Thursday, April 18, 2024
Home » இந்த வார விசேஷங்கள்

இந்த வார விசேஷங்கள்

by Kalaivani Saravanan

வாசவி ஜெயந்தி
30.4.2023 – ஞாயிறு

சித்திரை மாத வளர்பிறை தசமியை, வாசவி ஜெயந்தியாக கடைப்பிடிக்கின்றனர். பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும், மாங்கல்ய பலம் வேண்டும் என்றும் இந்நாளில் விரதம் இருந்து வாசவியை வேண்டி நலம் பெறுகின்றனர். ஒரு சமயம் ஈசனும் பார்வதியும் கயிலாயத்தில் வீற்றிருந்தனர். நந்தியம் பெருமான், புனித கங்கையில் நீராடுவதற்காக புறப்படத் தயாரானார்.

தனக்குப் பதிலாக சமதி என்ற மகரிஷியிடம் கயிலாயத்தின் காவல் பொறுப்பை ஒப்படைத்தார். யார் வந்தாலும் இறைவனின் அனுமதி பெற்றே உள்ளே அனுமதிக்கும்படியும் கூறிச் சென்றார். சமதி முனிவரும் காவல் பணியை மேற்கொண்டிருந்த பொழுது துர்வாச முனிவர், வந்தார். நந்தி பகவான் கொடுத்த உத்தரவின்படி சமதி மகரிஷி அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

கோபம்கொண்ட துர்வாசர், அவரை பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சமதி மகரிஷி, பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டியாக பிறந்தார். இது இப்படி இருக்க, ஒருநாள் கயிலாயத்தில் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் நடனமாடினர். ஈஸ்வரனின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த நந்தி, ஈசனின் காலில் விழுந்து வணங்கினார்.

அப்போது தன்னை வணங்காமல் அவமதித்துவிட்டதாக நினைத்த பார்வதி தேவி, நந்தியை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தன்னைச் சபித்ததால் பார்வதிமீது கோபம் கொண்ட நந்தி, அவரையும் பூமியில் பிறந்து கன்னியாக வாழ்ந்து அக்னி பிரவேசம் செய்ய வேண்டும் என்று சாபமிட்டார். எல்லாம் ஒரு காரணமாக நடக்கும், ஈஸ்வரன் விளையாட்டுக்கள் தானே! அவர்கள் இருவரும், பெனுகொண்டா நகரத்தில் குசும ஸ்ரேஷ்டி – குசுமாம்பிகை தம்பதிக்குப் பிள்ளைகளாக பிறந்தனர்.

விருபாஷன் என்ற பெயருடன் நந்தியும், வாசவாம்பா என்ற பெயருடன் பார்வதியும் வளர்ந்தனர். வாசவாம்பா மணப்பருவம் அடைந்தாள். அந்த சமயத்தில் சித்திரகாந்தன் என்னும் அரசன் வாசவாம்பாவைக் கண்டு காதல் கொண்டான். அவளை மணம் செய்து தரும்படி, அவளது தந்தையான குசும ஸ்ரேஷ்டியிடம் கேட்டான். ஆனால், அவர் தன்னுடைய இன மக்களிடம் கேட்க வேண்டும் என்றார்.

பெனுகொண்டா ஆட்சிக்குட்பட்ட 18 நகரங்களில் வாழ்ந்து வந்த 714 கோத்திரங்களை சேர்ந்த வைஸ்சியர்களின் சபை இதுபற்றி விவாதித்தது. 612 கோத்திரத்தார் மணமுடிக்கலாம் என்றும், 102 கோத்திரத்தார் குலப்பெருமை காக்க இதற்கு சம்மதிக்க மாட்டோம் என்றும் கூறினர். கருத்து வேறுபாடு அதிகரிக்க, இரண்டு பிரிவாகப் பிரிந்தனர். இதையெல்லாம் அறிந்த வாசவாம்பா, குடும்பத்தார் சண்டை யிட்டு பிரிவதை நினைத்து வருந்தினாள்.

தன் உயிரைக் கொடுத்தாவது குலப் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள். அங்கிருந்த ஆலயம் முன்பு பெரிய அக்னி குண்டம் அமைத்து, அக்னிப் பிரவேசம் செய்தாள். வாசவி, ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியாக தோன்றி அங்கிருந்த அனைவருக்கும் அருள்காட்சி தந்து மறைந்தாள். அந்த வாசவி அன்னையின் ஜெயந்திதான் இன்று கொண்டாடப்படுகிறது.

