புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கொறடா உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசு எவ்வித முன்னறிப்பும் இன்றி வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்தது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் எதுவும் முன்பு வௌியிடப்படாத நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல், இந்தியாவின் பெயர் மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வௌியாகின. இதையடுத்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் 75 ஆண்டுகால நாடாளுமன்றத்தின் பயணம் குறித்த விவாதம், 4 மசோதாக்கள் தாக்கல் உள்ளிட்ட அறிவிப்புகளை ஒன்றிய அரசு வௌியிட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கொறடா வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மாநிலங்களவையில் முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்படும். எனவே, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 11 மணியில் இருந்து அவை ஒத்தி வைக்கப்படும் வரை கட்டாயம் பங்கேற்க வேண்டும். அவையில் நடைபெறும் விவாதங்களில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுகளை கட்சி உறுப்பினர்கள் ஆதரிப்பதற்காக அனைவரும் நிச்சயம் பங்கேற்பது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாஜ உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பாஜ கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.