுமில்லாமல் முடக்கற்றான் கீரை காய்ச்சல் மருந்தாகவும், உடல் சோர்வினை தவிர்க்கவும் கிராமப்புறங்களில் பயன்படுத்தும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நோய்களை குணப்படுத்த முடக்கற்றான் கீரையால் முடியும் என ஆய்வுத்தரவுகளும் உறுதிப்படுத்துவதாக உள்ளன.

இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி, ஏ, கே காரணமாக இக்கீரையினால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கவும், உடல் வலிமையை மேம்படுத்தவும் கூடும். மேலும் நவீன ஆராய்ச்சிகளின் வழி இக்கீரைக்கு புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையும் உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், முடக்கற்றான் கீரை வாயு தொல்லைக்கு அருமருந்தாக பயன்படுகிறது எனவும் கூறப்படுகிறது. முடக்கற்றான் கீரைகளில் காணப்படும் மருத்துவப் பண்புகளை பதார்த்த குணப்பாடம் கீழ்கண்டவாறு கூறியுள்ளது.

முடக்கற்றான் குணம்
சூலைப்பிடிப்பு, சொறிசிரங்கு
வன்கரப்பான்
காலைத் தொடுவளியுங்
கனமலமுஞ்- சாலக்
கடக்கத்தா னோடிவிடுங்
காகுனியை விட்டு
முடக்கத்தான் றன்னை மொழி.

ஆகையால் முடக்கற்றான் கீரையை தோசைமாவுடன் கலந்து தோசையாகவும் ரசம் மற்றும் சூப் போன்றவற்றை செய்து குறைந்தது மாதம் இருமுறையாவது உட்கொள்வது சிறந்ததாகும். இருப்பினும் பழக்கத்தில் இல்லாத கீரைகளை முதன்முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது குறைந்த அளவை உட்கொள்ள வேண்டும். பின்னர் படிப்படியாக நார்மலான அளவுக்கு சேர்த்துக் கொள்ளலாம். வீட்டில் பெரியவர்கள் இருந்தால், அவர்களிடம் ஆலோசனை பெற்றும் செய்து உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?