சதாசிவ பிரம்மேந்திரரின் ஆராதனை
30.4.2023 – ஞாயிறு

மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரின்ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ஆம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.

சதாசிவ பிரமேந்திரர் முக்தி அடைந்த இடம் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர், கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில், காவிரி ஆற்றின் கரை அருகில் அக்கினீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. நெரூர் அக்கினீஸ்வரர் கோயிலுக்கு அருணகிரிநாதரே வந்து பதிகம் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அக்கினீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது.

30.04.2023 வரை சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உத்சவமும், ஸந்தர்ப்பனையும் நடந்து வரும். ஆராதனையன்று ஸ்ரீசுவாமிகளின் திருவுருவப் படம், அக்ரஹாரத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஜீவசமாதியை அடைந்து அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு அக்ரஹாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அக்ரஹாரத்தின் நடுவில் காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஓடுகிறது.

இருபுறமும் வரிசையாக வீடுகள் இருக்கின்றன. வாய்க்காலின் இரு கரைகளிலும், வீடுகளுக்கு முன்னால் இரு வரிசையாக இலை போடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து விட்டு வாய்க்காலில் மூழ்கி எழுவார்கள். சதாசிவ பிரம்மேந்திரரின் கீர்த்தனைகளை இசை வல்லுனர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள்.

ஆராதனை விழாவில் நடத்தப்படும் அன்னதானத்தின் போது, பக்தர்கள் சாப்பிடும் இலைகளில் ஏதேனுமொன்றில் யாருடைய உருவத்திலாவது ஸ்ரீசுவாமிகள் வந்து அமர்ந்து உணவு அருந்துவதாக ஒரு நம்பிக்கை. அது எந்த இலை என்பது தெரியாததால் பக்தர்கள் ஒட்டுமொத்தமாக எல்லா இலைகளிலும் உருண்டு அங்கப் பிரதட்சணம் செய்து ஸ்ரீசுவாமிகளின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறார்கள்.

இந்த அங்கப் பிரதட்சணம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி. சாப்பிடுபவர்கள் தவிர அங்கு இந்த கோலாகல நிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கானவர்கள் கூடியிருப்பார்கள். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் சபா, சத்குரு சதாசிவ பிரம்மேந்திர சேவ டிரஸ்ட் ஆகியவை கவனித்து வருகின்றன.

ஏகாதசி
1.5.2023 – திங்கள்

இந்த ஏகாதசி திங்கட்கிழமை, மகாலட்சுமிக்குரிய பூர நட்சத்திரத்தில் வருவது சிறப்பு. மோஹினி ஏகாதசி என்று பெயர். ஸ்ரீராமரே அனுஷ்டானம் செய்த ஏகாதசி. சீதையை பிரிந்த ராமரிடம் வசிஷ்டர், ‘‘ராமா! வருகின்ற வைகாசி மாதம், (சித்திரை அமாவாசைக்கு மறுநாள் சாந்திரமான முறையில் வைகாசி மாதம் துவங்குகிறது) வளர்பிறை ஏகாதசி விரதம் இருந்தால், உன்னுடைய எண்ணம் நிறைவேறும்.

பிரிந்த சீதை உன்னிடம் வந்து சேருவாள்’’ என்று கூற, சாட்சாத் விஷ்ணுவான ஸ்ரீராமபிரானே, முறையாக, வைகாசி ஏகாதசி விரதம் இருந்தார் என்ற சிறப்பு இந்த ஏகாதசிக்கு உண்டு. செய்த பாவங்களுக்கு வருந்தி இந்த ஏகாதசி விரதம் இருந்தால், பாவம் தீரும் என்பது ஏகாதசியின் தத்துவம். ஏகாதசி அன்று, பூரணமாக விரதமிருந்து, திருமாலை வணங்கி, திருமால் கோயிலுக்குச் சென்று, விளக்கு போட்டு, அர்ச்சனை செய்து, இரவு முழுக்க கண்விழித்து, புராண, இதிகாச, ஆழ்வார்களின் பிரபந்தங்களைப் பாடி, மறுநாள் காலையில் துவாதசி பாரணை முடிக்க, ஏகாதசியின் முழுப்பயனும் கிடைக்கும்.

