புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை முதல் வரும் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதில், 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் நாடாளுமன்றத்தின் பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அரசின் அலுவல்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முறைப்படி மாற்றப்படும் என தெரிகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை அரசு இன்று கூட்டி உள்ளது. இதில் பல்வேறு கட்சி எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர். அதே சமயம், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் அறிவிக்கப்படாத சில மசோதாக்களை திடீரென தாக்கல் செய்து நிறைவேற்றவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.