டெல்லி: செப்.18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான நாட்கள் முடங்கின. இதனால் பல முக்கிய விவாதங்களை நடத்த முடியாமல் போனது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளும் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெறும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து விவாதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.