புதன் ஜெயந்தி
1.5.2023 – திங்கள்

புத்தியைக் குறிப்பவர் புதன், அறிவு, வித்தை, கணிதம், ஜோதிடம், எண்கள், இளமை, அழகு, கம்ப்யூட்டர், மீடியா, செய்தித்தாள், பேச்சுத்திறன், பயந்த சுபாவம், நகைச்சுவை, போதனைகள் இவற்றையும் புதனே குறிப்பார். நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார்.

அந்த நபரிடம் ஆலோசனை கேட்க பலரும் காத்திருப்பார்கள். மருத்துவம், ஜோதிடம், இசை, ஆயகலைகள், கைகடிகாரம், மோட்டார் தொழில் நுட்ப அறிவு போன்றவற்றில் ஞானம் உடையவராக இருப்பார். நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்புகளுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதற்கும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார்.

புதனை வலுப்படுத்தவும், புதனால் ஏற்படும் தோஷங்களை நீக்கிக்கொள்ளவும், இன்றைய தினமான புதன் ஜெயந்தி தினத்தில் நவக்கிரகங்கள் உள்ள கோயிலில் புதனுக்கு பச்சை ஆடை உடுத்தி, ஐந்து தீபம் வைத்து, பச்சை மலர்களால் அர்ச்சனை செய்ய, புதன்தோஷம் விலகும். புதன் அதிதேவதையான திருமால் கோயிலுக்கும் சென்று, பச்சைநிறம் உள்ள துளசியை சாற்றி பெருமாளை வணங்கலாம்.

உமாபதி சிவாச்சாரியார் குருபூஜை
3.5.2023 – புதன்

உமாபதி சிவாச்சாரியார் சிதம்பரம் கோயிலில் பூஜை செய்யும் உரிமை கொண்ட தில்லை மூவாயிரவர்களுள் ஒருவர். 13-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். சிதம்பரத்துக்கு பக்கத்தே கொற்றவன்குடி என்ற பகுதியில் உமாபதி சிவாச்சாரியார் மடம் இருக்கிறது.

அங்கே குருபூஜை விழா (சித்திரை, ஹஸ்தம்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு முறை இவர் நடராஜரை தரிசித்து விட்டு, பல்லக்கில் விருதுகள் முழங்க, முன்னும் பின்னும் விளக்கு தீவட்டிகள் பிடித்தவர்கள் நடக்க, கம்பீரமாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது, அங்கே தன் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்த மறை ஞான சம்பந்தர் இவர் செல்வதைப் பார்த்து, ‘‘பட்ட கட்டையில் பகல் குருடன் போகிறான் பாருங்கள்’’ என்று பரிகாசம் செய்தார். இதைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியாருக்கு சுரீர் என்றது. அந்த வார்த்தையின் பொருளை தெரிந்துகொண்ட அவர், அப்போதே மறைஞான சம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

சைவத்தில் ஆழங்கால் பட்ட இவர், தீட்சிதர் அல்லாதவரான ஒருவரைத் தனது குருவாகக் கொண்டதால், தில்லை வாழ் அந்தணர்கள் இவரைத் தங்கள் சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்தனர். கோயிலில்பூஜை செய்யும் உரிமையையும் மறுத்தனர். இதனால், அவர் கவலைப்படவில்லை. எல்லாம் ஈசனின் செயல் என்று நினைத்தார். நடராஜர் கோயிலில் திருவிழா வந்தது. அவ்வருடம் கோயிலில் கொடியேற்றுவதற்கென முறை, உமாபதி சிவாச்சாரியார் முறை. ஆனால், உரிமை இன்னொரு அந்தணருக்கு வழங்கப்பட்டது. எனினும் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லையாம்.

அப்போது, சிவபிரானின் திருவருளால் உண்மை உணர்ந்த அந்தணர்கள், உமாபதியை வரவழைத்து, கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனர். அச்சமயம் உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடி, கொடியை ஏற்றி வைத்தார். இவ்வாறு கொடியேறப் பாடிய நான்கு பாடல்களும் `கொடிக்கவி’ என்ற பெயரில் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது.

சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறிவிளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. இவை தவிர, சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தைச் சுருக்கி திருத்தொண்டர் புராண சாரம் என்னும் பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றைச் சேக்கிழார் புராணம் என்னும் பெயரிலும் எழுதினார்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

You may also like

Leave a Comment

16 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi