ஆனைமலை: பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று, ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அமாவாயை முன்னிட்டு ஆழியாற்றின் கரையோரம் பலர், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனை தரிசிக்க ஏற்ற மாதமான ஆடியையொட்டி இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதில் நேற்று, ஆடிப்பெருக்கை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பக்தர்கள், கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடனாக பட்டுப்புடவைகளை அம்மனுக்கு சாத்தினர். காலை முதல் இரவு வரை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து ஆனைமலைக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
சமத்தூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று, ஆடிப்பெருக்கையொட்டி, பெண்கள் பலர் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். அதுபோல், பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோவில், பயாஸ்கோப் வீதி சவுடம்மன் கோவில், மரப்பேட்டை வீதி பிளேக் மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு பத்ரகாளியம்மன் கோவில்களிலும் நேற்று ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேலும், ஆடிப்பெருக்கையொட்டி ஆழியாற்றின் கரையில் ஏராளமானோர் முன்னோருக்கு திதி கொடுத்தும், பெண்கள் பலர் மஞ்சள் கயிறு மாற்றியும் வழிபட்டனர். இதனால் ஆழியாற்றங்கரையில் நேற்று, ஆங்காங்கே கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. சில இடங்களில் தண்ணீர் அதிகளவு சென்றதால், அங்கு திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், அங்கு வந்தவர்கள் மாற்று இடத்திற்கு சென்றனர்.