சென்னை: கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தொடங்கி வைத்தார். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை, நேற்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தொடங்கி வைத்தார்கள்.
இப்பேருந்துகள் நவ.15ம் தேதிமுதல் ஜனவரி 16ம் தேதி வரை நாள்தோறும் இயக்கப்படும். மேலும், இந்த ஆண்டு நவ.15ம் தேதிமுதல் ஜனவரி 16ம் தேதி வரை வரை நாள்தோறும், இரவு 8 மணிக்கு மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக பம்பைக்கும், மாலை 5.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து கடலூர், நெய்வேலி டவுன்சிப், விருதாச்சாலம், பெண்ணாடம், திட்டக்குடி வழியாக பம்பைக்கும், இரவு 9 மணிக்கு திருச்சியிலிருந்து திண்டுக்கல், தேனி வழியாக பம்பைக்கும் அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் 29ம் தேதி வரை இச்சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது. மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் டிஎனெஸ்டிசி செயலி ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014426 மற்றும் 9445014421 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.